புதன், 28 ஜூன், 2017

எந்த விதத்தில் உயர்ந்தவர்?

வாழும் மாந்தருக்கு
வரமாய் அமைந்த வார்த்தை
ஆக்கம் தந்து
அறிவை ஊக்குவித்தாலும்
ஆணவம் கொண்ட
அகங்கார சொல்

விலங்குகளின் பெருந்தன்மை
வாழும் மாந்தரிடம்
இல்லாதபோதும்
விலங்கிடமிருந்து மனிதனை
வேறுபடுத்தி
பெருமை சேர்க்கும் சொல்

கூட்டுக் குடும்பமாய்
காட்டில் திரியும் விலங்குகள்
வஞ்சித்து வாழாது,
வயிற்று பசிக்காக வேண்டி
வேட்டையாடும்—கூடி
சேர்ந்துண்ணும்

உலகில் எந்த மூலையில்
 வாழ்ந்தாலும் விலங்குகள்
அந்தந்த இனத்தின்
ஒரே மொழியைத்தான் பேசும்,
சான்றோரைப்போல
சாதி,மதபேதம் பார்க்காது

தன் வாழ்க்கை தரம் உயர
தனக்கென மனிதன் பெற்றதோ
அறிவு, சிந்தனை, மொழியென்றாலும்
வேற்றுமையை உருவாக்கி
ஒற்றுமையை சீர்குலைத்து
அழிவைத்தேடும் மனித இனம்

மானுடப்பண்பை இழந்து
மாந்தர் மிருகமாக மாறுவர்,
விலங்குகளோ நேர்மையாய்
வாழும் என்றும் விலங்குகளாய்,
ஆறறிவு பெற்ற மாந்தர்
எந்தவிதத்தில் உயர்ந்தவர்?செவ்வாய், 27 ஜூன், 2017

செத்தான்.ஊருசனம் கண்மூடி
உறங்கும் நடுசாமம்,
கரெண்ட்டும் இமைமூட
கைவரிசை காட்ட கூடிவந்த
கொலைகாரப் பாவிகள்

பதுங்கி, பதுங்கி வந்தவர்கள்
பசி போக்கவா—எசமான்
பணம் பார்க்கவா?
தொழுது வந்தாலும்
தெய்வம் துணை வருமா?

நின்றிருந்த என்னை
நிலைகுலைய செய்ய
ஆயுதம் ஏந்தி என்
அங்கங்கள் சிதைய
தலை வேறு, உடல் வேறாய்

வெட்டிக் கொலை செய்து
வெளியேறும் செங்குருதியோடு
மண்ணில் இழுத்து வந்து
மூடி புதைக்காமல்—கட்டியெடுத்து
கரையேற வந்தபோது

கூக்குரலிடுவதுபோல்
காவலர்களின் துப்பாக்கி
சரமாக ஒலியெழுப்ப
செம்மரத்திருடன்

சரிந்து விழுந்து செத்தான்

வியாழன், 22 ஜூன், 2017

வாழ்க்கை வசமாகும்
தூக்கி விடும்,
துணிவு தரும்—இல்லை
தூக்கி மிதித்து விடும்,
வேண்டாத எதிரிபோல்
வீட்டுக்குள் புகும்
வரம்பு மீறும்

பதற்றம் கொள்ளாமல்
பொறுமையுடன் சிந்தித்து
போராடத் துணிந்தால்
வெற்றி சிறகை விரிக்கும்
வளம் வானம் தொடும்

வாழ்க்கை வசமாகும்

திங்கள், 19 ஜூன், 2017

ஒரு சாட்சி தானே!துரியோதனின்
குருவான பலராமன்
பாரத யுத்தத்தில்
பங்குபெற மறுத்தது
ஒரு அத்துமீறல்

அர்ச்சுனனின்
குருவான சாத்யகி
கிருஷ்ணனுக்கு எதிராக
போர்புரிய விரும்பாதது
ஒரு அத்துமீறல்

தூது சென்ற
கிருஷ்ண பகவான்
கலகத்தை ஏற்படுத்தி
பகைவர்களை பிரித்தது
ஒரு அத்துமீறல்

அசுவத்தாமனை
எதிரியின் சேனாதிபதியாகாமல்
கிருஷ்ணன் தடுத்து
நிறுத்திய செயல்
ஒரு அத்துமீறல்

பாரத தேசத்தில்
பாரம்பரிய அத்துமீறல்கள்
பாதுகாக்கப்படுவது போல்
இன்றைய அரசியல் நிகழ்வுகளும்

அதற்கு ஒரு சாட்சி தானே!

காட்டிக் கொடுப்பாரா என்ன!காலில் கல்லைக் கட்டி
கடலில் குதிப்பதுபோல்
கேட்கும் இலட்சங்களை
கொட்டி தாரை வார்த்து
கற்பிக்கும் கல்வியால்
உயரம் தொட்டவன்
வசதியுள்ளவனின் வாரிசு

அதிக மதிப்பெண்கள்
ஆசையை உசுப்பிவிட்டு
மனதை கிறங்கவைப்பதால்,
மகுடத்தை அடகுவைத்து
பிள்ளையை படிக்க வைப்பான்
ஏற்றம் காண விழையும்
இல்லாத ஏழை

வாழவழிக் காட்டினாலும்
வேலை கிடைப்பதோ
மறுபிறவி எடுப்பதுபோல்,
மீண்டு எழும் ஏழைக்குக்
கூட்டுக்குடும்ப வாழ்க்கை
கண்களைக் கட்டும்
கைகொட்டி சிரிக்கும்

வரதட்சணையின்றி
வரண் தேடும் மங்கையர்க்கு
படிப்பும், பண்புமுள்ள நல்லவன்
ஒருவனைக் காட்ட
இறைவனால் முடியுமா?
கடவுள் படைத்த நம்மை

காட்டிக்கொடுப்பாரா என்ன!

செவ்வாய், 13 ஜூன், 2017

மீண்டும் திருடனானான்
திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து

மீண்டும் திருடனானான்

சனி, 10 ஜூன், 2017

சமத்துவம் காணுமிடம்சொர்க்கமா, நரகமா?
சொல்லத் தெரிவதில்லை
அதனால்தான் இங்கு
அநியாயங்கள் நிகழ்வதில்லை

கையூட்டு பெறாமல்
காரியங்கள் அனைத்தும்
நாட்டில் நாணயமா
நடந்தேறும் ஒரே இடம்

சஞ்சலம் ஏதுமின்றி
சலனமற்ற நிலையில்
ஏற்ற தாழ்வு இன்றி
அமைதி காணுமிடம்

பாவத்தைக் கலைய
பல்லக்கில் பவனி வந்து
இறைவனடி சேர
உருவத்தை தொலைக்குமிடம்

ஒரு மனித உடலின்
வரலாறு முடியுமிடம்
சாம்பலாகி
சமத்துவம் காணுமிடம்

ஆற்றல் அற்ற உடலை
ஆற்றில் விடுவதும் உண்டு
இல்லை
ஆற்றில் கரைப்பதும் உண்டு