வெள்ளி, 29 ஏப்ரல், 2016

இரண்டும் அழிந்துவிடும்.


பெத்தெடுத்த பிள்ளைபோல
பத்திரமா வளர்த்தெடுக்க
பஞ்ச பூதங்களையும்
படைத்து அருளியவளே!
உன் பெருமை போற்றாமல்
உன்னை அழிக்கலாமோ?

சுயநல மாந்தராலே
சீரழிந்து போனவளே!
காடெல்லாம் அழித்ததாலே
கார்மேகம் தோன்றாமல்
குடிநீரும் கிடைக்காமல்--ஊருக்குள்
சுற்றித்திரியுது வனவிலங்கு
சிறைபட்டு வாடுது ஊர்மக்கள்

பேராசை மனிதர்களால்
தோண்டி எடுத்த மணல்
தோராய மதிப்பாலே
குறைவாகிக் குறைகண்டபோதிலும்
கொள்ளி வைத்ததென்னவோ
இயற்கை வளத்துக்குத் தானே!

குளத்தின் கரையோரம்
குடியிருக்கும் மக்களாலே
குளத்தில் குடியேறும்
குப்பை, கழிவுகளால்
வெட்டவெளி மெத்தையாகி
உதவாமல் போகும் நீர்
இயற்கையின் பாதிப்பு தானே!

இயற்கையைக் காத்து
இயற்கையோடு
ஒன்றிணைந்து வாழ்ந்தால்
மண்ணும், மானுடமும்—என்றும்
மரியாதை பெறும்
இல்லையென்றால்
இரண்டும் அழிந்துவிடும்


வியாழன், 21 ஏப்ரல், 2016

தரம் தாழ்ந்து போனது



இருளை சுமக்கும் வானம்
இடுப்பு வலி கண்டதுபோல்
குரலெழுப்பும் மேகம்—பிறந்து
முகம் காட்டி மறைந்த ஒளியால்
ஊரே புலம்பி அழும் காட்சி

ஓலைக் குடிசையில்
உயிர் வாழும் ஏழைக்குக்
கொட்டி கொடுப்பதுபோல்
கூரை வழி குடியேறிய
வருண பகவான்

கணவன் ஈட்டும் பணம்
கைகொடுக்காத நிலையில்
உணவு, உடையோடு—இப்போ
உறங்க இடமும் இல்லாமல்
அவள் கதறி அழுத காட்சி
கல் நெஞ்சையும் கரைத்திருக்கும்

நல்ல குடும்பப் பெண்ணானதால்
நல்ல தங்காள்போல் முடிவெடுத்து
தன் இரு குழந்தைகளோடு
தானும் ஆற்றில் குதித்து
உயிர் துறந்தாள்

ஏழை, எளியவரைத்தான்
எப்போதும் பிடிக்கும்
இறைவனுக்கு
காணிக்கையாய் அவர்கள்
கொடுக்கும் காவுகளால்

ஆறுகள்கூட அன்னையாய்
அரவணைத்து காத்திட்டாலும்
சோற்றுக்கு தவிப்பவரோடு
சேரும்போதெல்லாம்—பிணத்தை
பிரசவிப்பது முறையோ?

பாவ, புண்ணியம்
பார்க்காதோ ஆறு!
அதற்கு ஏது அறிவு?
தாயான ஆறுகூட—என்னில்
தரம் தாழ்ந்து போனது.

(தஞ்சையில் நடந்த உண்மை சம்பவம்)


புதன், 13 ஏப்ரல், 2016

மரியாதை உனக்குமுண்டு


மரியாதை
கல்விதனை கற்கவரும்
கலங்கமில்லா உள்ளங்களில்
கொண்டு சேர்க்க
குரு உபதேசிக்கும் வேத சொல்

பண்பாடு ஒருபக்கம்
பயம் மறுபக்கம்—இரண்டும்
கலந்த ஒரு மந்திரசொல்
வாழ்க்கை பயணத்திற்கு
உதவும் தந்திரசொல்

அறிவை புகட்டும்
ஆசிரியருக்கும், பெற்றோர்க்கும்
கைமாறாய் கொடுக்கும்
குழந்தைகளின் உண்மை
உணர்வின் வெளிப்பாடு

