வியாழன், 19 ஜூன், 2014

அக்னி வெய்யில்


பட்டி தொட்டியெல்லாம்
தொட்டு விட்டு
கால்பதித்து கடந்துபோகும்
கோடைகாலத்துக் கொடுமை
அக்னி ந‌ட்ச‌த்திர‌ம்

இர‌வு ந‌ட்ச‌த்திர‌ம்
இத‌ய‌த்தைக் குளிரூட்டும்
அக்னி ந‌ட்ச‌த்திர‌மோ
சூரிய‌னோடு உற‌வாடி
உயிர்க‌ளைக் கொல்லும்

அன‌ல் க‌க்கும் வெய்யில்
என்றும்போல் மின்சார‌ம்
வாடும் ம‌க்க‌ளின் நிலைக‌ண்டு
க‌ண்ணீர் சிந்தும் மேக‌ங்க‌ள்,
சூரிய‌னே,ஏனிந்த‌ ஆவேச‌ம்?

த‌வ‌று செய்யாத‌ உயிர்க‌ளை
த‌ண்டிக்கும் சூரிய‌னை
வ‌ராதேயென்று எப்படிக் கூறுவேன்?
அனைத்து உயிர்க‌ளும்
அவ‌ன் த‌ய‌வில் வாழும்போது!

 

பொலிவுற்றாள் மண்மகள்.


இதழ் விரித்த மல்லிகையை
முத்தமிட்டு வாசம் அள்ளி
புவி மணக்க வீசும்
காலை இளந்தென்றல்

மலர்ந்தும் மலராத‌
பூவைப்போல காலைப்பொழுது
பகலவன் துயிலெழ‌
வானில் வட்டமிட்டு
பாட்டிசைக்கும் பறவையினம்

உறங்கி எழும் கதிரவனின்
ஓரவிழிப்பார்வை
பூமகளின் மேனியைத்
தொட்டுவிடுமுன்னே

நீராடி,த‌லைவாரி,பூச்சூடி
பொட்டிட்டு,அல‌ங்க‌ரித்து
புதுப்பெண்ணாய் பொலிவுற்றாள்
ம‌ண்ம‌க‌ள்-எங்க‌ள்
பாவைய‌ரின் க‌ர‌ம்ப‌ட்ட‌
கோல‌த்தால்.

 

வாழ்த்துக்கள்.


காலம் காலமாய்
பசி,பட்டினி,புலமை
அனைத்தும்
தமிழ்ப் புலவர்களின்
அழியாத சொத்துக்கள்.

காலம் என்றும்
நிலைத்து நின்றதில்லை
செல்வ செழிப்புடன்
வைரமும் முத்தும்
பொன்னும் மணியும்

அனைத்தும் பெற்று
சீரும் சிறப்போடு
வாழும்
தமிழ்ப் புலவருக்கு
என் வாழ்த்துக்கள்

 

நல்லவராய்க் காட்டிக்கொள்ள.


நாட்டுக்கும், கல்விக்கும்

நதிகளுக்கும், விதிகளுக்கும்

பெண்ணோட பேரவச்சு

பெண்வடிவாய் ஏற்றிவச்சு

பெருமையாய் போற்றுகின்றோம்.

 

அவனியிலே நம்மோடு

அவதரித்த பெண்ணினத்தை—ஏனோ

சரிசமமாய் ஏற்காமல்

சமூகப் பண்பாடென அடக்கி

சீரழியச் செய்தது ஒன்றா, இரண்டா?

 

பணவசதி குறைவாலே

பெண் குழந்தை வேண்டாமென

பெண்ணின் தந்தை முடிவெடுக்க

பயிராகி விளையுமுன்னே

கருவிலேயே கலைக்கலையா?

 

கலையாமப் பொறந்த இரு

பாவையரின் வாழ்வுதனை

பாவி ஆண்கள் பறிக்கலையா?

மண்ணோட மானம், மங்கையாய்

மரத்தில் தான் தொங்கலையா?

 

தொங்காம வாழ்ந்த பொண்ணு

தாலியொன்னு கழுத்தில் ஏற

தவமிருந்து காத்திருக்க

ஆணின் வரதட்சனையால்—பந்தலை

அவள் பார்க்காமல் இறக்கலையா?

 

காதலித்து மணந்த பொண்ணு

பாதியிலே புருசன் சாக

சொந்த பந்தம் இல்லாம

சின்னஞ்சிறு பிள்ளைகளோடு

தெருவில் வந்து நிற்கலையா?

 

ஆண்டாண்டு காலமாய்

பெண்ணினத்தை அடிமையாக்கி

கொடுமைகள் பல செய்ததாலே

நல்லவராய்க் காட்டிக்கொள்ள—மற்றதுக்கும்

பெண்ணின் பெயரை சூட்டினாரோ!

வெள்ளி, 13 ஜூன், 2014

துடைக்கிறானே!


பாவத்தில் பிறந்தேறி

வறுமையில் குடியேறி

வயிற்றில் பசியேறி

சோற்றுக்கு வழிதேடி

வீடுவீடா படியேறி

வியர்வை வெளியேறி

வீழ்ந்து விட்ட

சிறுவனுக்கு வயது ஆறு,

வேதனைதானென்றாலும்

அன்னை செய்த பாவத்தை
அனாதையாய் துடைக்கிறானே

வியாழன், 12 ஜூன், 2014

வ‌ர‌ண்டு போச்சு.


