சனி, 23 மே, 2015

மரணம்.

கை பிடித்தத் தாரம்போல்
காலமெல்லாம் துணை வந்த‌
வாழ்வாதாரம்
அறுபதில் அறுந்தபோது
கடைசி வரை கூட வர‌
முதுமை துணை நின்றதை
மறப்பேனோ!

மண்ணின் காட்சிகள்
விழித்திரையில்
மறையத் தொடங்கியதும்
ம‌ன‌சின் பார்வை
மாய‌வ‌னை நாடிய‌தை
ம‌ற‌ப்பேனோ!

அல்ல‌ல்ப‌ட்டு அநாதையாய்
ஆன‌ என்னை
பேதங்க‌ள் பாராது
அன்புட‌ன் அர‌வ‌ணைத்து
இழ‌ந்த‌ ப‌த‌விக்காக‌
சிவ‌லோக‌ப் ப‌த‌வியை
வாங்கித் த‌ர‌
நீ முய‌ல்வ‌தை
ம‌ற‌ப்பேனோ!

ப‌க்குவ‌மான‌து ம‌ன‌ம்
ம‌னித‌னை ம‌ர‌ண‌ம் வெல்லும்
வாழ்க்கையை நேசிக்க‌
வ‌ழியில்லாத‌போது
ம‌ர‌ண‌ நேசிப்பும்
ம‌ரியாதை பெறும்.

செவ்வாய், 19 மே, 2015

நடுத்தெருவில் நிற்க நேரும்.

ஆதியும், அந்தமும்
அறியப்படாத இயற்கை,
அகத்தோற்றம்
அறியாத இரகசியம்,
புறத்தோற்ற மாற்றங்களால்
ஆதி மனிதன் அதனை
இறைவனாக்கி வழிபட்டான்

கால ஓட்டத்தில்
இறைவனையும் தொலைத்து
இயற்கையையும் அழித்து
பூமியை சீரழித்தான் மனிதன்,
நிம்மதி இழக்கும் நேரம்
நெருங்குவதுபோல் காட்சிகளின்
நிகழ்வுகள்

நாடுகளுக்கிடையில்
போட்டி, பொறாமை,
அழிக்கும் ஆயுதங்களை
ஆழ் கடலில் சோதிப்பதும்,
காசு, பணத்திற்குக்
காடு, மலைகளையும்
விளை நிலங்களையும்
அழிப்பதால்

ஓசோனில் ஓட்டை—சூரியனின்
நேரிடைப் பார்வை
வெப்ப அதிகரிப்பால் ஏற்படும்
நிலையற்ற பருவ மாற்றத்தையும்,
அணுக்கதிர்கள் உண்டாக்கும்
அழிவுகளையும்
சோதனை செய்யும் நாடுகள்
சொல்ல மறந்தவைகள்

இயற்கையை இயற்கையாய்
இருக்கவிட்டு
இயற்கையை பாதுகாக்க
எல்லோரும் முயல வேண்டும்
இல்லையேல்
நேப்பாள மக்கள் போல்
நடுத்தெருவில் நிற்க நேரும்.



வியாழன், 7 மே, 2015

நண்பேன்டா.

முடிவு நெருங்கி வர
முகமலர்ந்து நான் செல்ல
ஒரு நாள் நீ வருவாயென
வாசலில் நான்
காத்திருக்கிறேன்

சமரசம் பேச
எண்ணமில்லை என்னிடம்
எதிர்பார்ப்பெல்லாம்
போகாத இடத்திற்கு—ஒரு
துணையோடு போகத்தான்

நீ வந்தால்
எனக்கு துணையாய்
ஒரு நல்ல நட்பு,
நீ வராமல் போனாலோ
என்னுயிர் காக்கும்

ஆருயிர் நண்பேன்டா!

பெரும் கொடுமை.

ஏது நடந்தாலும்
எதுவும் சொல்லாத
மாயவனைப் போல்
மௌனம் காப்பது,
கனக்கிறது நெஞ்சம்         

நடக்கின்ற இறப்புகளின்
தொடர் போராட்டம்,
உயிரோடு புதைக்கும்
நில நடுக்க பேரிடர் போல்
நிலைகுலையும் மக்கள்

கல்வெட்டில் பதிவான
வரலாற்று சின்னம் போல்
எழுதி வைத்த வார்த்தைகள்
எண்ணத்தை வெளிபடுத்தி
இயலாமையைக் காட்டினாலும்

நெறியோடு நேர்மையாய்
நடக்கின்ற மாந்தர்கள்
வெறுமையென வாழ்க்கையை
வேரறுக்கத் துணிவது

பெரும் கொடுமை.

சனி, 2 மே, 2015

நாடும் நகரும்.

நாடுகளின்
செல்வ செழிப்பை
நாடும் நகரும்
பெருமையுடன்
பறை சாற்றும்

நேபாளம்
நாடும் நகரும்
எனக் காட்டி
பூகம்ப சீரழிவை

பதிவேற்றியதோ!

வெள்ளி, 1 மே, 2015

உழைப்பு.

உலகமே இதன் காலடியில்
உண்மை அறிந்தோர்க்கு
உவகை எந்நாளும்

வெற்றியும் செல்வமும்
வழங்கிடும்—கூடவே
வசந்தம் தரும் மேனிக்கு

பெறுகின்ற செல்வம்
பெருமை தராதபோது--உழைப்பு
மரியாதை தந்து மகிழ்விக்கும்

உயர்வான உழைப்பால்
உடல் உறுதி பெறும்
முதுமையும் இளமையாகும்

அறிவால் தொடங்கி
ஆற்றலில் முடியும் செயல்
தலையெழுத்தையே மாற்றிவிடும்

உளி படாத கல் சிலையாவதில்லை
உழைப்பில்லாத வாழ்வின்
கனவு நனவாவதில்லை

சிரத்தையுடன் உழைத்து
சிகரம் தொட்டவர்களை—மக்கள்
சிரசில் வைக்க மறந்ததில்லை

ஆனிவேரின்றி மரமில்லை
உழைக்கும் வர்க்கமின்றி உலகில்லை,
அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்