ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பறிபோனதுண்டு



காபந்து
கடமையெனக் காப்பவர்கள்
கொள்ளாததால்

பந்(த்)து செய்வோமென
பாதிக்கப்பட்டோர்
பயமுறுத்த

முடிவில்
பாமர மக்கள்
பந்து ஆகிப்போகிறார்கள்

பந்து ஆட்டத்தில்
பந்துக்களின் உயிரும்
பறிபோனதுண்டு



வெள்ளி, 29 ஜனவரி, 2016

தெய்வத்தைப்போல.


முத்தமிட்ட காதலனை
மூடி மறைத்து
மானம் காத்த மேகம்
மழையை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பியது

மகாபாரதக் கர்ணன்
மண்ணில் பிறந்து
மழலைப் பருவத்தில்
ஆற்றில் விடப்பட்டதுபோல்

வானில் பிறப்பெடுத்து
வீழ்ந்த மழலை நீர்
வையகம் தொட்டதற்கும்
ஒற்றுமை உண்டுபோலும்

கலங்கத்தை மறைக்கக்
கையாண்ட முறையோ?
இருந்தும் ஈரமுண்டு
இருநெஞ்சங்களிலும்

தவழ்ந்து விளையாட
தடம் ஏதும் இல்லாம மழைநீர்
இடம் தேடி குதிக்கும்
அருவியென பேரெடுக்கும்

விழுமதன் வேகத்தில்
எழுகின்ற ஓசையால்
ஆடி நடுங்கும் செடிகொடிகள்
அச்சத்தில் வேர்த்திருக்கும்

மலைத் தாயின்
மார்பில் தவழும்
முல்லைச் சரம்போல
வெள்ளி ஆரமாகும்

நடனமாடும் தாரகைக்கு
ஒளியூட்டி மெருகேற்றும்
சூரியப் பார்வையால்
உயிரினங்கள் சொக்கி நிற்கும்

ஏற இயலாத உயிர்களுக்கும்
இறங்கி வந்து
தாகம் தணித்துக் காக்கும்
இறைவனைப்போல.


வியாழன், 28 ஜனவரி, 2016

மாற்றி சொன்னார்களோ!



காலை வேளையில்
நாயைப் பிடித்துக்கொண்டு
நடை பயணம்
மேற்கொள்ளும் முதியவரிடம்
முன்பின் அறியாத ஒரு
குறும்புக்காரர் கேட்டார்
“நாயோடு கிளம்பிட்டீங்கபோல
நடக்கவா” என்றார்
முதியவர் “ஆமாம்” என்றார்
குறும்புக்காரர் “நான் உங்களைக்
கேட்கவில்லை” என்றார்

அதுபோல
மாடுபிடி விளையாட்டில்
மாடுகளும் மனிதர்களும்
முட்டி மோதிக்கொண்டாலும்
ஆடுகளத்தில்
அதிகம் அடிபட்டு காயப்படுவதும்
மற்றவர்கள் தூக்கிச்செல்வதும்
மனிதர்களேயன்றி மாடுகளல்ல,
குறும்புக்கார மனிதரைப்போல
மாற்றி சொன்னார்களோ, என்னவோ!


சனி, 23 ஜனவரி, 2016

காதல்



இதய வீணை
மீட்டும் இன்னிசையில்
நாட்டியமாடும்
தாரகைகளாய்
இமைகள்

பரவசமடையும்
பக்தர்கள்போல்
பக்தியை அமைதியாய்
பகிர்ந்துகொள்ளும்
உள்ளங்கள்

மயங்கும் ஒருபக்கம்
தவிக்கும் மறுபக்கம்
விசித்திரமாய்
விளையாடும்
வனப்பும், நினைப்பும்

அதீத அன்பு
எதனிடம்
பெருக்கெடுத்தாலும்
அதுதான்
உண்மை காதல்

சுகமும், சோகமும்
சேர்த்துத்தரும்
இல்லை
தனித்தனியாய் தந்து
தவிக்கவிடும்

தடைகளை
தகர்த்து முன்னேறும்
முடியாதபோது
சேர்ந்தே
உயிர் துறக்கும்

பண்டு காமம்
தூய காதலாய்
ஏற்கப்பட்டது
இன்று காதல் காமமாய்

கற்பை இழக்கிறது.

வியாழன், 21 ஜனவரி, 2016

பொது மொழி

பூமியில் பூத்துக்குலுங்கும்
பூக்கள் ஏராளம்
ஒவ்வொரு பூவுக்கும்
ஒப்பற்ற அழகுண்டு, மனமுண்டு
பார்த்து இரசித்தவர்கள் பலர்
பறித்து சூடியவர்கள் ஒருசிலர்
இதுபோலத்தான் மொழிகளும்

முன்னோர்கள் தோற்றுவித்த
மொழிகளில்
எல்லோரும் அறிந்த மொழியாய்
எதுவுமில்லை
வந்த மொழிகளில்—இன்றும்
வாழ்ந்து கொண்டிருப்பது ஒருசில
வாயால் பேசப்பட்டதால்
வரலாறு படைக்கலையோ!

