ஞாயிறு, 26 ஜூன், 2016

காலமாகாதோ!



பெருமை ஏதுமில்லா
ஒரு பேருந்து நிலையம்,
ஓருவழியா ஊருக்குள் வந்து
இளைப்பாறும் பேருந்து—அதில்
அடித்து பிடித்து ஏறும் பயணிகள்

பயணிகளின் செயலை
பார்வையால் தண்டிக்கும்
பகலவன்—பசிக்கு
பிச்சையெடுக்கும் ஒரு தாய்
பச்சிளம் குழந்தையோடு

ஆதவனும் ஆதரவு காட்டாமே
அந்தத் தாயையும் பாடாய்படுத்தி
மரணத்துக்கு வழிகாட்டுவதும்,
வெப்பம் தாங்காமே குழந்தை
வீறிட்டு அழுத காட்சியும்

பாவத்தின் உச்சமா?
பிள்ளையை கவணிக்காதது
பாசத்தின் துச்சமா?
வறுமையை போக்க
வழியேதுமில்லையா?

கலங்கித் தவிப்பவரை
கைகொடுத்து காக்காமே
கருவறைக் கடவுள்போல்
கண்டுகொள்ளாதிருந்தால்
காலமாகாதோ ஏழை உயிர்!



வழிபடும் தலம்


இறைவனை—பகலின்
ஒளியைக் காட்டி
உண்டு என்றார் சிலர்,
இருளைக் காட்டி
இல்லை என்றார் சிலர்,
இன்ப துன்பம்போல்
எங்கும் எதிலும்
இருப்பானென
அறிவுறுத்துவதுமுண்டு

எதுவானபோதிலும்
இன்னா செய்யாத
இதயமும்,
இல்லார்க்குக் கொடுக்கும்
ஈகையும்—எவனிடம்
நிறைந்திருக்கிறதோ
அவனே இறைவன்
அவன் பாதம்பட்ட

இடமே வழிபடும் தலமாகும்

பணங்காசு பெரிசல்ல!



. பொறந்த ஊரு திரும்பிவந்து
பொழைக்க ஒருவழிதேடி
தையக்கடை ஒன்னு வச்சு
தொழில் நடத்தும் பரமசிவம்
பாதி ஆயுளைக் கடந்தவரு
பாம்பேயில் தொழில் கற்றவரு

அடிமைபோல் உழைத்து
அரசன்போல் வாழ எண்ணி
அவர் ஒவ்வொரு ஆண்டும்
வரும் தீபாவளித் திருநாளில்
வந்து குவியும் துணிகளை
வாங்கிக் கொள்வார்

தைக்கக் கொடுத்தவர்கள்
துணிகேட்டு வரும்போது
தந்துபோனது நினைவுக்கு வரும்,
நாளை வர நயம்பட சொல்லி
நேர்மையை நிலைநாட்டும்
நாணயஸ்தர் பரமசிவம்

தீபாவளிக்கு இருதினம் முன்
விளக்கு, ஒலிபெருக்கி வந்தமரும்
விடியவிடிய கடை களைகட்டும்
உறங்காத வேலைக்கு
உத்திரவாதம் தருவதுபோல்
ஊர்மக்களுக்கு நம்பிக்கையூட்டும்

தீபாவளிதின விடியலில்
துணிகளை தந்து முடிந்தபின்
வீடுசென்று குளித்து
ஒரு பழைய சட்டையொன்றை
போட்டுக்கொள்வார்
பின்பு காலைசாப்பாடு

ஊருக்கு துணி தைத்து
புத்தாடை தரும் நீங்கள்
உங்களுக்கு ஒன்னு தச்சுக்கிலையா?
என மனைவி வினவ—அவர்
எனக்கு எல்லா நாளும் தீபாவளி
என்று சொல்லி படுக்கபோனார்

அந்திசாயும் பொழுதில் எழுந்த
அவர் நண்பர்களோடு
அடுத்த ஊரில் சினிமா பார்க்க
ஆசையோடு புறப்பட்டார்,
மனசு நிறைஞ்சிருந்தா
பணங்காசு பெரிசல்ல,


