சனி, 24 செப்டம்பர், 2011

பெண்ணினம்.

வாழும் உலகை
இறைவன் படைத்தான்..அதில்
ஆண் பெண்ணென‌
இரு இனத்தை வைத்தான்
அன்பு என்ற வார்த்தைக்கு
பெண் என்று சொல்லி
வைத்தான்
கண் இமை போல்
காக்கும் அன்னையை
பெண்ணினத்தில் வைத்து
பெருமை சேர்த்தான்.

உருவாகும் கருவில்
ஆண்கருவை அதிகம் வைத்து
அதில் கொஞ்சம்
அழித்து வைத்தான்.
பெண்கருவை குறைத்து வைத்து
அனைத்தையும் அழியாமல்
பிறக்க விட்டான்.

பச்சிளம் பருவத்தில்
பிறவி ஊனத்தையும்
தொற்று நோயையும்
ஆணுக்குத் தந்த இறைவன்
பெண்ணைக் காத்து நின்றான்.
ஆணைவிட ஆண்டு எட்டு
அதிகம் வாழ பெண்ணுக்கு தான்
இறைவன் வரம் தந்தான்.

குழ‌ந்தை குட்டியென்று
நாளும் போராடும் பெண்க‌ளுக்கு
மார‌டைப்பு என்னும் பேரிழ‌ப்பும்
ஆணைவிட‌க் குறைவுதான்.
ஆயிர‌ம் காரணம்
அடுக்கிக்கொண்டே போனாலும்
ஆனணைவிட அனைத்திலுமே
அதிக வலிமை பெற்றது
என்றும் பெண்ணினம் தான்.

மாறி வரும் காலத்தால்
கண்டி கதிர்காம முருகப்பெருமானே
காசோலையை ஏற்கும்போது
மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு
இடம் தராததற்கு
இறைவனின் பாராமுகமா?..இல்லை
வலிமை குன்றிய ஆணினமா?

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இலவசங்கள்.

அடைகாக்கும் தாய்மைக்காக‌
குயிலின் முட்டைக்குக்
கையேந்துவதில்லை காகம்
பிறந்த குஞ்சுகளிடம்
பேதம் காட்டாத காக்கை
கூவத்தொடங்கியதும்
கொத்தி விரட்டுதல்போல்
இலவசம் ஒருநாள்
இன்னலைத் தரும்.

உண்ணாவிரதம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்
சுதந்திரம் பெற்றும்
இன்றும் உண்ணாவிரதம் தான்.
எறும்பைப் போல்
வரிசை பிடித்து
எறும்போடு மனிதனும்
இலவச அரிசியுடன்
வெளி வரும் காட்சி.

நூறு நாட்கள் வேலை
நோகாமல் நித்தம் வரும் பணம்
கள்ளுக்கடை வாசலில்
அடிக்கும் சரக்கால்
கரையும் காசு
மண்ணில் விழுந்துகிடக்கும்
மனிதனுக்கு தெரியுமோ?
அறிய உழைப்பு
அறியாமலே புதைந்து போவதை.

இலவசங்கள்
உழைப்புடன் உறவாடியிருந்தால்
வீடும் நலம் பெறும்
நாடும் மேன்மையுறும்.
இல்லையேல்
உண‌வுப் ப‌ஞ்ச‌ம் இல‌வ‌ச‌ம்
விளை நில‌ங்க‌ள் வீடாவ‌தால்.
ப‌சி ப‌ட்டினி இல‌வ‌ச‌ம்
வேலை செய்ய‌ம‌ற‌ப்ப‌தால்.

மதங்கள் எதற்கு?

பந்தங்களைத் துறந்த‌
முனிவன் போல்
மானுடத்தை மறந்து
மௌனித்து நிற்கின்றன‌
மதங்கள்.

மானுடம் நெறிபட‌
மதங்கள் தோன்றி
ஆண்டுகள் நாலாயிரம்
கடந்து முடிந்த பின்னும்
ப‌சி ப‌ட்டினி
ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வென‌
ம‌லிந்த‌பூமியாய்
மாறிப் போன‌தேன்?

சபிக்கப்பட்ட மக்கள்
சாவைத் தள்ளிபோட
கையேந்தும் போதும்
உன்னை மறப்பதில்லை.
இருந்தும் ம்ண்ணில்
இர‌க்க‌ம்,க‌னிவு
ம‌னித‌நேய‌ம்
காணாம‌ல் போன‌தேன்?

த‌ண்ட‌ல் எடுத்த‌வ‌னெல்லாம்
சுர‌ண்டி ப‌துக்குகிறான்
ஊழ‌லைக் கையிலெடுத்து
பிற‌ர் உழைப்பில்
உயிர் வாழும் ம‌னித‌ர்க‌ளின்
நேர்மையும்
க‌ண்ணிய‌மும்
தொலைய‌விட்டதேன்?

