வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வெள்ளை நிறத்தழகி

மண்ணில் பிறப்பெடுத்து
மனதைக் கவர்ந்திழுக்கும்
வெள்ளை நிறத்தழகி
மறைந்து இருந்தாலும்
தூது விடும் பேரழகி

உறவோடு வாழ்ந்தாலும்
விடுபட்டு பிரிந்தாலும்
கொண்டவனின் மனம்
கோணாமல் மகிழ்விக்கும்
குணவதி

ஆலயங்களில்
இவள் கைமாறுவாள்
இருந்தாலும்
படைத்தவனின் நெஞ்சில்
நிறைந்திருப்பாள்

பணமிருக்கும் இடமறியும்
கள்வனைப்போல்
வீட்டுக்குள் இருந்தாலும்
இவள் இருப்பிடம்
தெரிந்துவிடும் மாந்தருக்கு

கோவில்களில்
வாசம் கொள்வதால்
இவள் தேவதாசியல்ல,
மனதை அள்ளும்

மல்லிகைப்பூ.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சொல்ல மனம் வருமா?

கருத்த உடலழகி
பருவக் கன்னியவள்
பக்கம் வந்து நின்னு
பார்க்கையிலே
பாழும் மனது
பரிதவித்து ஏங்காதோ!

கை கொடுப்பாள்
என்று எண்ணி
காத்திருந்தபோது
மனமிரங்கி
முத்தமிட்ட ஈரத்தோடு
முக்காடு போட்டு
ஓடி ஒளிந்தவளை

சனியனென்று மனம்
சாபமிட்டாலும்,
மன்னித்து,
மனம் குளிர வைத்த
கோடை மழைப்பெண்ணை
கொடுமைக்காரியென
சொல்ல மனம் வருமா?



வெள்ளி, 10 ஏப்ரல், 2015

உயிர் வாழ்வதற்கு.

இறைவா!
நீ படைத்த நான் கூட
கையேந்தும் ஏழைக்குக்
கைகொடுத்து பசிபோக்கிக்
காத்ததுண்டு

எந்நேரமும் காத்தருளும்
எம்பெருமானே!
ஏன் இந்த அவலம்?
அதுவும் உன் எல்லையில்,
நீ அறியாததா!

வயிற்றுக்கு வழிதேடி
பிழைக்க வந்த
மலை வாழ் ஏழையைக்
கொடுமை படுத்திக்
கொன்றது நியாயமோ?

ஏவி விட்டவன்
எங்கோ இருக்க
எடுத்த உயிரத்தனையும்
அப்பாவி மக்களான
ஏழை எளியவர் தானே!

உலகம் மாறும் போது
உன் படைப்பையும் மாற்று
முடிந்தால்
அனைவரையும் செல்வந்தராய்
படைத்து விடு

இல்லையேல்
காட்டு விலங்காய் பிறக்க விடு
தவறு செய்தாலும்
மீண்டும் காடு சென்று
உயிர் வாழ்வதற்கு.


செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பதறிப் போனேனே!

இளம் வயதில்
சேர்ந்து விளையாடி
நினைக்கவும், நனைக்கவும்
செய்த உந்தன்
பசுமை நிகழ்வுகளை
மறக்க முடியாமல்

பொன்னான நினைவுகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
வயிற்றுப் பிழைப்புக்காக
படித்து, பொருள் தேட
பல ஊரு போனதால
பிரிந்து போனேன் உன்னை

தூங்காதபோது உன் நினைவு
தூங்கும்போது உன் கனவு
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சேருவோம்
என்ற நம்பிக்கையில்
வாழ்க்கையோ ஓடிவிட்டது

ஆசையாய் ஊர் திரும்பி
உனை பார்த்து வாழ்த்தாவது
கூற எண்ணி வந்தபோது
பதறிப் போனேனே!
பாழ்பட்டு போனாயே

பாமினி ஆறே!

புதன், 1 ஏப்ரல், 2015

பெருமையா? சிறுமையா?

கத்தும் குழந்தை
பிழைத்துக்கொள்ளும்
என்பார்கள்
காப்பவனும் கைவிட்டால்
கத்துவது சாத்தியமோ?

எப்போதும் வறுமை
சோர்ந்து போவதில்லை
மௌனமாய்
கையேந்துபவர்களின் உயிரை
பசியாறித்தான் போகிறது

பிச்சை எடுப்பவரில்
பி.ஹெச்.டி டாக்டர்,
இஞ்சினீயர், வக்கீல்களென
படித்தவரும் உண்டு
பெருமையா? சிறுமையா?

ஏன் இந்த அவலநிலை
ஆயிரந்தான் சொன்னாலும்
வெட்கப்பட வேண்டியது
தனி மனிதனல்ல—ஒட்டுமொத்த

சமுதாயம் தான்.

ஒரே கொண்டாட்டம்

ஆட்டங்களும்
கொண்டாட்டங்களும்
அதன் பிரதிபலிப்பும்
எங்கோ நடக்க,
ஏதுமறியா
எங்க ஊர் சிறார்கள்
அதனை
தெருவில் பதிவேற்ற

வரும் போகும் காரையும்
வயோதிக மாந்தரையும்
பதம் பார்த்திட
கொட்டும் மழையாய்
திட்டும் கோபமும்
தெருவெங்கும்
பெரு வெள்ளாமாகி
ஆட்டம் நிறுத்தப்பட்டது

பிள்ளைகள் அதனை
பெரிதுபடுத்தவில்லை,
விக்கெட்டும், பேட்டும்
பறிக்கப்பட்டது
வயோதிக மாந்தருக்கு
ஒரு நாள் மேட்சில்
வெற்றி பெற்றதுபோல்

ஒரே கொண்டாட்டம்.