ஞாயிறு, 19 ஜூன், 2016

ஆதாரமாய் நீ இருப்பதால்



இயற்கை படைத்த பஞ்ச பூதங்களில்
நீயும் அதனுள் ஒன்றென
வழிபடும் மானுடத்தை
வாழவைப்பது போல்—நீ
காட்சி தந்தாலும்

நீருக்கும், நெருப்புக்கும்
தீரா பகையிருந்தும்,
வீசும் காற்றே உன் தீண்டலுக்கு
வரம் வேண்டி இரண்டுமே
ஏக்கமுடன் காத்திருக்கும்

என்றும் உன்னோடுதான்
இரண்டுமே உறவாடும்
யாரோடு நீ சேர்ந்தாலும்
வேரோடு அழித்து நாசமாக்கும்
விவேகம் உனக்குண்டு

இருந்தும் மண்ணின் உயிர்கள்
உன்னை வெறுப்பதில்லை
அவைகளின் உயிருக்கு
ஆதாரமாய் எப்போதும்

நீ இருப்பதால்.

தனி மனிதனல்ல, சமுதாயம் தான்.



வரதட்சனையால
வாழ்வை இழக்கிறாயே
பெண்ணே—அதனால
பிறக்குமுன்னே பாரமானாயோ

பணத்தின் மோகத்தால
மானம் இழக்கிறானே ஆண்
விலைமகனாய்
விலை போகிறானே.

சீதனம் குறைந்ததால
சீதேவி சிறப்பிழந்தாள்
மணமேடை மதிப்பிழந்து
மூதேவியென பேரெடுத்தாள்

அக்னி சாட்சியாய்
அரங்கேறும் திருமணம்.
அடங்கிப் போவது
பத்தினியின் செயலென
பெண்களை அடக்கி வளர்ப்பதால்
பிறப்புரிமை கிடைப்பதில்லை

அடக்கி ஆளுகின்ற
ஆண்களின் ஆணவத்தால்
அவளோட இறப்புக்கும்—அதுவே
சாட்சியாய் காட்சி தரும்.

வெட்கப்பட வேண்டியது
தனிமனிதனல்ல, சமுதாயம் தான்.




செப்டம்பர் பதினொன்று


செப்டம்பர் பதினொன்று
அமெரிக்க நாட்டின்
மானிட இருப்புக்கு
சிதை மூட்டிய கரிநாள்

பழிக்குப் பழியென‌
உள்ளத்தில் உருவான‌
அக்னியை
உருவாக்கி வார்த்ததில்
நெடிதுயர்ந்த‌
கட்டிடத்தின் உச்சியில்
தீப்பிழம்பு

நெஞ்சங்கள்
பதைபதைக்க‌
உல‌க‌மே ஓல‌மிட‌
ச‌ரிந்து,விழுந்து
புதைந்த‌து
ம‌னித‌ உயிர்க‌ளோடு

க‌ட்டிட‌த்தோடு
உட‌ன்க‌ட்டை ஏற‌
அப்பாவி ம‌னித‌ர்க‌ளை
அழித்த‌து
நியாய‌மா?

உயிர‌ற்ற‌ உட‌ல்க‌ள்
எரிக்க‌ப்ப‌டும்- இல்லை
புதைக்க‌ப்ப‌டும்
ம‌த‌ங்க‌ள் ஏற்றுக்கொண்ட‌
ம‌ர‌பு இது

இங்கு
உயிரோடு உட‌ல்க‌ள்
சிதை வைத்து
புதைத்த‌து
ம‌னித‌ ம‌ர‌பை
மாற்றிய‌மைத்த‌ செய‌ல்
நியாய‌மா?

ஏன் இந்த‌க்
கொலைவெறி
அட‌க்கி ஆள‌ நினைக்கும்
ஆண‌வ‌மா?
அட‌ங்க‌ம‌றுத்து
மாற்றுவ‌ழி தேடும்
தீவிர‌வாத‌மா?

காய‌ம்ப‌ட்ட‌
சிறுபுழுகூட‌
திருப்பி க‌டிக்கும்போது
ஏனிந்த‌ ப‌கையுண‌ர்வு?
ஒன்றுப‌டுவோம்
தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌
பாடுப‌டுவோம்.


