திங்கள், 26 அக்டோபர், 2015

நடந்த சம்பவம்


வடகிழக்கு மலை பிரதேசம்
குளிருக்கு தலைக் கவசம்
அணிந்திருக்கும் மலைகள்,
ஆதவன் எழாத இளங்காலைப்பொழுது
செடி, கொடிகளை போர்த்தி
பாதுகாக்கும் பனிமூட்டம்

வாகனம் இல்லா ஊரில்
ஊர் விட்டு ஊர் போக
பொருட்களை சுமக்க
மலை வாழ் பெண்கள் நால்வரோடு
நானும், உதவியாளரும்
நடை பயணம் துவங்க

ஊர்போய் சேர
ஒத்தையடி மலைப்பாதை
இருமருங்கும் அடர் காடு
பனிமூட்டம் மூடி மறைக்க
சுமை தூக்கி வந்தவரும்
கண்களூக்கு எட்டவில்லை

ஒலிக்கும் பறவையின் குரலும்
ஓடி, ஒளியும் விலங்கின் சலசலப்பும்
சஞ்சலம் தந்து என்னை சாய்த்துவிட
சறுக்கி, உருண்டு,
ஒரு மரத்தின் வேரைப்பிடித்துத்
தொங்கிய நான் கூச்சலிட

சுமையை போட்டுவிட்டு
ஓடி வந்து ஒரு கையால்
என்னைத் தாங்கி பிடித்து
மறு கையால் தன்னையும் காத்து
என்னை காப்பாற்றிய—அந்த
மலை வாழ் பெண்ணை
மறக்குமா என் மனம்?

கரணம் தப்பினால்
மரணமென்று அவள் அறிந்திருந்தும்
என்னைக் காத்தருளிய அவளை
கடவுளென கைகூப்பி வணங்கி
நன்றியை தெரிவித்தபோதும்—என்
நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை

அடுத்த ஊரை அடைந்து
அமைதி திரும்பியபின்
நினைத்து பார்த்து சிரித்துகொண்டேன்
வாகனம் இல்லா ஊரில்
எமனும் வர தாமதித்ததால்
நான் பிழைத்துகொண்டேனோ!

(உதவியாகக் கொடுத்தவற்றை அந்த பெண்

ஏற்க மறுத்துவிட்டாள்)

காக்கும் திறனுண்டு



கால்களே இல்லாதபோதும்
சிகரங்களைத் தொட்டுவிடும்
ஆற்றலுண்டு

வாகனவசதி கிடைக்காதபோதும்
உலகையே வலம் வரும்
வலிமையுண்டு

உறவாகி வராதபோதும்
அனைவரையும் அரவணைக்கும்
கருணையுண்டு

பெருமையுற்று இருந்தாலும்
வசதி படைத்தவரோடு உறவாடி
மகிழ்வைத் தந்ததுண்டு

ஓடிப்போக நினைக்காதபோதும்
நிலைத்து ஒருவரிடம் இருக்காத
பங்கமுண்டு

அடிமைபோல் பணி புரிந்தாலும்
ஆட்டி படைக்கும் அதிகார
ஆணவமுண்டு

உன்னால் நிம்மதி இழந்தபோதும்
நீ பிரிந்து சென்று கவலை தந்த
அகங்காரமுமுண்டு

எனக்கு நீ அடிமையாயிருந்ததால்
நீ பிரிந்து சென்று என்னை அடிமையாக்கி
பழி வாங்கியதுமுண்டு

வசதி உள்ளோர்க்கு மகிழ்ச்சி தந்தும்
ஏழை, எளியோரை புறக்கணிக்கும்
கல்நெஞ்சமுண்டு

ஏற்ற இறக்கம் ஆயிரமிருந்தாலும்
உற்ற நண்பனைப்போல் காக்கும்

திறனுண்டு இந்த பணத்துக்கு.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கடவுள் உதவிடுவார்





பள்ளிப் பருவத்தில்
தேர்ச்சி பெறுவதற்கு
தெய்வத்தை வழிபட்டு
வெற்றி பெற்றது முதல்

உடல் வருத்தி
படித்ததையும் மறந்து
இறைவன் காத்திடுவானென
பழகிக் கொண்டது மனம்

கடவுள் காப்பாரென
நம்புவது தவறில்லை—அவர்
வந்து உதவாமல் போனால்
அது கடவுளின் தவறுமில்லை

