புதன், 30 டிசம்பர், 2015

பொதுத் தேர்தல்

வளமான வாழ்க்கைக்கு
வரும் போகும் ஆடுகளம்
வழி நெடுக தோரணங்கள்
கொட்டும் மழை பேச்சில்—நீர்க்
குமிழிபோல் வாக்குறுதி

எல்லோரும் மன்னரென
எடுத்து சொன்ன மகராசன்
மகசூல் பார்ப்பதற்கு
மறக்காமல் கைகூப்பி
முகம் காட்டும் பாசக்காரர்

ஆடுகளத் திருநாளில்
அலங்கரித்து வரும்
பரமனுக்கு பூசை செய்ய
பழம், தேங்காய் வாங்கி
பலனடையும் ஊர் மக்கள்

அகிலத்தை வென்றதுபோல்
அரியாசனம் ஏறி
அமர்ந்திட்ட மாமன்னன்—மக்கள்
காட்டிய அன்புக்கும், பரிவுக்கும்
கருணை காட்டுவதுபோல்

கொடிகட்டி விழாயெடுத்து
கொடுத்த படையலில்
சுயநல பருக்கையை எடுத்தபின்
பரிமாறும் இவர்கள்தான்—இனி

புதிய தெய்வங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

என்றும் காக்கும்.

இயற்கையின் எதிர்பார்ப்பு
எவருக்குத் தெரியும்?
வாய்ப்புக்குக் காத்திருந்து
வாய்க்கரிசி போடுவது
வாடிக்கையாகுமென்று

மடியில் பால் சுரக்கும்
விலங்குக்கும்
மனசில் பாசம் சுரப்பதுபோல்
மனித உயிர்களுக்கு
ஆபத்து நேர்ந்தபோது

வானில் வைகறை தீபம்
வந்து ஒளியேற்றி
விடியலைத் தந்ததுபோல்
உதவி அருளிய நல்லுள்ளங்களுக்கு
உளமாற வாழ்த்துக்கள்

உயிரை பணயம் வைத்து
உயிர்களைக் காத்த செயல்
அத்தனையும் பெருமையுறும்,
குழந்தையை தாய் சுமப்பது
கூலிக்கல்ல, பாசம் அது

அன்பு, பாசம், பரிவு, மனிதம்
அனைத்தும் தழைத்தோங்கக்
காத்து அரவணைத்த
கரங்களெல்லாம் தெய்வங்கள்
கைகூப்பி வணங்கப்படும்

மார்பும், முகிலும் சுரந்து
மனித உயிரைக் காப்பதுபோல்
கண்கள் சுரக்கும் கண்ணீர்
அன்பையும், மனிதநேசத்தையும்

என்றும் காக்கும்        

வெள்ளி, 18 டிசம்பர், 2015

குற்றம்



உழுதபின் தான் நிலம் விளையும்
உழைக்காமல் வேறுவழி தேடலாமோ!
மண்ணில் மானிடப்பிறவி எடுத்தும்
மனிதாபிமானம் இழக்கலாமோ!

உதவி செய்ய வக்கில்லை—அடுத்தவர்
உயிருக்கு தீங்கிழைக்கலாமோ!
குற்றம் என அறிந்திருந்தும்
குறுக்கு வழி தேடலாமோ!

மனதில் எழும் பேராசையால்
மலைபோல் குற்றங்கள் குவியாதோ!
வறுமையும் வழிகாட்டி வரவேற்றால்
புவியெங்கும் புரையோடி போகாதோ!

ஏழை, பணக்காரரென பிரித்து பார்த்தால்
எல்லோருக்கும் சமநீதி கிடைக்குமோ!
ஒறுத்தல் வேறுபட்டால்—மக்களிடம்
ஒற்றுமை, நேர்மை ஒட்டி உறவாடுமோ!

காணிக்கையும், சடங்குகளும் செய்து
கடவுளை தனதாக்க எண்ணலாமோ!
கும்பிடும் கடவுளை முன்னிறுத்தி—செய்த
குற்றத்தை மறைக்கலாமோ!

மனிதர்களின் நேர்மையற்ற செயலால்
மாயவனும் கலங்கம் வருமென அஞ்சினானோ!
கடவுள் அன்று முதல் இன்று வரை—மக்களுக்குக்

காட்சி தராததும் அது தான் காரணமோ!

செவ்வாய், 15 டிசம்பர், 2015

எனக்கேதய்யா விலாசம்?



ஆருயிர் தோழிபோல்
அர்த்த ராத்திரியில்
உதவிக்கு வந்தவளாய்
வீடு தேடி வந்து
கதவை தட்டி அழைக்க

இலவசம் நினைவுகளாய்
நெஞ்சமதில் ஆனதால்
கொஞ்சமும் எண்ணாமல்
கூடவே சென்ற மாந்தரை
கொன்று குவித்தாளே!