சொந்த‌ம‌த‌மென்றாலும்
எந்த‌ம‌த‌ம் உய‌ர்ந்த‌ம‌த‌ம்
சொல்லுமா தெய்வ‌ங்க‌ள்?
ஏனிந்த‌முர‌ண்பாடு
இந்த‌ம‌ண்ணில்.
ம‌த‌ங்க‌ள் வ‌ழிகாட்ட‌வில்லையா?..இல்லை
மானுட‌ம் க‌ற்றுக்கொள்ள‌வில்லையா?
பின் ம‌தங்க‌ள் எத‌ற்கு?
மானுட‌ம் திருந்தாத‌போது.

தெய்வம் நின்று கொல்லும்

ஊர் எல்லையில்
நின்று
காவல் காக்கும்
சாமிக்கு
படையிலிட்டு
வீட்டு விலங்குகளை
வெட்டிக்
காவு கொடுத்து
வழிபடும்
மனிதனைக்
கரையேறி
எழுந்து வ‌ந்து
க‌ட‌ல‌லைக‌ள்
காணிக்கையாய்
அள்ளி எடுத்து
ப‌லி கொடுக்கும்
த‌ன் ஆதி ப‌க‌வ‌னுக்கு.

உற‌வுக‌ளை
தாரை வார்த்து
க‌ண்ணீர் ம‌ல்க‌
புல‌ம்பி அழும்போதும்
நினைவுக்கு
வ‌ருவ‌தில்லை
தெய்வ‌ம் நின்று
கொல்லுமென்று

திங்கள், 25 ஜூலை, 2011

மனிதனுக்கு அறிவில்லையே!

ஆண்டவன் படைத்த‌
மனித உயிரைக்
கொன்று குவித்து
நரபலி கொடுக்க‌
தீவிரவாதம் என்ன‌
ஒரு வேண்டுதலா?

மானுடம் சிறக்க‌
மதங்கள் போதித்தும்
நீயோ
மனிதனை அழித்து
மதத்தினை புதைப்பது
நேர்த்திக் கடனோ!

உன் மூளை
சலவையில்
உன்னை பாவியாக்கியவனின்
அழுக்கு மனதை
அறியாததேனோ!

சிதறிய உடலின்
சிந்திய இரத்தம்
மண்ணுக்கு
செந்நீர் பாய்ச்சி
எதனை பயிராக்க?
பண‌த்தையா இல்லை
ப‌த‌வியையா?

கொடிய‌ மிருக‌ங்க‌ள் கூட‌
பாவ‌ப்ப‌ட்ட‌ இள‌ங்க‌ன்றுக‌ளை
க‌ருணைக்காட்டி
கொல்லாத‌போது
ம‌னித‌னுக்கு அறிவில்லையே!

கடலைச்செடி

பருவ‌
மங்கை போல்
பூத்துக்
குலுங்குகிறாய்
பூமியின்
மேல்.
வஞ்சக‌
வணிகனைப் போல்
காய்த்துப்
பதுக்குகிறாய்
பூமிக்குக்
கீழ்.
உனக்கும்
கொழுப்பு அதிகம்
மனிதனைப் போல்.

சனி, 26 மார்ச், 2011

kavithai 24

ஆழ் கடலே ஆறு.

உச்சி வெளுத்தும் உருகி வ‌ந்து
காத்தவளும் நீதானே!

முக்காடிட்டு அழுது புல‌ம்பி
க‌ண்ணீர் விட்டு காத்து
அர‌வ‌ணைத்த‌வ‌ளும் நீதானே!

ம‌லையில் குதித்து விளையாடி
வெள்ளி மாலையென‌ காட்சித‌ந்து
ம‌கிழ‌வைத்த‌வ‌ளும் நீதானே!

வ‌ளைந்து நெலிந்து ந‌ட‌ந்து வ‌ந்து
அன்னையாய் மாந்த‌ரை அணைத்து
அமுது ப‌டைத்த‌வ‌ளும் நீதானே!

அலையென‌ அசைந்து ஆடிவ‌ந்து
தொட்டுதொட்டு ஓடி ம‌றைந்து
க‌ண்ணாமூச்சி காட்டி சிரித்து
ம‌கிழ்ந்த‌வ‌ளும் நீதானே!

பின் ஏனிந்த‌ க‌டுங்கோப‌ம்?
வெகுண்டெழுந்து ஊர் புகுந்து
ஆயிர‌மாயிர‌ம் உயிர்க‌ளை வாரி எடுத்து
அள்ளி புதைத்து அழித்த‌வ‌ளும் நீதானே!

கொண்ட‌வ‌ன் மாண்டானா?‍‍‍‍‍‍‍‍‍‍‍..இல்லை
குடித்து வ‌ந்து அடித்தானா?
நீ என்ன‌ க‌ண்ண‌கியோ?..இல்லை
சுனாமி கொடுத்து கொல்ல‌
எடுத்த‌ உயிர்க‌ள‌னைத்தும்
என்ன‌ பெண் சிசுக்க‌ளோ?
நெஞ்சு ப‌தைக்குத‌ம்மா!

