ஞாயிறு, 25 மே, 2014

துன்புறுத்துவதாய்.


கருவிலே உருவெடுத்து

காளைக் கன்றென பிறப்பெடுத்து

கன்றிலேயே பட்ட துயர்

காலமே சொல்லி அழும்.

 

காளைக் கன்றின்

கால்களை இணைத்துகட்டி

கடைக்கோடி சிறு திடலில்

கிடத்தி வைத்து,

கன்றின் விதைகளை

கிட்டியால் நசுக்கி சிதைத்தும்,

 

கனலில் பழுக்க வைத்த

சூட்டுக் கோலால்

தொடையிலிருந்து

முதுகு வரை—இருபுறமும்

ஒற்றை வரிச்சூடு

போட்ட போதும்,

 

வலியின் வேதனையால்

வாயில்லா ஜீவன்

கதறித் துடித்ததைக்

கண்ட மனம் கலங்கி

கண்ணீரில் கரைந்ததை

எழுதாமல் போனாரோ?

 

எப்படியோ,

எல்லோரும் சொல்கிறார்கள்

காளை விரட்டில்

காளையைப் பிடிப்பது

விலங்கினை

துன்புறுத்துவதாய்.

புதன், 21 மே, 2014

எப்படித்தான் மறப்பேனோ!


விடியலுக்கு முன்னெழுந்து

வழிகாட்ட வந்தவளே

கூலிக்கு சுமை தூக்கிக்

காடு மலையெல்லாம்

கால்கடுக்க நடந்தவளே

உன் சுமையை இறக்கிவைக்க—நீ

பட்ட துயர் சொல்லலையே!

 

ஒத்தையடிப் பாதையிலே

உன்னோடு நான் நடக்க

மண்ணோடு மழைசேர

சேராகி உருமாற

சறுக்கி நான் கீழேவிழ

மரத்தோட வேர் பிடித்து

மரணத்தோடு போராட,

 

உன் உயிரை துச்சமென

போராடி எனைக்காத்து

உயிர் தந்த உமையவளே

உன்னை வணங்காமலிருப்பேனோ!

ஒவ்வொரு விடியலிலும்

உன்னை நினைக்காமல்

என் உயிர் வாழ்ந்திடுமோ!

திங்கள், 19 மே, 2014

தெய்வமாய் உருவெடுத்தாள்.


கோப வெறியாலே

கண்கண்ட தோழனை

கத்தியால் கொன்றுவிட

சரிக்கிய இவன் வாழ்வு

சாவுக்கே மடிவிரிக்க,

 

கண்ணிலே துணி கட்டி

கையிலே விலங்கு பூட்டி

கழுத்துல கயிறு மாட்டி

மரணத்தை எதிர்நோக்கி

உயிர் பிழைக்கக் கதறி நிற்க,

 

செத்தவனின் தாயார்

நாற்காலியைத் தள்ளி

மக்களின் முன்னிலையில்

மரணதண்டனை நிறைவேற்ற

காத்திருந்த வேளையிலே,

 

இளகிய தாயின் நெஞ்சம்

இமைப்பொழுதில் மனம் மாறி

கொன்றவனை அறைந்தபின்னே

தூக்குக் கயிறை அவிழ்த்து

உயிர் பிச்சை தந்திட்டாள்.

 

தாயாய் தான்பட்ட கஷ்டம்

இன்னொரு தாய்க்கும்

இந்நிலை வரக்கூடாதென

மன்னித்து, வாழ்வளித்து

தெய்வமாய் உருவெடுத்தாள்.

 

பருவங்கள்


கூடி விளையாடி
ஓடித்திரிந்தது ஒருகாலம்
ஆடி அடங்கி
ஒடுங்கிப்போவது ஒருகாலம்

கல்வி கற்க‌
பள்ளி சென்றது ஒருகாலம்
படித்தறிவால்
பகுத்தறிவது ஒருகாலம்

தாயை தெய்வமாக‌
எண்ணியது ஒருகாலம்
தெய்வத்தைத் தாயாக‌
எண்ணுவது ஒருகாலம்

சுக‌ம் இல்லாத‌ இள‌மை
வேத‌னைப‌ட்ட‌து ஒருகால‌ம்
வேத‌னையில்லாத‌ முதுமை
சுக‌ம் க‌ண்டது ஒருகால‌ம்

துணிச்சல்
சீதனமாய்க் கிடைத்தது ஒருகாலம்
நிதானம்
பரிசாய்ப் பெற்றது ஒருகாலம்

நடப்பதை
சிந்திப்பது ஒருகாலம்
நடந்ததை
நினைப்பது ஒருகாலம்

அட‌ங்க‌ம‌றுப்ப‌து
இள‌மையின் கால‌ம்
ச‌ல‌ன‌மற்று அமைதியாவ‌து
முதுமையின் கால‌ம்

ந‌ல்ல‌வைக‌ள் இருந்தும்
இள‌மை முதுமையையும்
முதுமை இள‌மையையும்
என்றுமே ம‌திப்ப‌தில்லை.

