வியாழன், 30 டிசம்பர், 2010

kavithai 20

அரங்கேற்றம்.

சலசலக்கும் அருவியின்
சங்கீத ஓசை,
சதிராடும் நீரின்
சாரல்கள்,
கதிரவனின் கரம்பட்டு
வ‌ண்ண‌ ஒளி கூட்டும்
நாட்டிய‌ மேடை,
தென்ற‌லின் துணையோடு
ஆடும் செடி கொடிக‌ள்,
கை த‌ட்டி ர‌சிக்கும்
ப‌ட்டாம் பூச்சிக‌ள்,
காட்டில் ஒரு
நாட்டிய‌ம்
அர‌ஙேற்ற‌ம்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

kavithai 19

உறைந்து போகும் மனம்.

தலை ந‌ரைத்த மலையின் உச்சியில்
நடுங்கி வாழ்ந்த போதும்,
அடர்ந்த காடுகளின் இருளில்
வாழும் விலங்குகளுக்கிடையில்
வசிக்க நேர்ந்தபோதும்,
பனி உருகி ஓடும் ஆற்றின்
கரையில் கூழாங்கற்களின் மேல்
அமர்ந்து குளித்த போதும்,
நில நடுக்கத்தில் உருண்டு வந்த‌
மலைப் பாறைகளை ஓடிக் கடந்ததும்,
ஆற்றின் மேல் தொங்கும்
பிரம்புப் பாலத்தைக் கடந்து
கரை சேர்ந்ததும்,
பெரிதாக எனக்குத் தோன்றவில்லை,
ஆனாலும் மனம்
உறைந்து தான் போகிறது
மனிதன் ம‌றைத்து வைத்து
எடுக்கும் வீச்சரிவாளால்.

திங்கள், 20 டிசம்பர், 2010

kavithai 18

பக்குவமில்லா மனம்.

குலவைப் போட்டு வந்த‌
கருத்த மேகக் கூட்டம்
கும்மிய‌டித்துக் கொட்டித்
தீர்த்த‌தும்,
காய்ந்து கிட‌ந்த‌ காட்டாற்றில்
பாய்ந்து வ‌ந்த‌ ம‌ழைநீர்
க‌ரை தாண்டிக் குதித்து
ஓடிய‌தும்,
ச‌ந்தைக்கு போன‌ பொண்ணு
ஒத்தையாய் வ‌ந்து நின்னு
அக்க‌ரை போக‌வேண்டி,அழுது
உத‌விகேட்ட‌தும்,
நெறி த‌வ‌றா குருவும்
அவ‌ளை தோளில் சுமந்து
அக்க‌ரை சேர்த்து உயிர்
காத்த‌தும்,
நினைவுக்கு வ‌ந்த‌ன‌ அத்த‌னையும்
ஆசிர‌ம‌ம் சென்ற‌டைந்த‌ சிஷ்ய‌னுக்கு.

சிஷ்ய‌ன் கேட்டான்:
"இள‌ம்பெண்ணைத் தொட்டு
தோளில் சும‌ந்த‌து
ந‌ம‌க்கு இழுக்க‌ல்ல‌வா!"

குரு சொன்னார்:
"நான் அந்த‌ பெண்ணை
ஆற்றின் க‌ரையிலேயே விட்டு விட்டேன்
நீ தான் இன்னும் அவ‌ளை
நெஞ்சில் சும‌ந்து கொண்டிருக்கிறாய்."

திங்கள், 6 டிசம்பர், 2010

kavithai 17

மழை வெள்ளம்.

