புதன், 28 செப்டம்பர், 2016

தெரியாதா என்ன?

வயலு, தோப்புன்னு
வசதிக்குக் குறைவில்லை
ஊரு பழைய நாட்டாமேன்னு
பேருமுண்டு பெரியவருக்கு,
பேர கெடுப்பதுக்கின்னே
பிறந்தது போல
பிள்ளைகள் இரண்டுபேரு

பருவத்தில் படித்து
பட்டம் பெறாம—பிள்ளைகள்
வட்டம் அமைத்து
வெட்டியாய் ஊர் சுற்ற,
வெகுட்சியுற்ற பெரியவர்
விவசாயம் பார்க்க சொன்னார்,
பிள்ளைகளோ வெளிநாடு
போய் வேலையில் அமர்ந்தனர்

நட்ட பயிரெல்லாம்
நீர் வரத்து இல்லாம—பூமி
பாளம், பாளமாய் பிளந்து
பயிரெல்லாம் கருகி சாய,
பொறுப்பா விவசாயத்தை
பார்த்துக்க ஆளில்லாம—விரக்தியுற்ற
பெரியவர் மனமொடிந்து

வரப்போரமா இருக்கும்
மரத்தில் தூக்கிட்டு
மரணத்தைத் தழுவினார்,
சாவுக்குக் காரணம்
கேட்காத பிள்ளைகளா? இல்லை
கேட்டும் வராத காவிரியா?

காவிரிக்கு தெரியாதா என்ன?

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

நாமெல்லாம் மனிதர்கள்.

மனித தாகத்துக்கும்
மண்ணின் தேகத்துக்கும்
தண்ணீர் வேண்டி
தவித்தபோதெல்லாம்—யாரும்
நீதியை மதிக்கலையே!

தாய்மார்கள்
தாய்ப்பாலுக்கு தடை
போடாதவரை
காவிரியும் தாயாய்த்தான்
காத்து வளர்த்தாள்

இறைவனைக் கேட்டுகிட்டா
இங்கு வந்து பிறந்தோம்,
வசிக்கவும், நேசிக்கவும்—நாளும்
யாசிக்கும் நிலையில் நாம்,
காக்கும் பொறுப்பு அவனுக்கேது?

கண் கவசமும்,
கடிவாளமும்
குதிரைக்கு போடுவார்கள்
பார்த்தது உண்டு
பாயும் காவிரிக்குமா?

மடியில் பால் சுரக்கும்
உயிர்களுக்கு தான்
மனசில் பாசம் சுரக்குமாம்
நல்லவேளை
நாமெல்லாம் மனிதர்கள்!


என்ன நியாயம்?

இறைக்கு
பிரம்மா,
திருமால்,
சிவனென
மும்மூர்த்திகள்

கலைக்கு
இயல்,
இசை,
நாடகமென
முத்தமிழ்

வணங்குதற்கு
தாய்,
தந்தை,
குருவென
மூவர்

மானுட பருவத்திற்கு
இளமை,
காளை,
முதுமையென
மூன்று

எல்லாம் மூன்றாக
இருந்தும்
ருசிக்கு மட்டும்
அறுசுவையோ!

என்ன நியாயம்?

வியாழன், 22 செப்டம்பர், 2016

கைகொடுக்க வேணுமம்மா!


பக்கத்து வீடுகளில்
பாசம் பொங்கி வழிந்த
பொன்னான காலமது,
மடிந்த மனிதர்களோடு
முடிந்தது நம்பி வாழ்ந்தது

பங்கு பாகம்
பிரிக்காதபோது
பாசமுள்ள தாயாய்த்தான்
ஒரு குறையுமில்லாம
ஓடிவந்து காத்தவ நீ

அடுத்த வீட்டு பிள்ளையென
அரவணைக்க மறந்த நீ
இப்போ மீண்டு வருகிறாய்,
தாயைத்தேடும் சேயைப்போல
தவிக்குது என் மனசு

ஊருசனம் தாகம் தணிய
உன் திருமுகம் காட்டம்மா,
நட்டபயிர் எழுவதற்கு
நீ நடந்து வாம்மா!
விவசாயி உயிர்வாழ
வாய்க்கால்வழி வந்து சேரம்மா!

ஏழை வயிற்றில்
எப்போதும் பாலை வார்க்க
காலம் முழுதும் உன்
கருணை உள்ளம்

கைகொடுக்க வேணுமம்மா!

சொந்தங்கள் தானே!