பாரிலுள்ள மக்கள் போற்றும்
பொதுவான ஒரே மொழி
அனைவரும் அறிந்த மொழி
அநுபவத்தில் கற்று தேர்ந்தாலும்
அகராதி இல்லாமலேயே அடிமனதும் அறியும்
அகிலம் உள்ளவரை வாழ்ந்திருக்கும்
இந்த காதல் மொழி அழியாது
கண்கள் பேசுவதால்


அருகதை வேண்டும்.

அமைதியாய் உறங்கும்
ஆழ்கடலை தட்டி எழுப்பியதுபோல்
சென்று கொண்டிருந்தது கப்பல்,
சினம் கொண்ட கடல்
செயலிழக்க வைத்ததுபோல் கப்பல்
செல்லமுடியாமல் நின்றது—மாலுமி
சோகத்தில் மூழ்கினார்

அவசரப்பிரிவில் பணிபுரியும்
அரசாங்க மருத்துவர்போல் மாலுமி
அசையாமல் படுத்திருக்கும்
நோயாளிபோல் கப்பல்
நோயை கண்டுபிடித்ததுபோல்
முடிவில் மாலுமி அறிந்தார்
சுக்கான் உடைந்துபோனதை

செல்வாக்குமிக்க பயணி ஒருவர்
பெரிய மருத்துவர்போல்
எல்லாம் கேட்டறிந்தபின்
எங்கே கையுறை என்று கேட்பதுபோல்
சுக்கான் எங்கே என்றார்?
உண்மையை சொன்னார் மாலுமி
“ கடலுக்கடியில் நீருக்குள்” என்று

பயணி எல்லாமறிந்ததுபோல்
எவருக்கும் தெரியப்போவதில்லை
ஏன் இந்த கவலை?
செலுத்துங்கள் கப்பலை என்றார்
ஆறுதல் கூறி அறிவுறுத்தவும்

அருகதை வேண்டும் 

பெரும்பாவம்

விளை நிலத்தில்
விழுகின்ற வியர்வைத்துளிகள்
விளக்கேற்றி வைக்காமல்
வேதனை பட வைத்ததும்

வெள்ளத்தில் அழிந்த பயிரால்
உள்ளத்தில் விளைந்த சோகத்தை
இறக்கிவைத்து ஆறுதல் கூறாமல்
விழிகள் கண்ணீர் வடித்ததும்

மேகம் பொழிந்த மழையால்
மண்ணு செழித்தாலும்
மனித வியர்வையும் காரணமென்பதை
மக்கள் நினைக்க மறந்ததும்

பார்த்து வியக்கும் படைப்பெல்லாம்
பூமியில் வாழும் மனிதர்கள்
சிந்திய வியர்வைத்துளிகளால்
சாதித்ததென எண்ணாததும்

பூவாசமும், உணவின் சுவையும்
புரிந்துகொள்கிற நமக்கு
உழைப்பவரின் வியர்வைதரும் வலியை
உணராதது பெரும்பாவம்


செவ்வாய், 19 ஜனவரி, 2016

பிரார்த்தனை

பிரார்த்தனை
பிராணனை ஒருங்கிணைத்து
மனிதன் உருவாக்கிய
மாபெரும் சக்தி

அளப்பரிய ஆற்றலின்
ஆதாரமையத்தைத் தொடுவதால்
அது சுயசக்தியின்
இருப்பிடமாகத் திகழ்கிறது

ஒருமுகப் படுத்தபட்ட
மனதுக்கு—சாதிக்க
முடியாததென்று
உலகில் எதுவுமே இல்லை

மனத்தை ஒருமித்து
முழு ஈடுபாட்டோடு
மாயவனுடன் ஒன்றிப்போவதே

மெய்யான பிரார்த்தனை

வேறொன்றுமில்லை.



போதி மரத்தடி
போதனையில்—புத்தன்
போதித்த வார்த்தைகளில்
பொன்போன்றது

உலகெங்கும் ஒத்தையாய்
உலாவந்து—எல்லா
உள்ளங்களோடும் ஒட்டி
உறவாடும் சொல்

அகிலத்து உயிரையெல்லாம்
அடிமையாக்கி மகிழும்
அன்னையை மட்டும்
தெய்வமாக்கி சிறப்பிக்கும்

தன்னுண்மை நிலையை
தியாகத்தின் மூலம்
வெளிபடுத்தி
உயர்ந்து நிற்கும்

அனைவரையும்
அரவணைக்கும் அன்பு
தன்னலமற்ற நிலையென்பதன்றி

வேறொன்றுமில்லை.