வற்றாத கடல் சிற்றாறாய்
ஆனதொரு காட்சி உண்டா?
மூன்றில் இரண்டு நீருக்கென‌
தாரை வார்த்த பின்னும்
தரையை கையகப் படுத்தலாமோ!
கண் பட்ட இடமெல்லாம்
வெள்ளம் தொட்ட நீர் நிலை,
ஊரும் பயிரும் நீருக்குள்.
நட்ட பயிரும் மனித உயிரும்
நட்டப்பட்டது.
விளை நிலமெல்லம் வீடானதால்
எழுந்து வந்த வெள்ளம்
ஊருக்குள் ஒண்டிக்கொண்டது.
விரட்டப்பட்ட மக்களோ
கண்ணீருடன் தண்ணீரில்.
குடித்துவிட்டு தெருவில் கிடக்கும்
மனிதர்களைப்போல்
நீயும் குடித்து கிட‌ப்ப‌து முறையோ!
இந்திய‌ நாடாளும‌ன்ற‌ம்
முட‌க்க‌ப் ப‌டுவ‌துபோல்
க‌ல்விக்கூட‌ங்க‌ளை முட‌க்குகிறாயே
நீ எதிர‌ணியா? இல்லை நீதித் த‌வ‌றியதா?
இருக்கும் குடிசையை இடித்துவிட்டு
கான்கிரீட் வீடு க‌ட்டித்த‌ருவ‌தாய்
த‌மிழ‌க‌ அர‌சு சொன்ன‌தினால்
நீ இருந்த‌ குடிசைக‌ளை இடித்தழித்தாயோ!
இருண்ட‌ மேக‌ங்க‌ள்
பாரி வ‌ள்ள‌லாய் வாரிக்கொடுத்தாலும்
துய‌ர‌ங்க‌ள் தொட‌ர்வ‌தால்
அன்றாட‌ங்காய்ச்சிக‌ளின் ப‌ட்டினியால் thooral thaan kaanum

வியாழன், 25 நவம்பர், 2010

kavithai 16

பூமியில் பூகம்பம்

ஆட்டம் எதற்கு உனக்கு?
நில‌ம‌க‌ளே..நீ
குல‌ம‌க‌ளா இல்லை விலைம‌க‌ளா?
குலுக்க‌லாட்ட‌ம் உன‌க்குமா?
ஆட்ட‌த்தின் ஆர‌ம்ப‌ம்
அர‌ங்க‌த்திலா..நீரின்
அந்த‌ர‌ங்கத்திலா?

காணுமிட‌மெல்லாம்
காற்றும் ம‌ழையும்
சுழ‌ன்றடித்து
புவியை புர‌ட்டி எடுத்தது
உன் ஆட்ட‌த்திற்கு
தொலைக்காட்சி விள‌ம்ப‌ர‌மோ?

மானுட‌ம் கோள்க‌ளை
வ‌ண‌ங்கிய‌துண்டு
மானுட‌த்தை கோள்க‌ள்
ம‌தித்த‌துண்டா?

அரிசி கொடுத்து
ப‌சியை போக்கிய‌வ‌ள் நீ,
உன் பெரும்ப‌சிக்கு
ம‌ண்ணையே வாய்க்க‌ரிசியாக்கி
ம‌னித‌ர்க‌ளை புதைத்து
விழுங்கிய‌து
என்ன‌ நிய‌தி?
(காஷ்மீர் பூக‌ம்ப‌த்தில் ம‌க்க‌ள் மாண்ட‌போது)

ஞாயிறு, 21 நவம்பர், 2010

kavithai 15

தாமரையும் காத்திருக்கு.

நீருக்குள் நீ இருந்தால்
ஊருக்குத் தெரியாதென்று
உன் முகத்தை வெளியில் காட்டி
ஊர் முகத்தை உன்னில் ஈர்க்கும்
தாமரைப் பூவே!

உன் அழகு முகத்தை
பவழத்தால் அலங்கரித்து
இதழ்களுக்கு இளஞ்சிவப்பில்
வ‌ண்ண‌ம் தீட்டி
வெண்முத்துக்க‌ள் உன் கையில்
உருண்டு விளையாட
வெள்ளிக் கொலுசுகளோ
உன் காலைச்சுற்றி வந்து விளையாட‌

மாந்தரைப்போல் மணம் காண‌
பருவ மங்கையாய் பூத்து
ஒற்றைக்காலில் நின்று
தவம் புரியும்
தாமரையும் காத்திருக்கு.

வியாழன், 18 நவம்பர், 2010

kavithai 14

நிலமகளும் நிலாமகளும்.

அந்தி மயங்கும் நேரம்
ஆதவன் முத்தமிட்டான்
மண்மகளை.
மேற்றிசை வானமே
நாணிச் சிவ‌ந்த‌து.
ம‌ய‌ங்கினாள் நில‌ம‌க‌ள்
ம‌ஞ்ச‌த்தில் த‌ஞ்ச‌மானாள்.

