திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மனசிலும் ஈரம் வேண்டும்

மண்ணில் வாழ் மாந்தருக்கு
மஹாபாரத இதிகாசம் தந்து
பாரத தேசத்தின் பண்பாட்டை
பெருமைபட வைத்தவர்
பகவான் வியாசர்                                  

பண்டைய மக்களின் தர்மத்தை
போற்றி புகழ்பாடும் மாந்தர்
இன்று வேறுபட்டு போனதேன்?
இல்லையென்று வருவோர்க்கு—இல்லை
என்று சொல்ல இதயம் இல்லையா?

அனைத்து உயிர்களையும்
அரவணைத்து உதவும் நன்மை
எதுவோ அது புண்ணியமாகும்,
எந்த ஒரு உயிருக்கும்
செய்யும் துன்பம் பாவமாகும்

எல்லா மதங்களும் இதை
ஏற்றுக் கொண்டது தான்
இருந்தும் இன்றைய பொழுதில்
சமூக அக்கறை சீர்கெட்டதா—இல்லை
செத்தழிந்ததா?

எங்கும் சமூக அக்கறை தான்
எல்லாவற்றிற்கும் அடித்தளம்,
மரம்,செடிகளுக்கு மட்டுமல்ல—ஈரம்
மண்ணில் வாழ் உயிர்களுக்கும் அவசியம்

தருவதற்கு மனசிலும் ஈரம் வேண்டும்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

வழிபடும் தலம்

இறைவனை—பகலின்
ஒளியைக் காட்டி
உண்டு என்றார் சிலர்,
இருளைக் காட்டி
இல்லை என்றார் சிலர்,
இன்ப துன்பம்போல்
எங்கும் எதிலும்
இருப்பானென
சொல்வோருமுண்டு

எதுவானபோதிலும்
இன்னா செய்யாத
இதயமும்,
இல்லார்க்குக் கொடுக்கும்
ஈகையும்—எவரிடம்
நிறைந்திருக்கிறதோ
அவனே இறைவன்
அவன் பாதம்பட்ட
இடமே வழிபடும் தலமாகும்


கொடுக்க மனமில்லையோ!

மண்ணில் வாழ் மந்தருக்கு
மாயவன் தந்த பரிசு
குடும்பமெனும் வாழ்க்கை,
ஆண்டவனுக்குக் கோவில் போல்
ஆன்மாக்களுக்கு ஒரு குடும்பம்

கடவுளை வழிபட்டு
கோவிலில் உட்கார்ந்திருந்த போது,
அருகில் அமர்ந்திருந்த பெரியவரை
அறிமுகம் செய்து வைத்தார்
அருமை நண்பர்

“ இவர் ஒரு கோடீஸ்வரர்
இப்ப கோவிலே கதின்னு
இங்கேயே தங்கிவிட்டார்,
சிறகொடிந்த பறவைபோல
உறவுகளை இழந்து தவிக்கிறாரென்றார்”

பத்து வருடங்கள் முன் வீட்டம்மா
போய் சேர்ந்ததும்—வணிகத்தில்
பக்கபலமாயிருந்த
ஒற்றை மகனும் மாரடைப்பால்
ஓராண்டுக்கு முன் மாண்டு போனதால்

ஆதரவற்று அநாதையானார்,
அளவில்லா சொத்து
அரண்மனைபோல வீடு
அனைத்தையும் துறந்து—ஆண்டியாய்
ஆலயம் வந்து அமர்ந்துவிட்டார்

கொடுத்ததை வாங்கி உண்பார்
கிடைக்காதபோது பட்டினி—இறைவா
கோடி கொடுத்ததைவிட, அவருக்குக்
கோணாமல் குடும்ப வாழ்வை
கொடுக்க மனமில்லையோ!


மரியாதை பெறும்

வெள்ளிப் பணத்துக்கு
விரைந்தோடும் மாந்தர்
தொலைதூர பயணம்—அதில்
தொலைத்துவிடும் சொந்தபந்தம்
முற்றும் துறந்ததுபோல்
முடங்கிப்போகும் உணர்வுகள்

ஒற்றுமையாய் வாழாமல்
உறவுகளை ஒதுக்கி வைத்தால்
வாழ்க்கை பயணம்
வளம் பெறுமா?—இல்லை
தடைபட்டு, தடுமாறித்
தடம் புரளுமா?

