செவ்வாய், 29 ஏப்ரல், 2014

உயிர் தானம்


வறண்டு போன ஆற்றின்
வண்டலும் வாரப்படுவதைப்போல்
பசியால்வாடும் ஏழை விவசாயிக்கு
நீரும் நிராகரிக்கப்பட்டால்
மனம் தாங்குமா துயரத்தை?- இல்லை
உடல் ஏற்குமா இந்த உயிரை.

சுப்ரமண்ய பாரதியைக் கூப்பிடு
இன்னும் ஒருமுறை இங்கு தோன்றவிடு
புண்ணிய பூமி எனும் தமிழ்மண்ணில்
தனிமனித உணவுக்குக்
குரல் கொடுத்த சிந்தனைச்சிற்பி
தண்ணீருக்கா பின் வாங்குவான்?

கூப்பிடுமுன்,உறுதிகொள்-அவனுக்காவது
தடங்கலின்றி தண்ணீர் கிடைக்க‌
அவனின் வற‌ண்டு போகாத குரல்
இந்த மண்ணில் ஒலித்தால் தான்
நமக்கும் கூட உறைக்கும்
நம் தாகம் தெரியும் தர‌ணிக்கும்.

ஆற்றுநீரை நம்பி,நாற்று நட்டு
நேற்று வரை சேற்றில் சிந்திய இரத்தத்தில்
வளர்ந்த பயிர் சாய்ந்து கருத்ததில்
கர்ணன் தர்மத்தைத் தாரை வார்த்ததுபோல்
சோற்றுக்கு வழியில்லாத போதும்-தமிழக‌
விவசாயி தானம் தருகிறான் தன் உயிரை
ஆண்டவருக்கு.

 

 

உனக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?


எனக்கும் உனக்கும்
என்ன உறவு?
பிறக்கவில்லை
உன்னோடு
பிரிந்ததில்லை
வாழ்ந்தபோது
என்னை நீ
வெறுத்ததுமில்லை
உன்னை நான்
பகைத்ததுமில்லை.

வேறேது உறவும்
இல்லாதபோது
கட்டிய மனைவிக்கே
உடன்கட்டை ஏற‌
மறுக்கப்பட்டபோது
உனக்குமட்டும்
ஏன் இந்த‌
விதி விலக்கு?
சொல்லு ஆடையே

 

என்றும் வாழும்


தமிழ் மொழிக்கு
உயிருண்டு
மெய்யுண்டு
காத்துக்கொள்ள‌
ஆயுதமும் உண்டு.
கவலை வேண்டாம்
என்றும்
சீறோடும் சிற‌ப்போடும்
வாழும் த‌மிழ் மொழி

 

திங்கள், 28 ஏப்ரல், 2014

இறைவன் படைத்ததே.


பத்து மாதம் சுமந்திருந்தும்

பொண்ணா பொறந்ததால

பொத்தி வளர்க்காம

பொருளாதாரக் குறையென

பச்சிளம் சிசுவைக்

கொள்வது முறையோ?

 

தன் கருவைத் தற்காக்க

தாய்க்கு உரிமையில்லை,

ஆணை எதிர்கொள்ள

பெண்ணுக்கு வழியில்லை,

தாய் மனம் தவித்திருக்க

சேயின் உயிர் பறிபோனது

 

பேசும் பச்சைக்கிளிக்கு

உயிர் வாழ

உணவாகும் நெல்லு மணி,

பேசாத இந்த பாசக்கிளியின்

உயிரைப் பறிப்பதற்குக்

கொடிய விஷமானது

 

வறுமையில வாடுறவன்

பிறந்தபின்னே கொல்கின்றான்

வசதிபடைத்த செல்வந்தன்

கருவிலேயே கலைக்கின்றான்

ஆகமொத்தம் பெண்சிசுக்கள்

அழிந்துதான் போகிறார்கள்.

 

மாறிவரும் இப்பூவுலகில்

மங்கையரெல்லாம்

மகுடம் சூடி உயரும்போது

யாரும் இனி பாரமில்லை,

பிறக்கும் குழந்தையெல்லாம்

இறைவன் படைத்ததே.

வியாழன், 24 ஏப்ரல், 2014

ஏட்டில் மட்டும் தான்.


கால ஓட்டத்தில்
மரணப்படும் குடிசைகள்
புனர் ஜென்மமெடுக்கும்
கான்கிரீட் வீடாக.