விண்ணில் காணும்
வெண்ணிலாவோ
வெகுண்டெழுந்து
வீதிக்கு வ‌ந்துவிட்டாள்
த‌னியொருத்தியாக‌.
கோப‌ம் கொண்டு
பொற‌ந்த‌ வீடு போவ‌து
அங்கேயுமா?

ஆத‌வ‌னும் நிலாவும்
எதிரும் புதிருமாய்
எப்ப‌வும் இருப்ப‌து
இப்ப‌தான் புரியிது.
வ‌ழிகாட்டிய‌து நீங்க‌ள்
வழிப‌டுவ‌து எங்க‌ள்
குல‌ப்பெண்க‌ள்.

kavithai 13

மண் பாண்டம்.

மல்லிகைப் பூப்போல‌
வெள்ளையாய் பூத்து சிரிக்கும்
பொன்னி அரிசியின்
மண் பானைச்சோறும்

ஆரவாரமில்லா ஆற்றின் கரையில்
ஆர்ப்பரித்துத் திரியும் அயிரமீனின்
கை பக்குவத்தில் கொதிக்கும்
ம‌ண்ச‌ட்டிக் குழ‌ம்பும்

ஊரெல்லாம் ம‌ன‌ம் ப‌ர‌ப்பும்
நாவெல்லாம் ருசி நாடும்.
ஆகார‌த்திற்கு ஆதார‌மான‌தால்
மாந்த‌ர்க்கு ம‌ண்பாண்ட‌ம் உற‌வான‌து.

கால‌ ஓட்ட‌த்தில் ம‌ண்பாண்ட‌ம்
காணாம‌ல் போனாலும்...ம‌னித‌ன்
கால‌ங்கால‌மாய் காட்டிய‌ ப‌ரிவுக்கு
ந‌ன்றிக் க‌ட‌னாய்

ம‌ர‌ண‌முற்ற‌ மாந்த‌ர்க்குக்
கொள்ளி போட‌
ம‌ண்பானை இன்னும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிற‌து.

kavithai 12

நகரம்

நகரம்
நரகம்
எழுத்துக்கள்
இடம் பெயர்ந்தாலும்
இரண்டும் ஒரே ர‌க‌ம்.
கூட்ட‌மும்..ம‌ன‌
வாட்ட‌மும்
இர‌ண்டிலும்
ஏராள‌ம்.
ப‌டைத்த‌வ‌ர்க‌ள்
இட‌மாறினால்,
பாவ‌ம்
இறைவ‌ன்
ந‌க‌ர‌த்தை
நாட‌மாட்டான்
ந‌ர‌க‌த்தையே
ந‌ல்ல‌து என்பான்.

kavithai 11

மகிழ்ச்சி தரும் நீர் வீழ்ச்சி.

பெண்ணின் விழி வீச்சில்
இளைஞனுக்கு வீழ்ச்சி வரும்,
அர‌சிய‌லில் இட‌ப்பெயர்ச்சி
கூட்ட‌ணிக்கு வீழ்ச்சி த‌ரும்,
தீவிர‌வாத‌ வெறியுண‌ர்ச்சி
நாட்டையே அழிச்சி விடும்.
யார் வீழ்ச்சியும் இக‌ழ்ச்சி த‌ரும்,
நீர் வீழ்ச்சியே!
உன் வீழ்ச்சியில் தான்
எல்லோர் இத‌யுமும்
ம‌கிழ்ச்சி பெறும்.

kavithai 10

கைம் பெண்

முல்லைப்பூவின்
வெள்ளை நிற‌ம்
முடி சூடாம‌ல்
இற‌ங்கி
அவ‌ளின் மேனியை
முத்த‌மிட்ட‌து.
ம‌ர‌ண‌ம்
மாலையிட்ட‌வ‌னுக்கு
மாலையிட்ட‌தால்..

வியாழன், 11 நவம்பர், 2010

kavithai 9

எங்க ஊரு.

