திங்கள், 31 ஆகஸ்ட், 2015

அதிர்ஷ்டம்

எத்தனை உறவிருந்தும்
அதிர்ஷ்டமே உனக்கீடாகுமா!
உன் ஒற்றை தரிசனத்தால்—நான்
உயராமல் போவேனோ!

வளமோடு காட்சி தரும் நீ
அறிவை துணைக்கு அழைப்பதில்லை
ஆனால் அறிவுக்கு
உன் துணை தேவை

உன்னை அடைந்தவன்
பொன்னும் பொருளும் பெற்றிடுவான்
அடையாதவனோ
தன்னம்பிக்கை இழந்திடுவான்

இருட்டில் குருடனும்
கண்ணிழந்தவனும் ஒன்றாவதுபோல்
அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தால்

படித்தவனும் மூடனும் ஒன்றுபோலத்தான்

அளவுக்கு மிஞ்சினால்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் விஷமாவதுபோல்

அதிகம் காய்ந்து கெடுத்தது
வெய்யில்

அதிகம் பெய்து கெடுத்தது
மழை

நீருக்கும் சோறுக்கும்
நாட்டில் தவிப்பவர்கள் ஏராளம்

ஊட்டச்சத்து குறைவால்
இறக்கும் குழந்தைகள் அதிகம்

மக்கட்தொகை பெருக்கம்
நம் நாட்டில் அதிகம்

கல்வி அறிவு இல்லாதவர்களும்
இங்கு தான் அதிகம்

இத்தனையும் அறியாதவர்போல்
இருப்பவர்கள் அதிகம்

ஆக்சிஜனே ஆனாலும்
அளவோடு இருப்பது அவசியம்

எல்லாமும் அழகுதான்
அதிகம் ஆகாமலிருக்கும் வரை

ஒன்று அதிகமானால்
மற்றொன்றை இழக்கநேரும்

இயற்கை வகுத்த நியதி அது
அதனை மனத்தில் கொள்ளவேண்டும்



சனி, 29 ஆகஸ்ட், 2015

உபதேசம்.

மண்ணில் பிறப்பெடுத்த
மாந்தர் அனைவருக்கும்
மங்கல மொழிபோல
உபதேசம் மட்டும் தான்
கேட்காமலே கிடைக்கபெறும்

வாரி வழங்குகின்ற
உபதேசங்களெல்லாம்
வாழும் மக்களுக்கன்றி
எனக்கில்லையென

எண்ணும் அரசியலாரால்
எந்த தேசமும்
மேன்மையுற்றதாய்
மண்ணில் வரலாறில்லை

உபதேசம் செய்பவர்கள்
உலகில் பலருண்டு
உபதேசப்படி நடப்பவர்கள்
புவியில் எத்தனை பேர்?

செய்யத் தெரிந்தவன்
எதையும் சாதிக்கிறான்
செய்ய முடியாதவன்
உபதேசிக்கிறான்

சிந்திக்க தெரியாதவர்கள்
உபதேசம் செய்கிறார்கள்
சிந்தித்த பெரு மக்கள்
விஷத்தையும் சிலுவையையும்
சுமந்து மாண்டார்கள்

உன்னிடமே நீ கேள்
உன்னையே நீ புரிந்துகொள்
அதுதான் என்றென்றும் பயன் தரும்
உண்மையான உபதேசம்.



வியாழன், 27 ஆகஸ்ட், 2015

இல்லாமல் ஆக்கிடுவான்.

சுழலில்
சிக்கித் தவிப்பவனை
நீச்சல் தெரிந்தால்
நீ உதவிக்கரம் நீட்டு
இல்லையேல்

ஊழலில்
உழல்பவன் போல்
உன்னையும் அவன்
உள்ளே இழுத்து

இல்லாமல் ஆக்கிடுவான்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

இரக்கம் உனக்கில்லையோ?

செல்வோமென சொல்லி
வந்த செல்வமெல்லாம்
சென்றுவிட
செய்வதறியாமல்

ஒன்றுக்கும் உதவாமல்
ஊர் சுற்றி திரிந்தவரை
சுத்தி சுத்தி வந்து
சேர்த்தணைத்துக் கொண்டாயோ!

பெருமகனார் போல
பேரெடுத்த பெருமையும்
எடுத்து சொன்ன கருத்தும்
எடுபடாமல் போனதும்
உன்னால் தானே!

ஆமை நுழைந்த வீடும்
நீ நுழைந்த இடமும்
உருப்பட்டதாய்
ஒருவரும் சொல்லலையே!

வயிற்றுக்கு இல்லாமல்
வாடிய வேதனையால்
பெருமையாய் உன்பேரை
சொல்லவும் முடியலையே!

மாறி மாறி வரும்
ஏற்றமும் இறக்கமும்
இறைவனின் படைப்பென்றால்
வறுமையே
இரக்கம் உனக்கில்லையோ!


