திங்கள், 30 நவம்பர், 2015

பாயும் பகைதான்


பாராமல் கெடும்
பயிரைப் போல
சேராமல் கெடும்
உறவுகள்

இசையோடு
உறவிருந்தால்
மனம்
அமைதி பெறும்

நல்ல புத்தக
உறவிருந்தால்
நன்னெறியும்
நன்மையும் தரும்

உலகில்
நம்பத்தகுந்த
மாந்தரெல்லாம்
சிறந்த உறவுகளே

நட்பில் வரும்
உறவு
நட்டாற்றில்
விட்டு விடாது

நடக்கும் வரை
நாடெல்லாம் உறவு
படுத்து விட்டால்

பாயும் பகைதான்

விருட்சமானேன்




அல்லும், பகலும்
அயராது
பறக்க பறக்க
பாடுபட்டு
பணம் சேர்க்க
முயன்றதில்
சொந்த பந்தங்கள்
சொல்லாமல்
சிதைந்தன,
பொருள் வந்து
சேர்ந்தபோது
கடைசி வரை
கூட வருவது
காசு, பணமல்ல
உறவுதானென
அறிந்தபோது
தாமரை இலைத்
தண்ணீர் போல
வேரிழந்த

விருட்சமானேன்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

சரிதானா?




குற்றம் தடுத்து
மக்களைக் காக்கும்
அரசு ஊழியர்
காக்கி சட்டை
சாட்சி சொல்லும்
பாதுகாவலரென

சட்டம்,ஒழுங்கு பராமரிப்பு
கிரிமினல் பாதுகாப்பு
வி.ஐ.பி பந்தோபஸ்து
அரசியலார், அதிகாரி
ஏவல்களென
பணிகள் ஏராளம்

தொந்திகள் சிலருக்கு
இருந்தாலும்
தொழிற்சங்கம் இல்லாதவர்
நாளும் கஷ்டப்படும் இவர்கள்
மக்களின் வீண்பழிக்கும்
ஆளாவதுண்டு

நியாயம், அநியாயம்
அறியாமல்
உணர்ச்சிகளுக்கு
அடிமையாகும் மக்களை
அடக்கமுடியாமல்—சிலநேரம்
தவித்து நிற்கும்

அதற்காக
ஏதும் செய்யாமல்
நெடும்மரம் போல்
பார்த்துக் கொண்டு
இருக்கவுமுடியாமல்
தடுமாறுவதுமுண்டு

சிலரின் செயலால்
சிறு தவறு நேர்ந்தாலும்—அவர்கள்
செய்யும் பணிகள்
செம்மையாய் இல்லையென
சுமத்தும் குற்றங்கள்
சரிதானா?



எதற்கு பயம்?



உனது
இன்றைய நிகழ்ச்சியில்
எனக்கு அழைப்பில்லை
பெரியோர் பலபேர்
இருக்கையில்
விடுபட்டது வருத்தமில்லை
நான் முக்கியமில்லையென்பதை
நீயும், நானும் அறிவோம்

என்றாவது ஒரு நாள்
எனைத் தேடி
நிச்சயம் வருவாய்
அன்று உன் அழைப்பை ஏற்று
ஏதும் சொல்லாமல்
உண்மை உணர்ந்து
உன்னுடன் வருவேன்
எனை நம்பு

இருந்தாலும்
உடலும், உள்ளமும்
உண்மையை சொல்கிறது
அவ்வளவு சீக்கிரம்
நடக்காதென--நம்மை
மரணம் மதிக்காதபோது
அதனிடம் எதற்கு பயம்?



சனி, 28 நவம்பர், 2015

எனக்கு பிடிக்கும்


விடிகாலைப் பொழுதில்
உழைக்கத் தொடங்கி
வீடும், நாடும்
முன்னேற பாடுபடும்
மக்களைப் பிடிக்கும்

இரவல், யாசித்தல்
இலஞ்சம், ஊழல் இல்லாது
உழைப்பின் ஊதியத்தில்
உயிர் வாழும்
பண்பாடு பிடிக்கும்

நற்கொள்கை கொண்ட
நேர்மையான மனிதராய்
சாதிக்கும், பதவிக்கும்
அலையாத
அரசியலார் பிடிக்கும்

வறுமையின்றி
வசதியோடு வாழ
மக்களின் நலனில்
அக்கரை கொள்ளும்
அரசு பிடிக்கும்

அறிவும், ஆற்றலும்
நிறைந்த மக்களும்—வளம்,
நீதி, நேர்மையோடு
பொருளாதாரமும் சிறக்கும்

நாடு பிடிக்கும்.