சிவாலய ஊர்கள் சுற்றி இருக்க‌
வைணவப் பெருமாள் இராஜ கோபாலன்
வீற்றிருக்கும் இராஜ மன்னார்குடி.
என்றும் பதினாறாய் இன்றும் காட்சி தரும்
புண்ணிய பூமி.
வளர்ச்சி இருந்தாலல்லவா முதிர்ச்சி காண.
வற்றாத காவிரி வழிமாறி போனதால்
வளத்தைத் தொலைத்து
சிவனே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

வட்டம் என்று வயதுக்கு வந்தே
ஆண்டு நூறைத் தாண்டினாலும்
மாவ‌ட்ட‌ம் காணாத‌ முதிர்க‌ன்னி.
இளைய‌வ‌ள் ஆருரிட‌ம் இதய‌த்தை ப‌றிகொடுத்து
மாவ‌ட்ட‌மாக்கி மண‌முடித்து ம‌கிழ்வுற்றார்,
க‌ருணையுள்ள நிதிய‌ர‌ச‌ர்..இருந்தும்
ம‌ண‌ம் காணாம‌ல் ம‌ன‌ம் கோணாம‌ல்
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

ஊரைச்சுற்றி இறைவ‌னின் ஆல‌ய‌ங்க‌ள்
ஊரையே வ‌ல‌ம் வ‌ரும் பாமினி ஆறு
ஊருக்குள்ளேயே உழ‌வ‌ர் சந்தை
ச‌ந்தைக்கு ப‌க்க‌த்தில் பேருந்து நிலைய‌ம்
ஊரெங்கும் ஊருணிக‌ள் ப‌ல‌ இருந்தும்
க‌ழிவுக‌ளைக் கொட்டி க‌ய‌ல் வ‌ள‌ர்க்க‌க்
க‌றையான‌து க‌ரையெல்லாம்.
அக்க‌றையின்றி குடிநீருக்கு
நில‌த்த‌டி நீரை நம்பி வாழும்
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

ப‌ட‌ரும் கொடிக்கு தேர்த‌ந்து பேர்பெற்ற‌
பாரி வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ ஊர் ம‌க்க‌ள்
கொடுக்கும் வ‌ல‌துகை அறியா இட‌துகை
இருக்கும் இத‌ய‌ங்க‌ள் வாழும் ம‌ன்னார்குடி.
இழ‌ந்த‌ இர‌யில் சேவையை ம‌ற‌ந்து
இருந்த‌ இர‌யில் பாதையை..வ‌சிக்க‌
ப‌ழ‌னி முருக‌னின் உற‌வின‌ர்க்குக் கொடுத்து
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

kavithai 8

நீ ஒரு அவதாரம்.

உன்னைக்
கைப்பிடிக்கவில்லை
அடித்தாலும்
உதைத்தாலும்
என்னை விட்டுப் பிரிந்ததில்லை.
விவாகம்
காணாத போது
விவாகரத்து
உனக்கெதற்கு?
அறுந்தாலும்
பிரியாதது உன் உறவு.
இருந்தாலும்.. நீ
படிதாண்டியதில்லை.
கால‌ணியே!
தார‌மல்ல‌ என‌க்கு
நீ ஒரு அவ‌தார‌ம்.

kavithai 7

தீயே உனக்கு தீ இல்லையா?

கொழுந்து விட்டு எரிந்தத்தீயே
கொழுந்துகளை விட்டு விட்டு எரிந்தாலென்ன?
தென்னங்கீற்றுகளே தொன்மையின் சின்னங்களே
சின்னஞ்சிறுசுகளின் சன்ன ஒலி கேட்கலையா?
சரிந்து விழுந்தீகளே
அர‌வ‌ணைக்க‌வா இல்லை அள்ளிக்கொல்ல‌வா?

பொத்தி வ‌ள‌ர்த்த‌ பால‌க‌னே
புரியாத‌ ப‌ருவ‌ம் உன‌க்கு அறியாத‌ வ‌ய‌து
புகை பிடித்தால் இற‌ந்து போவாய்
புரிய‌வைக்க‌ ஆசிரிய‌ர் இல்லை
ஆசானான‌து நெருப்பு
பாட‌மாகிப் போனாய் ம‌க்க‌ளுக்கு.

