புதன், 29 ஜூலை, 2015

நல்லவர்கள் எங்கே

மானிட சேவையென‌
முரசு கொட்டி
கட்டி எழுப்பிய‌
கல்விக் கூடங்கள்``அதில்
க‌ட்டிய‌வ‌ன் ப‌ண‌ம் ப‌ண்ண‌
க‌ற்றுக்கொண்டான்
க‌ற்க‌ப் போன‌வ‌ன்
இருந்த‌ வீட்டையும்
விற்றுவிட்டு
தெருவில் நின்றான்.

ந‌ல்ல‌து ந‌ட‌க்க
இறைவ‌னைத்தேடி
ஆல‌ய‌ம் செல்வ‌து போல்
உயிரைக் காக்க‌
ம‌ருத்துவ‌ரைத்தேடி
ம‌ருத்துவ‌ம‌னை ஏறிய‌
ஏழையின் வாழ்வு
ப‌ட்ட‌ க‌ட‌னில் ப‌ட்டுபோக‌
கொடுத்த‌ ம‌ருந்தில்
கொழுத்த‌து ம‌ருத்துவ‌ரின்
செல்வ‌ம்.

ம‌குட‌ம் சூட‌
ம‌குடி வாசித்து
ம‌ய‌ங்க‌ வைத்த‌வ‌ன்
உய‌ர்ந்து போனான்
அர‌சிய‌ல்வாதியாகி
அகில‌த்தையே சுருட்ட‌லானான்
உய‌ர‌த்தில் ஏற்றிய‌
பாம‌ர‌னோ
இருந்த‌தையும் தொலைத்து
இல‌வ‌ச‌த்தைத் தேடுகிறான்

பெரிசு அழைத்துவ‌ந்த‌
பெரிய‌ ஆபிச‌ரிட‌ம்
ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் சொல்லி
ந‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌த்துக்கு
பாவ‌ப்ப‌ட்ட‌ விவ‌சாயி
ம‌னு கொடுத்தான்.
ப‌ண‌ம் கொடுத்தால்
காரிய‌ம் ந‌ட‌க்குமென்ற‌தால்
விதியயை எண்ணி விவ‌சாயி
வீதியில் ந‌ட‌க்க‌லானான்
வெறுங்கையோடு.

பார‌த‌ தேச‌த்தில்
ம‌ஹாபார‌த‌த்
த‌ரும‌னைப்போல்
உல‌க‌ மாந்த‌ர் அனைவ‌ரும்
ந‌ல்ல‌வ‌ரென்று கூற‌
என்னால் முடிய‌வில்லையே!
உல‌க‌ம் கெட்டுவிட்ட‌தா?~~இல்லை
த‌ரும‌னின் குரு
சொன்ன‌துபோல்
நான் ந‌ல்ல‌வ‌னில்லையோ?
உல‌க‌ம் ந‌ல்ல‌தாக‌த் தெரிய‌!


செவ்வாய், 21 ஜூலை, 2015

இரட்டை குழந்தைகள்


ஒரு தாய் வயிற்று

பிள்ளைகளாய்

ஊருக்கே உறவாகிப்போன

இரட்டைக் குழந்தைகள்

 

ஒரு பிள்ளை

கை கொடுத்து உதவும்

மறு பிள்ளையோ

காலை வாரிவிடும்

 

பகைமை கொண்ட

பங்காளிகள் போல்

பிள்ளைகள் இருவரும்

ஒரே வீட்டில் வாழ்வதரிது

 

கை கொடுத்தாலும்

காலை வாரினாலும்

இரண்டுமே ஒருவரிடம்

நிலைத்து நிற்பதில்லை

 

எதிர் எதிரா இருந்தாலும்

எல்லோர் வாழ்விலும்

வந்து வந்து போகும்

இன்பமும் துன்பமும் தானது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

முயலாலாமை தான் காரணமோ!

ஆலயம் சென்று
ஆண்டவனை வழிபட்டு
வேண்டுகின்ற வரம்போல
ஊர்மக்கள் கோரிக்கை

வீட்டுக்கு ஒருவரென
வீதிக்கு வந்து
வேதனையை சொல்லி
குரல் கொடுத்தும்

செவிடன் காதில் ஊதிய
சங்கு போல்
எங்கும் யாரும்
செவி சாய்க்காதபோது

போராட்டம்
போர்க்களமாகி
பொருளும் உயிரும்
பறிபோவது சரிதானோ?

ஓர் அழிவை
மற்றொரு அழிவால்
நியாயப்படுத்துவது
முறைதானோ?

தீர்வு எட்டாமல்
முயல் ஆமை கதையில்
முயல் தோற்றது போல்

முயலாமை தான் காரணமோ?

ஞாயிறு, 12 ஜூலை, 2015

வறுமையா இல்லை பெருமையா?

முக நூலில் முகம் காட்டி
அகம் தொட்டு
அகலாமல் நினைவிலிருக்கும்
காட்சியினைக் கண்டதற்கு
என்ன தவம் செய்தோமோ?

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லென்று
சொல்லும் தமிழ் மண்ணின்
பழமொழி
பொய்த்ததுபோல்

பெற்றவளே பிள்ளைக்கு
ஊற்றி தந்த கள்ளை
சேர்ந்தமர்ந்து குடிக்கக்
கற்று தரும் அவலம்
வறுமையா இல்லை பெருமையா?

நல்லதுக்கு
நான் நீயென்று
போட்டி போடும் எல்லோரும்
இந்த சீர்கேட்டுக்கும்
பொருப்பு தானே!


வியாழன், 9 ஜூலை, 2015

முறையோ? தகுமோ?

சீர்வரிசை செய்வதுபோல்
பீர் வாங்கிக் கொடுத்து
பால் மனம் மாறாத
பச்சிளம் பாலகனைப்
பருகவைத்து அழகு பார்த்த
மாமனுக்கு மதி இல்லையோ!
பெத்தவ பார்த்தா—வயிறு
பத்தி எரியுமுன்னு
பாவி மனம் நினைக்கலையே!

எத்தனையோ வழியிருந்தும்
அத்தனையும் விட்டுபுட்டு
காசுக்கு ஆசபட்டு
கள்ளுக்கடை பல திறந்ததாலே,
சோத்துக்கு அலையும் மாந்தர்
சொர்க்கத்தைக் காணவேண்டி
சேர்த்த காசை குடியில் கரைத்துவிட
சேர்ந்துகொண்ட சோகத்தால்
தெருக்களெல்லாம் உறவாகி
பிரியாமல் எப்போதும் இவனோடு

எதையும் அறிந்துகொள்ள
ஆசைபடும் மாணவர்கள்
களவையும் கற்பதுபோல்
கள்ளைக் குடித்துவிட்டு
சாலையில் கிடந்த காட்சி
சாவு விழுந்ததுபோல்
நெஞ்சு துடிக்கலையா?
பெத்த மனம் பித்தாகி
கண்ணீர் சிந்தலையா?

தமிழ் மண்ணில்
உயிர்வாழும் நெஞ்சங்களில்
கொஞ்ச நஞ்ச ஈரமும்
காய்ந்து போனது,
ஒட்டுமொத்த சமுதாயம்
கெட்டுவிட்டது,
வளமான தமிழகம்
வலுவிழந்து நிற்பது

முறையோ? தகுமோ?