வெள்ளி, 26 செப்டம்பர், 2014

குடி குடியைக் கெடுக்குமென்று.


தாயே,உன்னோட சாவால

தமிழகமே தல கவிழ்ந்திடுச்சே—நீங்க

பெத்த செல்வமெல்லாம்

செத்து மண்ணாகிப் போயிடுச்சே

 

சனி பகவான் புடிச்சா

துன்பம் ஏழரை ஆண்டுதானே

குடி புடிச்ச கணவனாலே—உங்கக்

காலமெல்லாம் நரகமாச்சே

 

புருசனோட காசெல்லாம்

பீரு போல தெருவில் சிதற

சோறு தண்ணி இல்லாம--மொத்தமா

சாகத்தான் துணிந்தீர்களோ

 

மண்ணெண்ண எடுக்கையிலே

மனசு வந்துத் தடுக்கலையா

தீ வச்சு கொளுத்தையிலே—உங்க

தசை கூட ஆடலயா

 

ஏழையாப் பொறந்ததாலே

கருவிலேயும் கலையாம—பெண்

சிசுவாய்ப் பிறந்தும் இறக்காம

முடிவில் இப்படி கருகி சாகலாமோ

 

என்னத்த எழுதி

என்னத்த நான் சொல்ல

எல்லோரும் புரிஞ்சுக்கணும்

குடி குடியைக் கெடுக்குமென்று.

 

(கணவனின் குடிப்பழக்கத்தால் அழிந்த

ஒரு குடும்பத்தின் நினைவாக)

 

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இதயம் தான் ஏற்குமோ?


சுதந்திரம் பெற்றதால

சுகமாய் நீ வந்தாயோ!

சுகமாய் வந்ததால

இங்கு தடம் பதித்து—நீ

வேரூன்றி நின்றாயோ!

 

கண்ணுக்குள் நீ புகுந்ததால

மனசை பறித்தாயோ!

பறித்த மனசால

கரங்கள் நீண்டுவிட

கையிருப்பு ஆனாயோ!

 

உன்னோட நட்பால

ஊரெல்லாம் உறவானாதோ!

உறவான பாசத்தால

பாமரனும் ஓட்டு போட

கையூட்டு பெற்றானோ!

 

பழக்கம் தொடர்ந்ததால

ஆசையும் கூடினதோ!

கூடிய ஆசையால

ஊழல்கள் மலிந்து

நாடு தலை கவிழ்ந்ததோ!

 

அரசியலார் அரவணைத்ததால

தொண்டர்கள் ஆதரவளித்தாரோ!

ஆதரவு தந்த தொண்டர்கள்

உறுதுணையாய் நின்று

உனை பாதுகாத்தனரோ!

 

இமயமலையும் இங்குண்டு

இமாலய பங்கும் உனக்குண்டு

இருந்தும்

இல்லாத தண்டனையால்—உன்னை

இதயம் தான் ஏற்குமோ?

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

இல்லாமத்தான் போகிறது.


முடித்துவிட எண்ணி

முழு மனதோட

பேப்பர் பேனாவென

அத்தனையும் எடுத்து

அமர்ந்தபோது

 

வயதாகிப் போனதாலோ

பாடுப் பொருளொன்று

பச்ச புள்ளயாட்டம்

பக்கம் வர மறுத்து

பாடாய் படுத்தையில

 

சிதறும் எண்ணத்தால்

சில பொழுதுகளில்

எழுகின்ற உணர்வுக்கும்

விழுகின்ற வார்த்தைக்கும்

நேசம் இல்லாததால்

 

வடித்த கவிதையோ

வானவில் போல்

வண்ணக் காட்சி தந்தும்

எட்டாமலும் ஒட்டாமலும்

இல்லாமத்தான் போகிறது.

 

 

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

கிடைக்க வேண்டாமோ?


காவிரி படுத்துறங்க

ஆறுகளும் சேர்ந்துறங்க

ஓடாத ஆற்றையெல்லாம்

ஓடவைக்கும் சாக்கடைகள்

 

சாக்கடையின் சங்கமத்தில்

காற்றும், நீரும் மாசுபட்டு

நோய் வந்த கொடுமையினை

சாலை மறியல் சொல்லலையோ?

 

ஆடியில ஓடிவரும் காவிரி

அரசாணை வந்தும் கூட

ஆவணியில் தடம் பதித்து

பலனின்றி போகலையோ?

 

விஷம் இறங்கிய காய்கறிகள்

விலையேறிப் போனதால

நிலைகுலைந்த மக்களுக்கு

நோய் வந்து சேரலையோ?

 

விரைவு உணவென

வெளிநாட்டின் பெயரோடு

காலூன்றிக் கொல்லும் உணவுக்கு

எமனோடு என்ன உறவோ?