ஊரு ச‌ன‌ம் உற‌ங்க‌லையே ஓல‌ ச‌த்த‌ம் நிக்க‌லையே
ம‌ன‌ம் கேட்க‌லையே என் சின‌ம் ஆற‌லையே
தீக்கு அறிவு என்ற‌ பொருளில்லையா
தீயே உன‌க்கு தீயில்லையா?
அன்று கோவ‌ல‌ன் இற‌க்க‌ ம‌துரை எரிந்த‌து
இன்று கும்ப‌கோண‌ம் எரிய‌ குழ‌ந்தைக‌ள் இற‌ந்த‌ன‌ர்
இர‌ண்டிலுமே இற‌ந்த‌வ‌ர்க‌ள் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள்.

குழ‌ந்தைத் தெய்வ‌ங்க‌ளுக்கு நினைவாஞ்ச‌லி
பெற்றோர் உற்றாரின் க‌ண்ணீர‌ஞ்ச‌லி
மற்றோரின் ம‌ல‌ர‌ஞ்ச‌லி
வ‌ஞ்ச‌க‌த்தீயும் க‌ண்ணீர் விட்ட‌து
மெழுகுவ‌ர்த்தியின் மேல் இருந்துகொண்டு.

(கும்ப‌கோண‌த்தில் நிக‌ழ்ந்த‌ ப‌ள்ளி தீவிப‌த்தின் நினைவாக‌.)

புதன், 10 நவம்பர், 2010

kavithai 6

இதயம்

ஒட்டிப்பிறந்த‌
இரட்டைக் குழந்தைக்கு
ஒரே இதயம்.
பத்திரிக்கை செய்தி.
பெற்றவளே
வீசி எறிந்தாள்
வீதியிலே.
அவ‌ளுக்கு
அதுவுமில்லை.

kavithai 5

நிலாவில் மீன்.

நிலாவில் மீன்
நிசந்தான்.
ஆடிப்போன‌து நிலா
அசைந்து விட்ட‌
குள‌த்து நீரில்.

kavithai 4

ஊடலா இல்லை கூடலா?

நடை பயின்று நடந்து வந்து
நான் பார்க்க விழுந்த்வளே!
உன் பெயரென்ன?
குற்றால அருவியோ!

நீ விழும் வேகத்தில்
உனக்கொன்றும் ஆகாமல்
தலை கொடுத்துத் தாங்கும்
தர்மவான்கள் யார்?
உன்னை அறிந்த மனிதர்களோ!

தாங்கிப் பிடித்ததினால்
ஆண் பெண் என‌ பாராம‌ல்
அனைவ‌ரையும் அர‌வ‌ணைக்கும்
க‌ருணைக்கு பேரென்ன‌?
ந‌ன்றிக்க‌ட‌னோ!

இடையில் இருக்கும் ஆடையை
இழுத்துமே நீ அணைத்தாலும்
விழாது பிடித்து...ம‌ன‌ம்
ம‌கிழ்ச்சியில் ம‌ய‌ங்கும்
நிலைக்கு பேரென்ன‌?
ஊட‌லா இல்லை கூட‌லா!

kavithai 3

தாயே நீயுமா?

கடல் தாயே
குதித்தாயே
குதித்து
எழுந்தாயே
எழுந்து
புகுந்தாயே
புகுந்து
அழித்தாயே
உயிரை
பிரித்தாயே
கதற‌
வைத்தாயே
தாயே நீயுமா?

செவ்வாய், 9 நவம்பர், 2010

kavithai 2

வெளிச்சம் இன்னும் சேரலையே.

ஊருக்கு ஓரத்திலே
ஒத்தையாய் நிக்குதடி
ஒசந்து நிக்கும் ஆலமரம்.
ஆலமரக்கிளைகளிலே
வானத்து விண்மீன்கள்
வந்திறங்கி வந்தது போல்
காட்சி தந்து கண் சிமிட்டும்
ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள்
ஒளிகூட்டி நின்றாலும்,
என் அத்தானைக் காணலையே
இந்த அத்தமக நெஞ்சினிலே
வெளிச்சம் இன்னும் சேரலையே.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கவிதைகள் 1

மறையாதே முழுமதியே


முகத்தை மூடாதே
முழுமதியே - உன்
முல்லைச்சிரிப்பை
முகிலிடம்
தொலைத்தாயோ
ஏன் இந்த வெட்கம்?
அரங்குக்குள்ளே
அரங்கேறாத
அந்தரங்கம்
பகிரங்கமானதாலா?