பிறந்த மண்ணில்



மண்ணின் வளம்
மகுடம் சூட்டும்
வாழும் மக்களுக்கு

மண்ணின் பெருமை
மக்களின் மனத்தில்
மரியாதை பெறும்

இந்தியத் திருநாடு
இயற்கை வளமும்
சனநாயகமும் செழிக்கும் பூமி

மொழி, கலாச்சாரமென
வேறுபட்டாலும்
ஒன்றுபட்டு வாழும் மக்கள்

அரசியல் பலவீனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
உரக்கக் கூறலாம் இங்கு

மனதில் ஒரு ஆசை
முடிவின் மரணம்—பிறந்த


மண்ணில் முடியவேண்டும்

வியாழன், 26 நவம்பர், 2015

மழை நீர்



வெக்கையிலே வெட்கங்கெட்டு
ஓடி ஒளிந்த மழை
வஞ்சம் தீர்ப்பதுபோல்
வெள்ளமாய் வந்து மக்களை
அஞ்சி ஓட வைத்ததோ!

மனிதனுக்கு அடக்கத்தைக்
கற்று தந்த இயற்கை
தண்ணீரை மட்டும் பேயாட்டம்
ஆட வைத்து வேடிக்கை பார்த்தது
என்ன நியாயம்?

வாழும் உயிர்களெல்லாம்
நீரை பருகி உயிர் வாழ
நீரோ பண்டமாற்று செய்வதுபோல்
மண்ணின் உயிர்களை எடுப்பது
ஆணவமா?அகங்காரமா?

நீரை அணைகட்டி தடுத்து
சிறை வைத்ததால்
பழிக்கு பழியென மக்களை
வீட்டிலேயே அடைத்து வைத்து
மகிழ்ச்சி கொள்கிறதோ!

வெள்ளமென வெகுண்டெழுந்து
அடங்க மறுத்த மழை நீரை
தடுத்து நிறுத்த
கழிவு நீரும் காறி உமிழ்ந்து
இழிவு படுத்தியதோ!

பேயாட்டம் ஆடி
பெருக்கெடுத்த மழை நீர்
ஏழைக் குடிசைகளைக் களவாடி
நட்டநடு வீதியிலே மக்களை
நடைபிணமாய் ஆக்கியதோ!

வந்த சுவடு தெரியாமல்
தொட்டு போகும் தென்றல் போல
மழையே வந்து போகக் கூடாதோ!
மக்கள் வாழ்வை முடக்காமல்
காத்தருள வேண்டாமோ?

மழையே உன்னையும் சேர்த்து
சுமக்கும் இந்த பூமியின்
வளத்தை அழிப்பது பாவமல்லவா?
மண் அன்னை மன்னிப்பாளோ உன்னை

நானறியேன்!

செவ்வாய், 17 நவம்பர், 2015

மறந்ததும் நீயன்றோ!


நான்
பிறந்தபோது
உன்னை அறிந்தவனில்லை,
வாழ்ந்தபோது
வழிபடாமலிருந்ததில்லை,
முடியும்போதும் கூட
மறந்ததில்லை உன்னை

இறைவா
அகிலத்தைக் காப்பவனே
அடியேனைக் காணலையோ,
முடிவில் என்னை
மறந்ததும் நீயன்றோ
இல்லையென்றால்—நான்
இறந்திருப்பேனா?

படுத்தபடி நான் போக
பாவம் என்ன
செய்துவிட்டேன்?
பாடு பட்டு, சிறுக சிறுக
சேர்த்தவைகள்
அத்தனையும்
செத்தபின்னே எங்கே வரும்?

சொந்த பந்தம் ஏராளம்
சொத்து பத்தும் குறைவில்லை
இருந்தும்
கண் மூடி போற எனக்குக்
கூட வர நாலு பேரு,
இனி ஊரோரக் காடு தான்
என்னோட வீடு

மாலை சூரியன்
மறையத் தொடங்கியதும்
சிதையில் நானும்
சூரியனாவேன்,
பூத்துக் குலுங்கும் பூக்களோடு
செடி, கொடிகளும்
என் புது சொந்தங்களாகும்

பகலெல்லாம் சுற்றி
இரை தேடிய பறவைகள்
இரவில் கூடடைந்து
இசைக்கும் தாலாட்டில்
நானும் கண்ணுறக்கம்
நாளும் கொள்வேனே!