திங்கள், 2 ஜனவரி, 2012

கண்ணீர்க் காவியம்.

ஈரவிழிக் காவியங்கள்
தமிழ் மண்ணில் ஏராளம்
தாகம் தணிக்கத்தான்
தண்ணீரில்லை இங்கு,
இலவசங்கள் வந்ததால்
கறையானோம் அக்கரையின்றி.

காவிரிக்குக் காத்திருந்து
காலம் சீராய் ஓடிடுச்சு
கடல்நீரும் குடிநீராய்
மாறுமென சொல்லியாச்சு
முல்லையாறும் இனி
ந‌ம்மை எள்ளி நகையாடிடுமோ!

கதிரவன் எழுமுன்னே
வந்து அமரும் பாத்திரங்கள்
அசையாமல் தவமிருக்கும்
குழாய்த் தண்ணீர் வருகைக்கு,
வரிசை குடங்களுடன் வாரிசுகள்
முந்தும்போது முரண்பட்டு
தெறிக்கும் வார்த்தைகள்

குழாயில் காற்றுவ‌ந்து
க‌ண்ணாமூச்சி விளையாடும்
விளையாடும் காற்றில்
த‌ண்ணீரும் முக‌ம் காட்டும்
நேர‌ம் ஓடி க‌ரையும்
ம‌ன‌க்க‌வ‌லை கூடி நிறையும்

ஏழைத் தாய்க‌ளின் க‌ண்க‌ளில்
க‌ண்ணீர்தான் எப்போதும்,
வாடிக்கையாகிப்போன‌
ஏழைக‌ளின் வாழ்க்கைப் புராண‌ம்
ஒரு பெரிய‌ புராண‌ம்தான்.

நட்பு

இதய அரியாசனத்தில்
எப்போதும் வீற்றிருக்கும்
எழுதப்படாத உறவு.
உயிரைவிட உயர்ந்திருக்கும்
நண்பனின் நட்புக்காக
உயிரை விட காத்திருக்கும்
என்றும் நல்ல நட்பு

இராமாயண குகனும்
சுக்ரீவனும் இராமனுக்கு
நல்ல நட்பில் கிடைத்த‌
தோழர்களல்லவா!
தோள் கொடுத்து
உயிர் காத்த உத்தமர்களல்லவா!

செஞ்சோற்றுக் கடன்கழித்த‌
மஹாபாரதக் கர்ணனும்
நல்ல நட்புக்கு ஒரு
இலக்கணமல்லவா!
ந‌ல்ல‌ ந‌ண்ப‌னாக‌
நீ இருந்தால்
நாளும் தேடிவ‌ரும்
ந‌ல்ல‌ ந‌ட்பு

உன் நண்பன் யாரென்று
தெரிந்தால்
உலகம் உன்னை
எளிதில் கணிக்கும்
நண்பனின் மரணம்கூட‌
நெஞ்சு பொறுக்கும்
நல்ல நட்பின் மரணம்
இருவரையுமே கொன்றுவிடும்