வசதிகள் உயர‌
வந்து சேரும் புதுவரவால்
வெளியேறும்
பாரம்பரியம்.

உணவுகள் இருக்கக்
குடியேறும்
குளிர் சாதனப்பெட்டி
ஈரப்பசையோடு
புத்தம் புதிதாய்
உணவை
எப்போதும் வைப்பதால்
கொடுக்கும் இதயங்கள்
வறண்டு போனது.

பாவம்
பிச்சைக்காரன்
ஐயம் இட்டு உண்..இனி
ஏட்டில் மட்டும் தான்.

 

இன்னா செய்தார்க்கும்


வளர்த்து
காத்து
வெந்நீரிலிட்டு
பட்டானபோது
பட்ட துயரம்
மறந்து
புதுப் பொலிவுடன்
மணவிழா காணும்
மணமகளின்
மேனியை
அலங்கரித்து
மங்கள வாழ்த்து
கூற‌
வந்திருக்கும்
பட்டுபோன‌
பட்டு பூச்சிகள்.

 

கொடிமரம்.


வாக்காளர்
எண்ணிக்கைபோல்
வழியெங்கும்
க‌ட்சிக் கொடிம‌ர‌ங்க‌ள்

பட்டொளி வீசி
பறக்கின்றன‌
பலவண்ணக் கொடிகள்
சாதிகளைப்போல்

வீட்டிலிருந்தாலும்
வீதிக்கு வந்தாலும்
கொடிம‌ர‌த்துக்குத்தான்
த‌லைக‌ட்டு ம‌ரியாதை

அரசியலின்
அந்தப்புரத்திலும்
கொடிம‌ர‌ம் ம‌ட்டும் தான்
கலங்கப்படுவதில்லை

குனியாமல் தலை
நிமிர்ந்து நிற்கிறது
கைநீட்டி வாங்கக்
கை இல்லாததால்.

 

ஆண்டி கூட அறிவான்


சோறு தர சேற்றில்
கால் பதிக்கும் உழவனின்
கட்டிய மனைவி
காலத்தின் கோலத்தால்
சோக‌த்தை சும‌ந்து
நிலைகுலைந்து நிற்கின்றாளே!

சோற்றுக்கு அழும்
பிள்ளைக‌ளைப் பார்ப்பாளா
தோற்று த‌விக்கும்
க‌ண‌வ‌னைப் பார்ப்பாளா
க‌ண் க‌ல‌ங்கி நிற்க‌
அவ‌ளின் ப‌சி
அவ‌ளே ம‌ற‌ந்திட்டாளே!

பாடுப‌ட்டு காத்த‌ ப‌யிர்
ப‌ரித‌விக்க‌ விட்ட‌த‌னால்
தான் பெற்ற‌ உயிர்க‌ளைக் காக்க‌
ஒருவேளை சோற்றுக்குக்
க‌ரைந்துருகும் மெழுகைப்போல்
உருக்குலைந்து போனாளே!

வ‌ற்றாத‌ காவிரி
வ‌ழிமாறி போன‌தும்
ப‌ருவ‌த்து மேக‌ங்க‌ள்
உருமாறி ஒளிவ‌தும்
வாடிக்கையான‌தில்
வ‌ள‌மிழ‌ந்து வாழ்க்கையைத்
தொலைத்துத் த‌விக்கின்றாளே!


வாடிய‌ப் ப‌யிரைக்
க‌ண்ட‌போதெல்லாம்
வாடிப்போகும்
உழ‌வ‌ர்க‌ளின் உயிர்க‌ள்
ஆண்டுக்கு 18300 பேரென‌
அறுவ‌டையாவ‌தை
ஆண்டி கூட‌ அறிவான்
ஆண்ட‌வ‌னுக்குத் தெரிய‌லையே!

ஆணிவேர்


ஆடிக்களிப்பதில்லை
அடிமரத்து
ஆணிவேர்
சுகத்தைத் தொலைத்த‌
சுமைதாங்கி
முகத்தைக் காட்டாத‌
மூலவேர்
ஈரமண்ணின் குளிரில்
எப்போதும் இருந்தாலும்
சூரியப்பார்வையைத்
தேடாத‌
தாவரத்தின் ஆதாரம்
தாவரங்கள்
அறியாமலில்லை
புவியீர்ப்பில் விழுவதல்ல‌
சொந்தப்பூக்கள்
ஆணிவேருக்கு
அர்ச்சனை செய்ய‌
விழுந்த
ஆராதனைப் பூக்கள்