நாகரீக வளர்ச்சியில்
நாம் இன்று வாழ்ந்தாலும்
அன்பையும், உறவையும்
அரவணைக்காது போனால்
நிம்மதியும், மகிழ்வும்
நிலைக்குமா வாழ்வில்?

உறவுப்பாலம் சிதைந்ததால்
விவாகரத்தென திருமண உறவும்
வீதிக்கு வரவில்லையா?
சீர்கெட்டுபோன உறவால்
சீரழியும் கலாச்சாரம்
சிறக்குமா சமுதாயம்?

உறவுகள் தான் வாழ்வில்
இறுதி வரை துணை நிற்கும்
மறக்காமல் வாழ்ந்தால்
மானுட வாழ்வும் முழுமையுறும்
மக்கள் சமுதாயமும்
மரியாதை பெறும்


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

திறவுகோல்கள்


எல்லா மொழிபோல
இதுவும் பழமையானது,
பழம் போன்று இனிக்கும்
பாரிலுள்ளோர் விரும்பும்
சாகா வரம் பெற்ற முதுமொழி

சொல்லும், பொருளும்
செல்வாக்கு பெற்றது,
அறிவுக் களஞ்சியமென
அகிலம் போற்றுது—இதற்கு
இலக்கிய மதிப்புமுண்டு

அநுபவத்தில் விளைந்த மொழி
அரவணைத்து காத்த—பண்பாட்டின்
அரிய பொக்கிஷம்,
சமுதாயத்தின் மனப்போக்கை
சிறப்பாக எடுத்துக்கூறும்

பேச்சு வழக்கில்
பெருமை சேர்த்த சொற்கள்,
பலருடைய அறிவாலும்
புத்தி சாதுர்யத்தாலும் வடிவம் பெற்று
ஆபரணமாய் ஜொலிக்கும்

அறிவால் உருவாகும் பழமொழிகள்
அறிவையும் வளர்க்கும்
உயர் கருத்துக்களை எளிமையாக்கி
உணரவைக்கும் பழமொழிகள்

சிந்தனையின் திறவுகோல்கள்

நியாயமா? இல்லை அநியாயமா?


ஊருக்குள் வாராத நீர்
வெள்ளந்தியாய் ஓடிவந்து
வெள்ளமா பெருக்கெடுத்து
வாரியெடுத்துபோன குடிசையால்
வாழ்விழந்து வசிக்க இடமின்றி
வீதிக்கு வந்த ஒரு தாய்

கட்டிய கணவனுகோ
கைகொடுத்து உதவுவதுபோல்
குடிப்பழக்கம்,
கடவுளுக்கு என்ன கோபமோ?
கரை சேர்க்க எண்ணாம—அவனை
கண்மூட வைத்துவிட்டான்

துடுப்பிழந்த ஓடம்போல்
தத்தளித்துத் தவித்த தாய்,
தன் பச்சிளம் குழந்தைக்கு
துணையாய் வாழ எண்ணி
தனிமையிலே போராடி-- சாலையோரம்
தான் வசிக்க இடமொன்று பெற்றாள்

பரிதவித்து நித்தம் வாழும்
பாசமுள்ள தாய், ஒரு நாள்
பகலவன் சாய்ந்து இருளானபின்
பசியாறி படுத்துறங்குமுன்
பச்சிளம் சிசுவின் காலில்
புடவை நுனியால் கட்டிவைத்தாள்

சண்டாளப் பாவிகள் இரவில்
சமயம் பார்த்து சிசுவை எடுத்து செல்ல,
சேயைக் காணாதத் தாய்
சோகம் தீராம
சொல்லி அழுத காட்சி
சொன்னாலும் நெஞ்சு தாங்காது

உலகாளும் உமையவளே!
உனை நம்பி வாழ்ந்தவளை
உதவிக்கரம் நீட்டி காக்காதது முறையோ?
உறவிழந்து, வீடிழந்து வாடுவது
உனக்கொன்றும் தெரியாதோ!—நீயே சொல்
உன் செயல் நியாயமா? இல்லை அநியாயமா?