செவ்வாய், 30 டிசம்பர், 2014

திருநங்கையோ!


முக்காடிட்டாலும்

முகம் காட்டி வந்தாலும்

மனம் என்னமோ

மகுடிக்கு மயங்கும்

நாகமாய்

நர்த்தனம் புரியுது

 

கருப்பு மேனியோ

உன் தேகம்!

நீ வானவீதியில்

பவனி வருகையில்

சூரிய பூச்சில்தானே

சொக்க வைக்கிறாய்

 

கள்வனுக்கு

இரு முகங்களுண்டு—நீயும்

இரவில் வருவதால்

உனக்கும் இருமுகமோ!

ஒரு முகம் கண்டேன்

மறுமுகம் காணலையே!

 

உலா வரும்

நிலாப்பெண்ணே

உனக்கெதற்கு

ஆணின் பெயர்?

உண்மையைக் கூறு

நீ என்ன—ஒரு

திருநங்கையோ!

தாய்மையில் மூன்றாமிடமோ?


படைத்த உயிரத்தனையும்

பாங்குடனே காப்பதற்கு

பரமனுக்கு முடியாமல்

படைத்திட்டான் அன்னையை

 

கருவாக்கி உருவாக்கி

மெருகேற்றி வளர்த்தவள்—முடிவில்

மெழுகாய்க் கரைந்தவளும்

அவள்தானே!

 

கற்றதோ கையளவு

பெற்றவளே உன்னை

கல்லாதது கடலளவு

அல்லவோ!

 

சிறப்புறும் தாய்மையில்

பறவைக்கோ முதலிடம்

விலங்கினமோ அடுத்தது

முடிவில்தானே மானுடம்

 

பலநூறுமுறை ஒரு நாளில்

இரைதேடி ஊட்டுமாம்

தன் குஞ்சுக்கு

ரென்னெனும் பறவை

 

ஈன்ற தாய் யானை

தன் குட்டியல்லாது—காணும்

குட்டிகளனைத்துக்கும்

பாலூட்டி மகிழுமாம்

 

மனித இனமோ

தான் பெற்ற குழந்தைக்கு

தாய்பால் தராததால்

தாய்மையில் மூன்றாமிடமோ!

 

 

இப்புவி ஏது?


பரமனை மறந்திடும்

பாமரனையும்

மறக்காது

தாயுள்ளம்

 

பெற்றபொழுதில்

பூத்து மகிழும்

பொத்திவச்ச

 நெஞ்சமது

 

அன்பும் பரிவும்

பாசமும்

நிறைந்து காண்பவள்

அன்னைமட்டும் தான்

 

காப்பவனுக்கும்

காவலுண்டு

பெற்ற சிசுவுக்கோ

அனைத்தும் அவளே!

 

முற்றும் துறந்த

துறவிகளும்

துறக்காத உறவு—பெற்ற

தாயின் உறவு

 

துறவி காலில்

தந்தை விழுவதுண்டு

தாயின் காலில்

துறவி விழுவது நியதி

 

தாய்க்கு தரும்

உயர் மதிப்பு அது

தாயில்லையேல்

இப்புவி ஏது?

அவளிடம் தந்தானோ?


துயர் வரும்போது

எதிர் கொள்ளாது

உறவு துறந்து

துறவியாக மாறி

நழுவும் ஆணினம்

 

எந்த இடரையும்

எதிர்த்து போராடி

தன் உயிரோடு

தன் வழி உயிரையும்

காத்திடும் பெண்ணினம்

 

கடவுளும்

கைவிட்டால்

கூண்டோடு

செத்து மடியும் பெண்மை

போற்றத்தக்கது

 

மண்ணில்

பெண்ணினம்

இல்லையென்றால்

உலகேது

உயிரேது?

 

அதனால் தானோ

இறைவன் தாயை படைத்து

முத்தெய்வங்களின்

முழுப் பணிகளையும்

அவளிடம் தந்தானோ!

 

அடங்கித்தான் போகிறார்கள்.


தன்னால்

இயலாதென்ற

எண்ணத்தை

ஊட்டி வளர்த்து

பயிற்சி கொடுத்து

பழக்கும் யானை

சிறு கயிறுக்குக்

கட்டுபடுவதுபோல்

அரசியலார் தரும்

இலவசத்தாலும்

பணம் கொடுத்து

பழக்கும்

வாக்காளர்கள்

அடங்கித்தான்

போகிறார்கள்

தேடி அலைகிறான்.


மானிட சேவையென

முரசு கொட்டி

கட்டியெழுப்பிய

கல்விக் கூடங்கள்

கட்டியவன்

பணம் பார்க்கக்

கற்றுக் கொண்டான்,

கற்கப் போனவன்

இருந்த வீட்டையும்

விற்றுவிட்டு

நடுவீதியில் நின்றான்.

 

உயிரைக் காக்க

இறைவனை வேண்டி

மருத்துவரை பார்த்து

மருந்து வாங்கியதில்

விலைவாசி உயர்வால

மருத்துவமோ

கொழுத்துபோனது,

பாவம் ஏழை உயிர்

பட்ட கடனாலும்

பாழ்பட்ட உடலாலும்

பட்டுபோனது.

 

மகுடம் சூட

மகுடி வாசித்து

மயங்க வைத்தவன்

உயர்ந்துபோனான்

இருப்பதையெல்லாம்

சுருட்டலானான்,

உயரத்தில்

ஏற்றிய பாமரனோ

இருந்ததையும் இழந்து

இலவசத்தைத்

தேடி அலைகிறான்

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பேரழகு


பதினாறில் பாவை அழகு

பருவத்தில் பன்றியும் அழகு

படைத்தவனின் பரிசு அது

 

நோயில்லா வாழ்வழகு

அறுபதிலும் அழகிருந்தால்

அது ஆன்மாவின் அன்பளிப்பு

 

இளமையில் முகம் அழகு

முதுமையில் அகம் அழகு

இயற்கை எப்போதும் அழகு

 

நல்ல உள்ளம் மனிதர்க்கழகு

உற்ற துணை மனைவிக்கழகு

உயிர் தோழன் நட்புக்கழகு

 

பிள்ளை பெற்றோருடன்

கூடி வாழும்

கூட்டுக் குடும்பம் பேரழகு.

புதன், 3 டிசம்பர், 2014

கவலை


மனக்கவலை

பட்டுக்கொண்டே

இருக்கும் வரை

மன அழுத்தங்கள்

மட்டுபடாது

பட்டுபோக

விட்டுவிட்டால்

அத்தனையும்

கட்டுபடும்,

துட்டு கூட--!

நன்றியில்லாமல்


தென்னை மரம்

தன்னையே முழுதுமாய்

தந்து காக்கும் தாவரம்

 

தனித்து வாழ்ந்தாலும்

கூடி வாழ்ந்தாலும்

வளர்த்தவரை கைவிடாது

 

தன் பிள்ளைபோல

மனிதர்களை

மடியும்வரை காத்திருக்கும்

 

கூரைக்குக் கீற்று

கோடைக்கு இளநீரு

உணவுக்கு தேங்காய்

 

முடிக்கு எண்ணெய்

கட்டிலுக்கு மெத்தை

கட்டுவதற்குக் கயிறு

 

இறைவனின் அர்ச்சனைக்கும்

இசையின் கருவிக்கும்

அனைத்திலும் உன் வாசம்

 

கடவுளாய்க்

காத்து வளர்க்கும்

உன்னைப்போல் ஒரு பிள்ளை

 

எனக்கு வேண்டுமென

இறைவனை வேண்டி

தேங்காய் உடைக்கிறேன்

நன்றியில்லாமல்.