கடவுளை நம்பு
அதே வேளையில்
உன் உழைப்பையும் நம்பி
செயலில் ஈடுபடு

தனக்கு தானே
உதவி செய்பவனுக்கும்
வேறுபாடின்றி

கடவுள் உதவிடுவார்

ஓர் எடுத்துக்காட்டு




வறுமை தரும் மரணம்
இல்லாத ஏழைக்குக்
கல்வியைத் தராதது
அறியாமை தான்

வாழ வழியின்றி
வாடும் மக்கள்
அநுபவம் மூலம் கற்று
வழி தேடாததும் அறியாமை தான்

அறியாமையை
புறந்தள்ள—முழுமனதோடு
முயற்சி செய்
வெற்றி நிச்சயம்

அறியாதவற்றை
அறிந்து கொள்ள ஆசைபட்டு
அறிவைத்தேடு—அதுதான்
வாழ வழிகாட்டும்

மரண தண்டனை
நிறைவேறும் தருவாயிலும்
மாமேதை சாக்ரட்டீஸ்
மரணத்தை பற்றி

அறிந்து கொள்ள
ஆசைபட்டது—அவரின்
மன உறுதிக்கும், தேடலுக்கும்
ஓர் எடுத்துக்காட்டு.


வியாழன், 22 அக்டோபர், 2015

தேடி அலைகிறேனே!

என்னோட வாழ்வை
உன்னில் தேடித் தேடி
எப்போதும்போல்
நாதியற்று நிற்கின்றேன்

எனக்கான உன்னை
என்னிடம் சேர்க்கவும்
உன்னிடம் கூறவும்
ஒருவனும் எண்ணலையே!

காவிரி ஆற்றை
கையெடுத்து கும்பிட்டும்
கைகொடுத்து உதவாம
கைவிரித்து போனதும்

முக்காடு போட்டு
முகத்தை மறைக்காத
அப்பாவி பெண்ணை
பாழ்படுத்திய பாவிபோல்

மூடி மறைக்காத
மேகங்கள்
விளை நிலத்தை
முடமாக்கி, தரிசாக்கியதும்

பத்தி எரியும் ஊரில்
கிடைத்தது ஆதாயமென
எடுத்து செல்லும்
பாமர மக்களைப்போல்

சுட்டெரிக்கும் சூரியன்
நிலத்து நீரையும் அபகரிக்க
சாகுபடி இல்லாம
சாகும்படி செய்ய

பாடுபட்ட விவசயி நான்
பயிரு விளையாம
வட்டி கட்ட முடியாம—கயிறைத்

தேடி அலைகிறேனே!

வேடிக்கையா/ வேதனையா?



படித்து அறிந்திருந்தும்,
பறவை, விலங்குகளை
நாம் பார்த்திருந்தும்
புரிந்து கொள்ளாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

நம்முடைய அறியாமை
எள்ளி நகைக்கிறது,
எதிர்பாராமல்
சமூகத்தில் நடந்திடும்
சில அவலங்களைக் கண்டு

அந்நிய நாட்டு மக்கள்
மதமோ,நிறமோ பார்க்காமல்
மனிதநேயத்தோடு
ஒற்றுமையாய்
சேர்ந்து வாழும்போதும்

ஒவ்வொருவருக்கும்
பிறப்பும், இறப்பும்
பொதுவாயிருக்கையிலே
நம் நாட்டு மக்களுக்கு
சாதி என்ன ஒரு கேடா?

வெறி நாய்களின்
தெருச் சண்டைபோல்
சாதிக் கொடுமை
சமூக ஒற்றுமையை
சீரழிக்கிறது

நிழலாய்த் தொடரும்
சாதிப் பேயை
நிஜ மனிதர்கள்
அழிக்க முயலாதது
வேடிக்கையா/ வேதனையா?


புதன், 21 அக்டோபர், 2015

எப்படி கேட்பேன் அதிகம்?






ஓடியாடித் திரியும்
இளமைப் பருவத்தில்
மக்கள் அனைவரும்
ஒற்றுமையாய் அமைதியுடன் வாழ
இறைவனை வேண்டினேன்

ஓடிஓடி சம்பாதிக்கும்
நடுத்தர வயதில்
குடும்பம், குழந்தை, உறவு,
உதவிய மக்களென குறுகினாலும்
அவர்களைக் காக்க வேண்டினேன்

ஆடி,ஓடி அடங்கும்
முதிர்ந்த வயதில்
நோய், நொடி இல்லாது
படுத்துவிடாமல்—நடக்கும்போதே
முடிந்துவிட வேண்டினேன்

வலிமைக் குறைய குறைய
கேட்கப்படுவதும் குறையும்
இயற்கையின் நியதியது
மக்கள் எல்லோரும்
என்னைப் போலத்தான்

மறைந்திருக்கும் மாயவனே
என் வலிமை நானறிவேன்
உன் வலிமை முழுதுமாய்
அறியாதபோது—உன்னிடம்

எப்படி கேட்பேன் அதிகம்?