க‌ண‌ப‌தி
337

செவ்வாய், 15 மார்ச், 2011

kavithai 25

படிப்பு.


வசிப்பது
சுவாசிக்கப்படாதபோது
வாசிப்பது
உயிர் வாழாது.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

kavithai 23

மரணம்.

கைபிடித்த மனைவி போல்
கூடவே வந்த‌ பதவி
அறுப‌தில் பிரிந்த‌போது
க‌டைசி வரை கூடவர‌
முதுமை துணை நின்றதை
மறப்பேனோ!

மண்ணின் காட்சிகள்
விழித்திரையில்
மறையத் தொடங்கியதும்
ம‌ன‌சின் பார்வை
மாய‌வ‌னை நாடிய‌தை
ம‌ற‌ப்பேனோ!

முதுகு வ‌லியென‌
முத‌ல்வ‌லி கொடுத்து
அடுத்த‌டுத்து
நெஞ்சுவ‌லி,வ‌யிற்றுவ‌லி
எனும் தொட‌ர்வ‌லியில்
என்னைத் துவைத் தெடுத்த‌தை
ம‌ற‌ப்பேனோ!

பேத‌ங்க‌ள் இல்லாம‌ல்
பொதுவாய் நீ இருந்தும்
வ‌தைப‌ட்ட‌ நிலையில் நானிருந்தும்
த‌னி ம‌ர‌மான‌ என்னை
உற‌வாட‌ வ‌ந்த‌ உன்னை
ம‌ற‌ப்பேனோ!

பக்குவமானது மனம்
ம‌னித‌னை ம‌ர‌ண‌ம் வெல்லும்
வாழ்க்கையை நேசிக்க‌
வ‌ழியில்லாத‌ போது
ம‌ர‌ண‌ நேசிப்பும் ம‌ரியாதை பெறும்
சிவ‌லோக‌ப் ப‌த‌விக்காக‌.

வியாழன், 27 ஜனவரி, 2011

kavithai 22

இல்லாள்.

நீலாம்பிகையே
நினைவில் நிற்பவளே
நீ பாடிய நீலாம்பரி இராகத்தில்
நீயேயல்லவா நிரந்தரமாய்
நித்திரை கொண்டாய்.
நான‌ல்ல‌வோ
நாளும் உனை நினைத்து
நெஞ்ச‌ம் ஏங்க‌
முகாரி இராக‌த்தை
ம‌ன‌த்தில் இசைத்து
ம‌ய‌ங்குகிறேன்
ம‌ன‌ம் க‌ல‌ங்குகிறேன்.
புல் நுனிப்ப‌னிபோல்
விழுவ‌துபோல் விழாதிருக்கும்
விழியோர‌க் க‌ண்ணீர்துளிக‌ள்
வ‌ரும் வ‌ழி அறிந்திருந்தும்
வ‌ழி த‌வ‌றி நிக்குத‌டி.
உன் நீங்கா நினைவுக‌ளில்
நெஞ்ச‌ம் க‌ரைந்துமே உருகுத‌டி.
நாளும் இமை ஓர‌ம்
ஈர‌ம் காணுத‌டி.
உற‌ங்காத‌போது உன் நினைவு
உற‌ங்கும்போது விழித்திருக்கும் என் க‌ன‌வு.
புற‌ங்காடு போனாலும்
இற‌ங்காது உன் ஏக்க‌ம்.
பாதி கொடுத்த‌வ‌ன் ஈச‌னென்றால்
முழுதும் கொடுத்த‌ நான்
பெரும் பித்த‌ன‌ல்லோ!

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

kavithai 21

உடையாத கருத்தும் உடைந்த வரிகளும்.

அந்தி சாயும் நேரம்
வானம் முந்தி விரிக்க‌
வாரித் தெளித்தாற்போல்
வண்ணக் காட்சிகள்,
காட்சிக‌ளில் ம‌ய‌ங்கும்
ம‌ன‌ம், வான‌ம்பாடியாய்
சிற‌கு விரித்து வானில்
வ‌ட்ட‌மிட்டு
வ‌ந்த‌டையும் நெஞ்சுக்குள்,
கூண்டுக் கிளிபோல‌
பொறுக்கி யெடுக்கும்
வார்த்தைக‌ள்
வார்த்தைக‌ளின் கூட‌ல்க‌ளில்
வ‌ந்து விழும் வ‌ரிகள்,
பிச்சை யெடுக்கும்
ப‌ச்சிளங் குழ‌ந்தைக‌ள்
முட‌மாக்க‌ப்ப‌டுவ‌து போல்
சிறுசும் பெரிசுமாய்
உடையும் வ‌ரிக‌ள்,
உடைந்த‌ வ‌ரிக‌ள்
உடையாத‌ க‌ருத்தோடு
உற‌வாட‌
புது வாழ்க்கைத் தொட‌ங்கும்
புதுக் க‌விதையாய்.