செவ்வாய், 13 மே, 2014

ஒன்றுபட்டால் தவறுண்டோ?


மதங்கள் மாறிவிட்டன..

வாழவைக்க வந்த மதம்

வலுவிழந்தது.

இலாப நஷ்ட கணக்குப்

பார்த்து நலிவடைந்தது..

 

பழிபாவம் புவியெங்கும்

பலநாளும் நடக்கின்றது—அதை

தடுத்து நிறுத்தி வழிதேட

முயலாதிருக்கின்றது.

 

பாவத்தை போக்க

வந்துதித்த மதம்

பாவத்தில் மாட்டிக்கொண்டது.

வழிகாட்ட முடியாமல்

விழிபிதுங்கி நிற்கின்றது.

 

அன்று

அழியாத கல்விக்கு

ஆண்டவனை வேண்டினோம்.

வேண்டியது கிடைத்தாலும்

ஆண்டவனைக் காணவில்லை

 

இன்று

நல்லறிவும், நற்பயனும்

கூகுளில் கிடைப்பதால்

கூகுளைக் கடவுளாய்

எல்லோரும் வணங்குவோம்.

 

புவி வாழ் மக்களெல்லாம்

பயன் பெற்று சிறக்க

கூகுளை போற்றுவோம்.

ஒன்றே குலம், ஒருவனே தெய்வமென

ஒன்றுபட்டால் தவறுண்டோ?

 

காதல் கோட்டை


மும்தாஜுக்கு எழுப்பிய‌
தாஜ்மஹால்
ஒரு சமாதியல்ல.
மொகலாய மாமன்னனின்
உடைந்த இதயத்தை
ஒட்ட வைத்த‌
பளிங்கு மாளிகை

மனிதக் காதல்
கண்களில்பட்டு
இதயத்தில் பதிவாகும்.
ஷாஜ‌ஹானோ
இத‌ய‌த்தில் ப‌ட்ட‌தை
க‌ண்க‌ளில் ப‌திவாக்க‌க்
க‌விதையாக‌ உருவாக்கிய‌
காத‌ல் கோட்டை.

நதிக்கரை ஓரத்தில்
கம்பீரமாய் காதலுக்கு
ஒரு நினைவுச் சின்னம்.
ஓடிய‌ ய‌முனை
நின்று தேடுகிற‌து
த‌ன‌க்கு ஒரு
ஷாஜ‌கானை.

 

அறிதல் நன்று


நம்ப மறுக்கும்

இருந்தும் மனம் நாடும்

அதிர்ஷ்டம்,

உழைப்பின் வெகுமதி

உயிர் வாழ உதவும்

பணம்,

உணவின்றி தவிக்கும்

பட்டினியில் வாடவைக்கும்

வறுமை,

இந்த மூன்றும் வரும் போகும்.

 

கற்றதில் பெற்ற

அழியாத செல்வம்

கல்வி,

நல்ல பண்பாலும்

தவத்தாலும் அடைந்த

ஞானம்—இந்த

இரண்டும் வந்தால் போகாது.

 

வறுமையில் இருப்போர்க்குக்

கொடுக்கும் ஈகையால்

கிடைக்கும் புண்ணியம்,

பிறருக்கு தீங்கிழைக்கும்

கொடிய செயலால்

வரும் பாவம்--இந்த

இரண்டும் போனாலும் வரும்.

 

நன் நடத்தையால்

நாடி வந்து சேரும்

மானம்,

மண்ணில் வாழ்வதற்கு

மேனி தேடும்

உயிர்—இந்த

இரண்டும் போனால் வராது.

 

 

 

வியாழன், 8 மே, 2014

தாரம்.


பெண்ணை
தராதரம் பார்த்து
தாரமாக்க வேண்டும்
தாரமானபின்
தரம் பார்த்தால்
அவதாரமாக வேண்டியவள்
குடும்பத்தின்
ஆதாரமாகக்கூட‌
இருக்கமாட்டாள்