 

பாரத தேசத்து மக்களின்

பேராசை சுமை போல

பள்ளி சிறார்களின்

எடையும் குறையாதோ?

 

தொலைபேசி, கணினியால்

தொற்றும் கதிர்வீச்சும்

தொடரும் பாலியல் வன்மமும்

தொலைந்து போகாதோ?

 

ஊரெல்லாம் மழை பேஞ்சு

தாவரங்கள் எழுந்தாலும்—மக்களுக்கு

சோறும், நோயற்ற வாழ்வும்

நாள்தோறும் கிடைக்க வேண்டாமோ?

திங்கள், 8 செப்டம்பர், 2014

காலத்தின் சூழ்நிலையா?


பார்த்து பார்த்து சேர்த்ததாலே

பசங்களெல்லாம் படிக்கவச்சு

பதவியில வீற்றிருந்தும்

பெற்றோரை காக்காமல் விட்டுவிட

 

கனிந்தும் உதிராத

தளர்ந்த முதியவர்

சொத்த பிரித்தபின்னே

சொந்தம் மறந்துபோக

 

என்ன வாழ்க்கையென

எண்ணம் தடுமாற

நாதியற்று போனபின்னே

நாலு பேர் வருவாரோ சுமப்பதற்கு?

 

நடமாட்டம் உள்ளவரை

மண்ணு கூட நம் காலடியில்

நடக்காமல் படுத்துவிட்டால்

மண்ணும் ஏறி மிதிக்கும்

 

யாரோட தவறு இது?

படைத்தவனின் குறைபாடா?

பிள்ளைகளின் முறைகேடா?

காலத்தின் சூழ்நிலையா?

எங்க ஊரு சாலை


எங்க ஊரு சாலைக்கு
அங்கம் தெரிய கிழிசல்கள்
ஒட்டு போட்டாலும்-வாக‌ன‌ம்
ஓட்ட‌முடியாத‌ சாலை
கெட்டுவிட்ட‌ ரோட்டுக்குக்
கார‌ண‌ம் யார் யாரோ?

தொட்டடுத்துக் குறையில்லாக்
காரைக்கால் ரோடு
கரும் பட்டு விரித்தாற்போல்
மேற்பரப்பு.
தண்ணீர் அடித்தாலும்
தடுமாறாத வாகனங்கள்

குறை கூறவில்லை
நம்பிக்கை இல்லையென்றால்
அங்கே விழுந்துபாருங்கள்
உங்கள் மீசையில்கூட‌
மண் ஒட்டாது.

யுவராஜ் சிங்


ஆறும்
ஆறென்றும்
பன்னிரென்டில்
ஐம்பதென்றும்
சாதனை படைத்து
எண்ணிக்கை
விளையாட்டா-இல்லை
இளசுகளின்
கிரிக்கெட்டாவென‌
அரங்கத்தையே
அதிரவைத்து
வியக்க வைத்த‌
யுவராஜ் சிங்கே
நீயும் ஒரு
சிங்கம்தான்.
மீண்டு வந்து
மீண்டும் சேர்ந்ததில்
இந்தியா
பெருமைப்படுகிறது
வாழ்த்துக்கள்

யாருக்கு இறையருள்?


வாழ்வு வளம்பெற‌
வழிபட்டு ஏற்றும்
அகல்விளக்கில்
வீழ்ந்து மாயும்
விட்டில் பூச்சிகள்.
முன்னதின் வழிபாடா
பின்னதின் தியாகமா?
யாருக்கு இறையருள்?
பதிலில்லை.
இறைவன் எப்போதும்போல்.
மனிதன் தான் மீண்டும்
பாவத்தை சுமக்கிறான்.

 

வியாழன், 4 செப்டம்பர், 2014

நான் இன்னும் உயிர் வாழ.


உயிரெடுக்க வந்தவனை

கள்வனென சொல்லவோ!

கதை முடிக்க வந்திருந்தால்

காலைத் தொட்டு வணங்கேனோ!

 

என்னை சோதிக்க

அவன் என்னென்ன செய்திருந்தும்

என் கூட்டுக் காற்றுக்கு

என் மீது பற்றுதான்

 

பொழச்சென்ன லாபமென்னு

போகத்தான் துணிஞ்சாலும்

படுக்காமல் நான் போக

பரமனை வேண்டி நின்றேன்

 

உள்ளிருக்கும் சீக்குகள்

என்னைப்போல் சிக்கனம்

டாக்டர் எழுதும் மருந்துகளோ

அவரோட மனம்போல தாராளம்

 

வாங்கி வைத்த மருந்தெல்லாம்

காலமாகிப் போகையிலே

காலம் தன் உயிர்வருத்திக் கடக்கிறது

நான் இன்னும் சிலநாட்கள் உயிர் வாழ.