வியாழன், 16 ஜூன், 2016

மாசற்றது, மரியாதைக்குரியது.

ஒற்றையில் வாழும் ஆசிரியருக்கு
ஒருவருமில்லை
வயதோ ஐம்பது
வாழ்க்கையோ பரிதாபம்

தனிமையின் தவிப்புக்கு
தீரவழி கண்டதுபோல்
சுற்றித்திரிந்த நாயொன்றை
சேர்த்துக்கொண்டார் வீட்டில்

நம்பிக்கை வீண்போகவில்லை
நட்பையும், நன்றியையும் காட்டிய
நாய் வீட்டையும் காத்தது
நன்றி சொன்னார் இறைவனுக்கு

நாய் இரயில் நிலையம் வந்து
நாளும் ஆசிரியரை பணிக்கு
வழியனுப்பும் காலையில்—அந்தியில்
வரவேற்று அழைத்து செல்லும்

வாடிக்கையானது நாய்க்கு
ஒரு நாள் வரவேற்க வந்தபோது
வந்துசேராத ஆசிரியரால்
வேதனையில் வாடியது

அன்றுமுதல் நாய்க்கு
இரயில் நிலையம் வந்துபோவது
விடாது தொடர்கதையானது--அதில்
வருடம் ஒன்று கடந்துபோனது

இன்று இறந்துகிடக்கிறது
அதே நாய் இரயில் நிலையத்தில்,
ஆசிரியர் பணியிடத்தில்
இறந்துபோனதை அறியாமலே

விலங்குகளின் நேசமும்,நேயமும்
விலகாது என்றும் நெஞ்சைவிட்டு,
மனிதநேயத்தை விட
மாசற்றது, மரியாதைக்குரியது.

உழைப்பு தானே உயிர்மூச்சு

மலைவாழ் மக்கள் வாழும்
மலையூர் கிராமம் ஒன்றில்--வயது
எழுபதைத் தாண்டி
எடுத்துக்காட்டாய் வாழும் முதியவர்,
ஊரோர மதுரை வீரன்போல
உடல்வாகு

ஒருநாள் கூட
ஓய்வு எடுக்காத உழைப்பாளி
வயலுக்கு இவர் வந்தபின்
வானத்து சூரியனும் எழுவான்
அனைத்து வேலைகளையும்
அலுக்காமல் தானே செய்திடுவார்

உச்சி வெய்யிலுக்கும்
ஓயாது பெய்யும் மழைக்கும்
ஒதுங்காத தன்மானக்காரர்
எதையும் பொருட்படுத்தாமல்
உழைப்பையே பெரிதெனக்கொண்டு
உயிர் வாழும் உத்தமர்

நெற்றி வியர்வை சிந்தி
நிலத்தில் பாடுபட்டும்
நீர்வரத்து இல்லாமல் கெடும்
பெய்து கெடுக்கும் மழை
பெய்யாமலும் கெடுக்கும்
பூச்சி, விலங்கு வந்து அழிக்கும்

விதைத்து, பாதுகாத்து,
வளர்த்து, அறுவடை செய்து
விற்று முடித்து
நாலு காசு பார்ப்பதற்கு—அந்த
நாரயணனே வந்தாலும்
உத்தரவாதம் தருவானா?

விளைச்சல் இல்லாமப்போனால்
வாங்கிய கடன் எகிறும்
விளைச்சல் இருந்தாலோ
சந்தை விலை சரியும்—இப்படி
சொந்த எசமானரையே
சாகடிக்கும் விவசாயம்

எல்லாம் அறிந்திருந்தும்
ஏனிந்தக் கடும் உழைப்பு
இந்த வயதில் உழைக்காமல்
இருக்கலாமே என்றதற்கு—அவர்
“இத்தனை பாடுபட்டும்
இறக்க வழிகாட்டும்போது

உழைக்காமல் இருந்தால்
வயித்துக்கு வழி ஏது?—அன்றே
மண்ணோடு மண்ணாக
மண்ணுக்கு துணைபோவேன்” என்றார்
மண்ணை தெய்வமா மதிப்பவருக்கு

உழைப்பு தானே உயிர்மூச்சு.