கண் திறந்த தெய்வம்
கண் சிவந்தாளோ!
நீருக்கு நாளும் போராடும்
மக்களின் குமுறலைக்
குறையெனக் கொண்டாளோ!

உயிர், உடமைகளை
வாரி எடுத்தழித்த மாரியாத்தா
பொங்கி எழுந்து
பூம்புகாரை மீண்டும்
நினைவு படுத்துகிறாளோ!

செய்வதறியாது
திகைத்து நிற்கும் மனிதரிடம்
நிவாரண உதவிக்கு
விசாரிக்க வந்த அதிகாரி
விலாசம் கேட்டார்

“வீடே வெள்ளத்தில்
போன பின்னே—எனக்கு
வெட்டவெளி வாசம்
எனக்கேதய்யா விலாசம்?
என்றார் வேதனையோடு.”


ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பெருமை உனக்குமுண்டு.



ஒருமுறை சிறை சென்று
பலமுறை குற்றம் சுமக்கும்
திருடனைப்போல்
பருவமழை போலீசால்—வருடாவருடம்
பாதிக்கப்படும் கடலோர ஊர்கள்

மருத்துவ கவணிப்பின்றி
மரணப்பட்ட நோயாளிகள்—காரணம்
புயலென சொன்னதுபோல்
வடியும் வெள்ளத்தில் மீட்ட சடலங்கள்
உயிரிருந்தால் என்ன பொய் சொல்லுமோ!

நல்லவர் ஒருவருக்காக பெய்யுமழை
எல்லோரையும் காக்குமென்பது மரபு—இப்படி
பேய் மழையாய் பெய்து அழித்தால்
நல்லவர்கள் குறைந்து போனது
மழைக்குக் கூட தெரிந்து போனதோ!

இறைவன் சோதிப்பதுபோல் மழை
இருந்ததையெல்லாம் எடுத்தழித்து
உயர்வு தாழ்வின்றி ஒருவேளை சோற்றுக்கு
நாயாய் அலையவிட்டாலும்—மக்களை
மனிதநேயத்தால் காப்பாற்றிய நல்லுள்ளங்களை
மனதார கைகூப்பி வணங்குகிறேன்

அழிவுகள் ஆயிரம் நீ செய்தபோதும்
விசேஷ நாட்களில் சுத்தப்படுத்தும் வீடுபோல
அசுத்தங்கள் அத்தனையும் அகற்றி
சுத்தம் செய்து, சென்னையை சிங்கார நகராய்

மாற்றும் பெருமை உனக்குமுண்டு.

வியாழன், 3 டிசம்பர், 2015

மகசூல் கண்டிருக்கும்.



பத்தினி பெண்போல
கரை தாண்டாக் கடல்
கார்மேக உருவெடுத்து
கொட்டிய பெருமழையில்
உடைப்பெடுத்த ஆற்றுநீர்
படி தாண்டி ஊருக்குள்.

குதித்து ஓடிய வெள்ளநீருக்கு
மதிக்கத் தெரியலையே
வீதிக்கு வந்து சாதித்ததென்ன
கழிவு நீரானதுதான் மிச்சம்
கலங்கபட்டு நீ—மக்களையும்
கண் கலங்க வைத்தாயே!

துன்பப் பெருவெள்ளம் சூழ
தத்தளிக்கும் தமிழக மக்கள்
தொலைத் தொடர்பும், மின்சாரமும்
தொடர்பற்று போக
போக்குவரத்தும் பாழ்பட்டு
போக்கத்த நிலையானது.

உயிரும், பயிரும் அழிவதைத்
தடுக்காத இறைவனுக்கு
என்ன குறையோ!
மழையே, நீ பெய்யாம போயிருந்தா
மனித விளைச்சலாவது

மகசூல் கண்டிருக்கும்.

எண்ணினாயோ!



கொட்டிய பெருமழையில்--சென்னையை
எட்டிய தூரம் வரை தேடுகிறேன்
மீண்டும் ஒரு பூம்புகாரைக்
கொண்டு செல்ல ஒத்திகையோ!

ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்—மழை
வெள்ளமா வந்தாலும், வரண்டு போனாலும்
அழிவது மக்கள் உயிரல்லவோ!

கங்கையை சுமந்த சிவனைப்போல்
மழைவெள்ளம் சுமக்கும் சென்னை
கங்கை சிவனுக்குக் கட்டுபட்டாள்
மழை ஆட்டிபடைப்பது மக்களையன்றோ!

தண்ணீர் தட்டுபாட்டால்—நாளும்
தவித்து நிற்கும் தமிழக மக்களை
கொட்டி தீர்த்த மழையால்
கொன்று குவிக்கலாமோ!

ஊரை சுற்றி நீரிருந்தால்
தீவு என்று கூறலாம்
தமிழகத்தை நீருக்குள் ஆழ்த்தினால்

தலைமுழுக எண்ணினாயோ!