எல்லோரும் வாழ்ந்திடுவார்

சிப்பிக்குள் விழும்
மழைத்துளி முத்தாகும்,
மனத்தில் புகும் நல்லெண்ணம்
வாழ்க்கையை வளமாக்கும்.

பொழியிற மழையாலே
செழிப்புறும் தாவரம்,
விதைக்கிற நல்லறிவால்
தழைத்திடும் மானுடம்.

செதுக்கிற உளியாலே
கருங்கல்லும் சிலையாகும்,
நெறி தவறா பண்பாலே
நாடே தலை வணங்கும்.

மனிதநேய அன்பாலே
மானுடம் சிறப்புறும்,
ஈகைக் குணத்தாலே

எல்லோரும் வாழ்ந்திடுவார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என்ன நியாயம்?

தனிமனிதன் பசிபோக்கக்
கலம் ஒன்றில் கடல் சென்று
காணும் மாந்தரிடம்
பொருளை பறித்து பிழைத்தவன்
கொள்ளையனென பேரெடுத்து
மரண தண்டனை பெறுகிறான்

கலங்கள் பலவோடு மன்னன்
படைகள் புடை சூழ பயணித்து
பல நாட்டு மக்களைக் கொன்று
அந்நாட்டு செல்வங்களை
அபகரித்து எடுத்து போகும் அரசன்
போற்றப்பட்டு வரலாறு படைக்கிறான்

என்ன நியாயம்?
அரசனின் பொற்கால வரலாறுகள்
இறந்த அப்பாவி நாட்டு மக்களின்
எழும்புக் குவியல்கள் மேல் எழுதபட்டவை
இன்று நேற்று மட்டுமல்ல
என்றென்றும் நடப்பவைகள்.



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மதிய உணவருந்தி

கார்கால மழையில்
காட்டாறு பெருக்கெடுத்து
ஊரை அறுத்து ஓடி
உயிரை எடுத்ததுபோல்

மானுட ஜென்மமென
நல்லாத்தான் பிறப்பெடுத்தாய்
ஏழையாய் பிறந்ததாலே
இளமையிலே போனாயோ!

பாடம் படிப்பதற்கு
பள்ளிக்கு சென்றாயோ—இல்லை
மதிய உணவருந்தி
மண்ணுக்கு உணவானாயோ!

பள்ளிக்கு போனாயோ—இல்லை
பள்ளிகொள்ள போனாயோ
ஊருக்கு புரிய வைக்க
உன்னையே பாடமாக்கி சென்றாயோ!

வசதி இருந்திருந்தால்
வீனாக செத்திடுமோ
பெத்தவளை தவிக்கவிட்டு
சொல்லாமத்தான் போயிடுமோ!

பொல்லாத பூமியிலே
நல்லவங்க இல்லேன்னு
சொல்லாமப் புரியவச்சு—நீ
பொசுக்குன்னுதான் போனாயோ!

சொல்லிவச்சு போவதுபோல்
மொத்தமா போறீங்க
மீண்டும் பிறப்பெடுத்தா
நல்லவங்க வாழும்
பணக்கார நாடா பார்த்து போங்க!


(மதிய உணவருந்தி இறந்த பள்ளிக்குழந்தைகளின் நினைவாக).

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பரிவு

பாவம் கொடியது
அதனினும் கொடியது
அகம்பாவம்,
வாழும்போதில்
வருவதும் போவதும்
தொடரும்
எதுவும் நிரந்தரமில்லை,
பரிவு காட்டி
மனிதனாய் வாழுங்கள்
மகானைப் போல்

மரியாதை பெறுவீர்கள்

ஊருக்கு ஒரு தாரம்.

தாரங்கள் பலகொண்ட
இராமாயண மாமன்னன்
தசரதன் பட்ட கஷ்டம்
தரணிக்குத் தெரியாதா?
வேற்றுமதக் கதையென்று
வாசிக்க மறந்தனையோ!

மணம் பல புரிந்த
தசரத மாமன்னன்
தன் இளையதாரம் கைகேயிக்குக்
கொடுத்த வாக்கைத்
தடுக்க முடியாமல்
படுத்த படுக்கையானான்
முடிவில் மரணமல்லவா—அவனை
மாலையிட்டு மணம் புரிந்தது

ஊருக்கு ஒரு தாரமென
பாரெங்கும் பல தாரம்
உனக்கிருந்தும்—முடிவில்
வளையிலிட்டு வளைகாப்பிற்கு
போவது போல்
அன்னை வீட்டிற்கல்லவா
அழைத்து வரபட்டாய்
இனிமேல் தான்
பிறக்கும் வலி உனக்குத் தெரியும்
நீ பிறந்த கதை ஊரறியும்.


(பத்திரிக்கையில் படித்த செய்தி)