புதன், 30 மார்ச், 2016

உருவங்கள் எத்தனை?

அன்று சாதியை ஒழிக்க‌
பாரதி குரல் கொடுத்தார்
பொது நலம் கருதி

இன்று குரல் கொடுப்போர்
அவர்கள் இனத்துக்கு
அமைச்சரவை இடம் வேண்டி

அறியாமையா?
அறிந்த சுயநலமா?-இல்லை
சாதியை வளர்க்கவா ?

வரம் தரும் இறைவன்
வகுத்த உருவங்கள்
எத்தனை எத்தனை?

இலவசங்கள் தரும்
அரசியல்வாதிக்கு
அதைவிட அதிகமல்லவா!


நிம்மதி தானே!

சிந்தையிலே நீ புகுந்தால்
சிலை கூட கண்ணீர் விடும்
செய்யும் பணியால்
சோர்வடையா மனித உயிர்
சாகவும் துணியும்

மனசு அமைதியுற
தூசு எனக்கொண்டால்
லேசு தான்,
நெஞ்சில் நிலைக்கவிட்டால்
நஞ்சாய் அழித்து விடும்

அழையா விருந்தினராய்
அனைவரையும் காண வரும்
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாய்
உபத்திரவம் தந்து போகும்—இருந்தும்
விடுபட முடியாது மனிதரால்

கனிவாய் வந்தமரும்
காரியங்களைக் கெடுக்கும்- மாந்தரைக்
கண்ணீர் விட வைக்கும்
அழவைத்தது போதாதென
ஆடி வெறுப்பேற்றும்

வலியால் பின்னப்பட்ட
வலையே கவலை,
சிறு சிறு விஷயங்களை பெரிசுபடுத்தி
நெஞ்சில் கொள்ளாமல்

நீக்கினால் நிம்மதி தானே!

வேறு வழியின்றி.

வாழ்க்கைக் காசுக்கு
விரும்பி
மனம் தேடி அலைகையில்
மங்கையரின் வாசம்
தென்றலாய் வீசி
திசை மாற்றி அதனை
தடுமாற வைக்கும்

வெறுமையுணரும் கனவு
வசதி, வாய்ப்பு வேண்டி
முழுமையடையா மனத்தை
மீண்டும் உசுப்பிவிட
குடும்பம், குழந்தையென ஆனபின்
கைவிட்டு காணாமல் போகும்

வேறு வழியின்றி.

புதன், 16 மார்ச், 2016

குறைந்தா போய்விடும்?

இரவல் ஒளியில்
நீ சுடர்விட்டாலும்
வானில் வந்து
வானத்து இருளை போக்கும்
உன் நல்ல மனதை
உலகம் என்றும் நினைக்கும்

இருமுகம் உனக்கு
ஒருமுகம் கண்ட மாந்தர்
மறுமுகம் காண விழைவதுபோல்
நீலக்கடல் அலைகள் கூட
உன்முகம் கண்டு—அன்போடு
உயர்ந்தெழுந்து ஓடிவரும்

பூமியைப்போல
பூகம்பத்துயர் உனக்குமுண்டு
அந்த வேதனையை
அடுத்தவர் அறியாவண்ணம்
மறைக்கிறாயோ
மறுமுகத்தைக் காட்டாமல்

பாட்டிகள் போல
பேரக்குழந்தையை தூக்கிக்
கொஞ்ச ஏதுவாய்
வெண்மதியே நீ கூட
எங்கள் எடையைக் குறைத்து
தூக்கிக் கொஞ்ச ஆசையோ!

முகத்தை மறைப்பதும்
மறைக்காமல் போவதும்
முக்காடு அளவு சரியில்லாமல்—நாளும்
முகத்தின் தோற்றம் குறைவதும்
நவநாகரீக ஒப்பனையா? இல்லை
நாளடைவில் வாடிக்கையானதா?

உன் அழகு வதனம் கண்டு
வானத்துத் தேவர்கள்
வாரியிறைத்த வெண்முத்துக்கள்
கொட்டிக் கிடக்கிறதே
கொஞ்சம் அள்ளிக்கொடுத்தால்
குறைந்தா போய்விடும்?


வியாழன், 3 மார்ச், 2016

நினைக்கலையே!


இசையின் துணையோடு
இரவில் உலாவரும் இரவு ராணி
வெறுத்து விரட்டினாலும்
வெளியேற தயங்கிடுவாள்

பல அடுக்கு பாதுகாப்புக்கும்
பயப்படாத பொண்ணு அவ
காரியத்தில் கண்ணாயிருப்பா
கச்சிதமா முடித்திடுவா

புது ஆண்டு வந்ததுன்னா
புதுப்பெயரை சூட்டிக்குவா
பழக்கப்பட்ட பந்தம் போல
பலநாளு வந்துபோவா

பார்க்க சின்னவ தான்—ஆனால்
பூவுலகை ஆட்டி படைப்பா
தூக்கத்தைக் கெடுத்திடுவா
தொல்லைகளும் தந்திடுவா

வயித்தில பசியோடும்
வாயில ஊசியோடும்
பணிக்கு போய் வரும்
படிக்காத மருத்துவச்சி

வருஷம் ஒரு சீக்குக்கு
வழிகாட்டி உதவிடுவா
இந்த வருஷ சீக்குக்கு
ஜிகான்னு பேராம்

சனங்களோட இறப்பு விகிதம்
சரிஞ்சு போச்சுன்னு
இறைவன் கொசுவை படைத்து
எமனுக்கு உதவ சொன்னானாம்

சீனா இரண்டு குழந்தை
பெறலாமென சொன்னபோது--இப்போ
ஜிகா குழந்தையே வேண்டாமென
சமன் செய்ததாம்

பிறக்கும் சிசுக்களின் அறிவையும்
சிரசையும் பாதிக்கவைத்து—ஜிகா
தன்னை காத்துக்கொள்கிறதோ!

தாயின் மனத்துயரை நினைக்கலையே!

செவ்வாய், 1 மார்ச், 2016

தங்க இடம் தந்தனரோ!



கள்ளமில்லா கடல் மீன்கள்
கடல் தாண்டி
கள்ளாமொழி கடற்கரையில்
கரை ஒதுங்கியது—கணிகையரின்
கள்ளவிழிப்பார்வையா? இல்லை
கள்ள வழிக்காட்டியதா?

எதுவானபோதும்
கல்லாமொழி பேசும் மீன்களைக்
கண்ட கடலோர தமிழ்மக்கள்
வந்தாரை வரவேற்று பண்போடு
வாழ்வளிக்க எண்ணி

தங்க இடம் தந்தனரோ!