வியாழன், 27 ஜனவரி, 2011

kavithai 22

இல்லாள்.

நீலாம்பிகையே
நினைவில் நிற்பவளே
நீ பாடிய நீலாம்பரி இராகத்தில்
நீயேயல்லவா நிரந்தரமாய்
நித்திரை கொண்டாய்.
நான‌ல்ல‌வோ
நாளும் உனை நினைத்து
நெஞ்ச‌ம் ஏங்க‌
முகாரி இராக‌த்தை
ம‌ன‌த்தில் இசைத்து
ம‌ய‌ங்குகிறேன்
ம‌ன‌ம் க‌ல‌ங்குகிறேன்.
புல் நுனிப்ப‌னிபோல்
விழுவ‌துபோல் விழாதிருக்கும்
விழியோர‌க் க‌ண்ணீர்துளிக‌ள்
வ‌ரும் வ‌ழி அறிந்திருந்தும்
வ‌ழி த‌வ‌றி நிக்குத‌டி.
உன் நீங்கா நினைவுக‌ளில்
நெஞ்ச‌ம் க‌ரைந்துமே உருகுத‌டி.
நாளும் இமை ஓர‌ம்
ஈர‌ம் காணுத‌டி.
உற‌ங்காத‌போது உன் நினைவு
உற‌ங்கும்போது விழித்திருக்கும் என் க‌ன‌வு.
புற‌ங்காடு போனாலும்
இற‌ங்காது உன் ஏக்க‌ம்.
பாதி கொடுத்த‌வ‌ன் ஈச‌னென்றால்
முழுதும் கொடுத்த‌ நான்
பெரும் பித்த‌ன‌ல்லோ!

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

kavithai 21

உடையாத கருத்தும் உடைந்த வரிகளும்.

அந்தி சாயும் நேரம்
வானம் முந்தி விரிக்க‌
வாரித் தெளித்தாற்போல்
வண்ணக் காட்சிகள்,
காட்சிக‌ளில் ம‌ய‌ங்கும்
ம‌ன‌ம், வான‌ம்பாடியாய்
சிற‌கு விரித்து வானில்
வ‌ட்ட‌மிட்டு
வ‌ந்த‌டையும் நெஞ்சுக்குள்,
கூண்டுக் கிளிபோல‌
பொறுக்கி யெடுக்கும்
வார்த்தைக‌ள்
வார்த்தைக‌ளின் கூட‌ல்க‌ளில்
வ‌ந்து விழும் வ‌ரிகள்,
பிச்சை யெடுக்கும்
ப‌ச்சிளங் குழ‌ந்தைக‌ள்
முட‌மாக்க‌ப்ப‌டுவ‌து போல்
சிறுசும் பெரிசுமாய்
உடையும் வ‌ரிக‌ள்,
உடைந்த‌ வ‌ரிக‌ள்
உடையாத‌ க‌ருத்தோடு
உற‌வாட‌
புது வாழ்க்கைத் தொட‌ங்கும்
புதுக் க‌விதையாய்.