திங்கள், 14 நவம்பர், 2016

நினைத்து பார்க்காமல்

பள்ளி முடிந்து
துள்ளி குதித்து
வீடு செல்ல
ஓடும் சிறார்களில்
ஒரு சின்னஞ்சிறு
குழந்தையொன்று
முதுகில் சுமக்கும்
சுமையை குறைக்க

வீட்டிலிருந்து
வரும்போது எடுத்து
வந்த உணவில்
மீந்துபோனதை
குழந்தை தெருவோரம்
கொட்டி சென்றதை
அவ்வழி வந்த
அச்சிறுவனின் தந்தை

பிள்ளையின்
புத்தி சாதுர்யமென
பெருமை பேசினார்
உறவுகளிடம்—நாளை
அதே பிள்ளை
இவரை சுமையாக
எண்ணாதோ என்று

நினைத்து பார்க்காமல்.

புதன், 9 நவம்பர், 2016

வேறு எப்படி முடிக்க?


சுத்தி நின்னு பார்க்கிற
சொந்தமின்னும் சொல்லுற
கருகிப்போன பயிராலே—விளைநிலமே
காணாமப் போனாயோ!
யாரு செஞ்ச பாவம்னு
யாருக்கும் தெரியலையே

முடமான வாய்க்காலே
மழை நீரை புடிக்கிற
மக்களிடம் சேர்க்க நினைக்கிற
வழி தெரியாம நிக்கிற                                
யாரு செஞ்ச பாவம்னு
யாருக்கும் தெரியலையே

 வயலிலே நாளும்  உழைக்கிற
 ஊரோட பசி போக்கிற
 காவிரி சிறைபட்டதால்—உழவரே
 கடன் உன்னைக் கொன்றதோ!
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 விருந்துக்கு உயிர் கொடுக்கிற
 வாய்க்கு ருசி படைக்கிற
 உடலுக்கு வலு சேர்க்கிற—வீட்டு
 விலங்கா இருந்தும் புல்லுக்கு அலையுற
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 குடிநீருக்கு தவிக்கிற
 குடிக்க பானம் வாங்குற
 குடிச்சுட்டு நீ சாகிற—அதனாலே
 குடும்பமே சந்தியிலே
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 மாரி செஞ்ச பாவம்னு
 மாரிமேலே பழியபோட்டு
 மாரி அம்மனுக்கு படையிலிட்டு
 மறுபடியும் விருந்து வைத்து—மாரியை
 வேண்டிக்குவோம் எல்லோரையும் காக்க,
 வேறு எப்படி முடிக்க?



திங்கள், 7 நவம்பர், 2016

சமுதாய சீர்கேடல்லவா?


வாசல் வழிவந்து
வீட்டுக்குள் நுழையும்,
சுவற்றில் நடந்து
சுற்றித் திரியும் பல்லி
வாக்கு சொல்லும்—அதனால்
வெறுப்பதில்லை யாரும்

புறவழி புகுந்து
பொருள் தேடும்
திருடனைப்போல்
இருளில் அலையும் கரப்பான்
நோய் பரப்புமென்பதால்—மக்கள்
நெருங்க விடுவதில்லை

கடவுள் படைத்ததோ—இல்லை
காலம் மாற்றியதோ!
பல்லி, கரப்பானை
பிடித்துத் தின்னாது,
கரப்பான் பூச்சியும்
பல்லியை பிடிக்காது

உருவம் பெரியவை
வலிமை கொண்டவை
அஞ்சாமை உடைய யானை—நீர்
அருந்த வரும்போது
அஞ்சுவதுபோல் புலிகள்
அந்த இடம் விட்டு அகலும்

பதுங்கி, பாயும்
புலியின் உருமலில்
வெளியேறும் யானைகள்
வலிமை இருந்தும்—மோதலை
விரும்பாமல்
விலகிச் செல்லும்

அதுபோலத்தான்
அதிக வலிமையுள்ள இருவர்
எதிர்,எதிரா பகைவர்போல்
மோதிக் கொள்வதில்லை,
விட்டுக் கொடுப்பதுபோல்
விலகிச் சென்றிடுவர்

வலிமையுள்ளவனின்
வாய் தூண்டுதலால்—சாதாரணத்
தொண்டர்கள்
தங்களுக்குள்
சண்டையிட்டு சாவது
சமுதாய சீர்கேடல்லவா?



செவ்வாய், 1 நவம்பர், 2016

தானாக தொலைந்து போகும்



உயிர்களிடையில்
உருவாகும் கடும் உணர்ச்சி—அது
உண்டாக்கும் பலப்பரீட்சை,

அச்சுறுத்துபவரை அல்லது
அவமதிப்பவரை
அடக்க எடுக்கும் ஆயுதம்

கட்டுக்கடங்காது போனால்
கடைசி பயணம் கைகூடும்—இல்லை
கை, கால் காணாது போகும்

ஒருபோதும் பிரிந்திராத
சொந்தங்கள் போல்
வந்துபோகும் அவ்வப்போது

மனிதனுக்கு மட்டும் தான்
முதுமை வரும்
இதற்குக் கிடையாது

மரணத்தில் தான்
இந்த இரண்டுமே
அமைதி பெறும்

இதனை வெற்றி கொள்ள
ஒரே வழி
அவசரப்படாதீர்கள்

அது எழுந்து கொள்ளும்
தாமதப்படுத்துங்கள்—கோபம்

தானாக தொலைந்து போகும்

துறவுக்கு துணைநின்ற துணைவி


ஆசைகள் அனைத்தையும்
உதறிய சித்தார்த்தன்
துறவியானான் புத்தனாக

துறவுபூண்டு ஆண்டியாய்
திருவோடு கையிலேந்தித்
தெருத்தெருவாய் வலம் வந்தான்

தன் அரண்மனை வாயிலில் நின்று
புத்தம், சரணம், கச்சாமியெனக்
கையேந்தி யாசித்தான்

சித்தார்த்தனின் மனைவி யசோதா
பிச்சையிட வெளியில் வந்தாள்
இளையமகன் கூட வந்தான்

துறவியைக் கண்ட சிறுவன்
யாரம்மா இவரென்றான்?
யாரென்று அறிந்திருந்தும் அவள்

உன் தந்தையெனக் கூறாமல்
சாமியென்று சொன்னாள்
சாமியென்றதில் அகம் குளிர்ந்தாள்

அப்பாவென சொன்னால்
அப்பாவென மகன் அழைப்பான்
அதில் புத்தனின் கனவு கலையுமென நினைத்தாள்

ஆசையைத் துறந்த புத்தனின்
துறவுக்கு துணை நின்றாள்

துணவி யசோதா