ஓம்
பிரணவ மந்திரம்,
சல்லல்லாஹூ
தொழுகையின் ஓசை,
ஆமென்
ஆன்மாவின் அமைதி,
புத்தம்
சரணம்,
மானுட நெறிமுறைகள்
அத்தனையும்
இவைகளுக்குள்தான்
அடங்கிவிடுகிறது,
சம மதமென்று
சகலரும்
சம்மதமானால்
மண்ணில் வாழ்
மாந்தரெல்லாம்

சொந்தங்கள் தானே!

புதன், 14 செப்டம்பர், 2016

எதையுமே திணிப்பதில்லை

தாய்ப்பாலை விட—சிறக்குமா
தெய்வத்தின் அபிஷேக நீர்?
அம்மாவின் கருவறைக்கு
ஈடாகுமோ சாமியின் கருவறை?

மந்திரிக்கப்பட்ட கயிறு தரும்
மகிமையைவிட
தாயின் தொப்புள் கொடிக்கயிறு
தரும் பாதுகாப்பு மகத்தானது

ஆன்மிகம் என்பது வாழ்வியல்
அது அன்பால் மட்டுமே ஆனது
அனைவரிடமும் அன்பு செலுத்தி
அரவணைத்து வாழ்வதே ஆன்மிகம்

ஆண்டவனை வேண்டுகிறோம்
அன்பு காட்டவும்—நாம்
கேட்ட வரங்கள் அத்தனையும்
கிடைக்க வேண்டியும்

இதையெல்லாம் நாம்
அடுத்தவருக்கு செய்தோமா?
இறுக்கி மூடிய மனதுக்குள்
இறைவன் எப்படி இருப்பான்?

இந்தியத் தத்துவங்கள் ஏராளம்
அதில் எல்லாமும் இருக்கின்றன
அதன் பெரும் சிறப்பு—நம்மீது

எதையுமே திணிப்பதில்லை

புதன், 7 செப்டம்பர், 2016

உபதேசமோ!

கூடி ஒருமித்து வாழும்
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்
காரணம் தெரியாமலேயே
கசப்பு நிகழ்வுகள்
தோன்றி மறைந்தாலும்—பாசம்
தாய்மைக்கு தான் உண்டு

மருமகப் பொண்ணுக்கு
மனதில் என்ன பாரமோ?
எடுத்து முடியாத கூந்தல்
நெருப்பு போல கண்கள்
அகத்தில் குடிகொண்ட கோபம்
புறத்தில் வெளிப்பாடு

அவளது ஒன்றரை வயது குழந்தை
அவளைத்தேடி வர
“ எங்கிட்டே வராதே, சனியனே
எங்காவது தொலைந்து போவென”
பிடித்துத் தள்ளியதில்
பாவம் குழந்தை எட்டிபோய் விழுந்தாள்

வீட்டிலுள்ள உறவுகள்
வாயடைத்து நின்றிருக்க,
அடிபட்ட குழந்தையோ—மீண்டும்
அம்மாவென்று அழுதுகொண்டே
அன்னை மடி தேடி சரிந்தாள்
அணைத்துக்கொண்டாள் தாய்

அடித்தாலும் நீ
அணைத்தாலும் நீதானெனும்
உண்மையைக் குழந்தை
எப்படி அறிந்திருக்கிறது?—அது
ஊட்டி வளர்த்த தாய்ப்பாலின்
உபதேசமோ!


வியாழன், 1 செப்டம்பர், 2016

காலனுக்கும் பொறுக்காது

காலம் பல கடந்தாலும்
கவலை கொள்ளாத கிராமம்,
வசதியில்லாம வாழ்ந்தாலும்
வாய் திறக்காத ஊருசனம்,
வரமா?இல்லை வசமா?

எட்டாத தூரத்தை
எட்டி பிடித்ததுபோல
ஊரெங்கும் மேடை பேச்சு,
வாழும் ஏழைகளுக்கோ
உயிர் காக்க தவிக்கும் நிலை

நோய், நொடியென்றால்
நாய் கூட திரும்பிப் பார்க்காத
நாதியற்ற நிலை,
பத்து மைல் தூர பேருந்து பயணம்
மருத்துவமனை போய்சேர

மனைவிக்கு வயிற்றுவலி
மருத்துவமனை அழைத்து செல்ல
மாமியாரும், கணவரும்
பக்கபலமா துணைக்கு வந்து
பேருந்தில் போகும்போது

பாதி தூரம் கடந்தபின்
பாவி எமன் உயிரை பறித்துவிட
பாவம் கணவன் கண்கலங்க
பேருந்து நடத்துனரோ—மூவரையும்
பேய்மழையில் இறக்கிவிட

மனிதர்கள் வருந்தவில்லை
மாண்டது மனிதநேயம் தான்,
கொட்டும் கணமழை—கண்ணீர்
விட்டதுபோல் அழுத காட்சி
காலனுக்கும் பொறுக்காது