தந்தை சேர்த்த சொத்தை
தனயன் எடுத்து
ஊரு சனத்துக்குக் கொடுத்து மகிழும்
நல்ல உள்ளம் படைத்தவன்போல்
நீயும் இருப்பதால்

பகலவன்போல் விழித்திருக்கும்
பெற்றவரின் முன்
பயபக்தியால் வருவதை தவிற்கும்
நல்ல பிள்ளைகளைப்போல்
நீயும் இருப்பதால்

தந்தை உறங்கையிலே
தொந்தரவு செய்யக்கூடாதென
இரவில் வெளியேறி நட்புகளோடு
ஊர் சுற்றும் இளைஞர்கள்போல்
நீயும் இருப்பதால்

வானத்து சந்திரனே!
நீ சூரியனின் புத்திரனோ!
மண்ணில் வாழ் பிள்ளைகள்போல்
மரியாதை காப்பவனே—எங்களின்
மரியாதை உனக்குமுண்டு.



ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

காலத்தின் கொடுமை.

மாயவனின் அருளுக்கு
மயங்கும் பக்தகோடிகள்போல்
உனக்கும் பெரும் மதிப்புண்டு—இளமையில்
உன் தரிசனம் கிடைக்காதபோதும்
பெரியவனாய் வளர்ந்தபின்னே
போற்றி வழிபட மக்கள் மறப்பதில்லை

நல்லவர்கள் நட்பால்
நலம்பட வாழ்தல்போல்
உன்னருளால் உயர்வு பெற்றதை
ஊருசனம் அறிந்துகொண்டதும்
பக்கத்து வீட்டாரும்
பாசத்தைப் பொழிகின்றார்

விதி செய்த சதியாய்
சாதி, மத சச்சரவால்
சண்டையிட்டு மடியும்
உலக மாந்தர்போல்—உனக்கும்
உயர்ந்தவர், தாழ்ந்தவரென
வேற்றுமை உண்டுபோலும்

செத்து, கருத்த மனிதன்
சவப்பெட்டிக்குள் அடைபடுவதுபோல்
நீயும் வரும்போதே
நிறம் கருப்பென பேரெடுப்பதால்
மற்றவர் அறியாவண்ணம் பெட்டிக்குள்
மறைக்கப்படுகிறாய்

உச்சத்தில் உன் மதிப்பு
உலகமோ உன் காலடியில்—இருந்தும்
கொலைக்கும், கொள்ளைக்கும்
கொடும் தீவிரவாதத்துக்கும் நீ
காரணமாகிப்போனது

காலத்தின் கொடுமை.

புதன், 6 ஏப்ரல், 2016

பாவமல்லவோ!

வகிடெடுத்து பிளந்ததுபோல்
வரண்டுபோன பூமி
பாளம், பாளமாய்—பசிக்கு
பகிர்ந்தளித்ததுபோல்
பார்வைக்கு ஒரு காட்சி
இயற்கையும் அரசியல் நடத்துதோ!

உள்ளத்தில் கொதிக்கும்
உழவரின் பசிக்கொடுமை-கண்ணீராய்
விழிகளில் பொங்கி வழிய,
உறவாகிப்போன வறுமையால்
உழும் ஏரைப்போல் உருமாறி--போக
வழி காட்டுதோ!

ஆளில்லா வீடுதேடி
அகப்பட்டதை அபகரித்து
உயிர்வாழும் படித்தத் திருடனுக்கு
உழைத்து முன்னேற—அவன்
உள்ளம் நினைக்கலையா?—இல்லை
வேறுவழி தெரியலையா?

படுத்தியெடுக்கும் பசியால்
பண்ணுகிற தவறை
பலமுறை செய்வதால்
பழக்கமாகும் சுபாவத்தை
போக்கமுடியுமா?—அது
பாவமெனத் தோணலையோ?

நிலத்தில் வாழ் உயிர்களுக்கு
நித்தம் நீரும், சோறும் கிடைத்து
நிம்மதியாய் வாழவழி தேடாமல்
மாந்தரை வறுமையோடு வாழ
பழக்கப்படுத்தும் சுபாவமும்
பாவமல்லவோ!