கூடங்குளம்
கூடியது
கடலோரம்.

கருமேகம்
உருமாறி
பெரு வெள்ள‌ம்
ஆன‌துபோல்
ம‌க்க‌ள் கூட்ட‌ம்.

சுனாமியில்
எழுந்த‌ அலைபோல‌
த‌ரையெல்லா‌ம்
காவ‌ல்துறை.

ஈர‌த்தை
எழுத்தில் வார்த்தாலும்
த‌மிழ‌க‌த்தில் எப்போதும்
கான‌ல்நீர் தானே!

என்ன‌த்த‌ சொல்ல‌
க‌ரெண்டும்
வ‌ர‌ண்டு போச்சு.

 

கடவுளுக்கும் காசுதான் பெரிசு


காத்தருள வேண்டி
வரம் கேட்டு வந்தவரை
நல்வழிகாட்ட‍..நீ
என்றும் மறந்ததில்லை

அனைத்து செயலுக்கும்
மூலவன் நீயென‌
முதற்கண் வணங்காது
எதுவும் நடந்த‌தில்லை

செல்வ‌ங்க‌ள் குவிய‌
ம‌க்க‌ளுக்கு வ‌ழிகாட்டும்
ந‌ம்பிக்கையை ம‌ட்டும்
நீ த‌ந்த‌வ‌னில்லை

திருப்ப‌தி வெங்க‌டேச‌னும்
ப‌ழ‌னி முருக‌னும்
நாடி வ‌ரும் ப‌க்த‌ருக்கு
வாரி வ‌ழ‌ங்கி உய‌ர்ந்த‌வ‌ர்க‌ள்

அள்ளித்தந்த இறைவனெல்லாம்
அகிலம் போற்றும் தெய்வங்களாய்
செல்வ‌செழிப்போடு உய‌ர்ந்து
உச்சியில் வீற்றிருக்க‌

முத‌ல்வ‌னே! மூத்த‌வ‌னே!
விநாய‌க‌ப் பெருமானே!
உன் உறைவிட‌ம‌ட்டும்
ஏனிந்த‌ ஆற்ற‌ங்க‌ரையில்.

 

யார் நீ?


ஆட்டி வைப்பது நீ
அடங்க வைப்பது நீ
கண்ணில் படாத நீ
என்னோடு பிறந்ததும் நீ
பிரியாமல் வழ்ந்ததும் நீ
உடலுக்கு உறவு நீ
வம்சத்தின் வரவுக்கும் நீ
அனைத்துக்கும் ஆதாரம் நீ
இருந்தும்
பொறுப்பின்றி
என்னை மட்டும்
இடுகாட்டில் விட்டுவிட்டு
எங்கே சென்றாய்?

 

தீர்மானிக்கப்படுகிறது..


முடிவுக்குக் காத்திருக்கும்

முதுமையுற்ற தாயொருத்தி

இடையிலே துணியிருந்தும்

ஆடை மறைக்காத

அங்கங்கள் அங்கங்கே,

 

ஒட்டாத உறவுகளால்

ஒத்தையாய் போன அவள்

இல்லாத உணவுக்கு

இறவாத உயிரோடு—கையேந்தி

இறைவனின் வாசலிலே,

 

தாண்டி செல்லும் பக்தர்கள்

ஏதும் கேட்காத கடவுளுக்கு

பழத்தோடு தேங்காயும்

பத்தி,சூடத்தோடு மாலையும்

தட்டில் வைத்து ஏந்தியபடி,

 

எந்த இடமானாலும்

எதிர்பார்ப்புகளால்

கிடைக்கப் பெறுவதில் தான்

கொடுக்கப்படுவது

தீர்மானிக்கப்படுகிறது.

திங்கள், 9 ஜூன், 2014

நலமோடு தான் வளருது.


பறவைக் கூட்டம்

இரை தேடி பறக்கும்

காலைப் பொழுது,

 

வாலைப் பருவம்

வயல் தேடி போகும்

கிளிகள் இரண்டு,

 

மோப்பம் பிடிக்கும்

ஊர்,காவல் நாய்கள்

அவைகளின் பின்னால்,

 

கடித்துக் குதறி

கொம்பில் தொங்கியதில்

காலனுக்கும் பங்குண்டு,

 

வறண்ட ஆற்றின்

வண்டலும் வாரப்பட்டதுபோல்

வசதியற்ற கிராமம்,

 

ஊரும், உறவும் கூடி

அழுதாலும்—போன

உயிர் திரும்புமா?,

 

பாரதக் கதையை

படித்த சிலர்

கண்ணனை நினையாமல்,

 

அவன் கோபியரோடு

புரிந்த லீலையை

நெஞ்சில் கிடத்தியதால்,

 

பெண்ணின் பெருமை

போற்றும் இம்மண்ணில்—எங்கும்

பாலியல் வன்முறை,

 

பாரத தேசத்தில்

நாளும் கற்பழிப்பு

பாவங்கள் ஏழைகள்,

 

கற்பழிப்பு என்னமோ

காவல் துனையோடு

கருவாகி, உருபெற்று

நலமோடு தான் வளருது.