ஞாயிறு, 25 டிசம்பர், 2016

அரவணைக்கிறது

முன்பு வாழ்ந்த மூதாதையர்
மண்ணுயிரை தன்னுயிர் போலக்
காத்த காலமது
வறுமையில் வாடியபோதும்
வறுமையெனக் கருதாமல்
சிரமமெனக் கொண்டவர்கள்

வனத்திலே மேய்ந்தாலும்
இனத்தோடு மேயும் உயிரினம்போல்
வளமை மிக்கவர்கள்
வாடித்தவிக்கும் ஏழைகளுக்கு
உதவிகள் பல செய்து
வாழவைத்து மகிழ்ந்தவர்கள்

மாடுகளே அன்றைய
மனிதர்களை வளர்த்தன
அதை மறக்காத மனிதன்
அவற்றின் பசி தீர்க்க
கொல்லையிலேயே வைத்தான்
குன்றுபோல் வைக்கோல் போர்

மனிதனே மனிதனை
மதிக்காத இப்பூவுலகில்
மாடுகள் தெய்வமானதும்
மாட்டுக்கு மனிதன் கடவுளானதும்
ஒன்றையொன்று மதித்து
வாழ்வதும் இங்கு தான்

முன்னோர்களின்
உயரிய நேர்மையையும்
நெறி தவறா வாழ்க்கையையும்
இலக்கிய பதிவுபோல
இன்றைய தலைமுறையினர்
நினைவில் கொள்ளவேண்டும்

ஈசனுக்கு ஒப்பான
ஈகைக் குணமுடையோர்
இன்றும் வேர்கள் போல்
அங்கங்கே இருப்பதால்தான்
ஆலமரம்போல சமூதாயம்

அகல விரிந்து அரவணைக்கிறது.

தொலைத்துவிட்டு.

நீதி எப்போதும்,எங்கும்
நிமிர்ந்து காணும்,
உச்சம் தொட்ட அது
உலகுக்கு நெறிமுறையை
போதிக்கும்,
மக்களிடம்
மரியாதை பெறும்,
தனக்கு நிகராக
தரணியில் யாருமில்லையென
தற்பெருமை கொள்ளும்,
இத்தனை சிறப்பிருந்தும்
அதன் சுழி
சும்மாயிருக்க விடாது,
சுழியை நீக்கிவிட்டு
நிதியிடம் நேசமாகும்

நேர்மையை தொலைத்துவிட்டு.

சனி, 24 டிசம்பர், 2016

விண்மீன்களென.

உலா வரும் நிலவைக் காட்டி
ஊட்டிவிடும் குழந்தைக்கு
ஒரு பாதி வயிற்றுக்கும்
மறு பாதி முத்துக்களாய்
முகத்தில் பதிந்து
ஒளி கூட்ட

நட்சத்திரம் புடை சூழ
நடை பயிலும் நிலவைபோல
தன்னோட குழந்தை முகம்
தகதகன்னு பிரகாசிக்க
தன் குழந்தை தான் அழகென
தாய் மனம் மகிழ

விண்ணை பார்த்த
பிள்ளை நினைத்திருக்கும்
நிலவும் தன்னைப்போல
சோறு உண்ணும்போது
சிதறிய பருக்கைகள் தான்

விண்மீன்களென.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மறக்க இயலுமா?

தோண்டத் தோண்ட
ஊரும் நீருபோல
தோண்டும் இடமெங்கும்
மாண்ட உடல்கள்,
உயிர் பிரிந்த இடத்தில்
பயிர் முளைத்தெழும்
பரிதாபம்

நல்லதும், கெட்டதும்
மாறி, மாறி நிகழ்வது
பூமிக்கு வாடிக்கை,
அதனால் தானோ
இலங்கை மண்ணில்
இரத்தக்கறை யுத்தத்தால்
செத்து மடிந்தனர் மக்கள்

தப்பிப்பிழைத்த
இரு சிறார்கள்
உயிருக்கு பயந்து
ஒதுங்கி பதுங்கியபோது
ஒடுங்க வைத்த காட்சி,
தெய்வமேயானாலும்
தடுமாற்றம் காணும்

அன்னையைத் தேடி வந்த
அந்த சிறுவர்கள்
கண்ட காட்சி—கடலலைக்
கைமாறு செய்வதுபோல்
காலமானத் தாயை
கரையோரம் சேர்த்தது,
தொப்புள் கொடி உறவை
எளிதில் மறக்க இயலுமா?



நடுத்தெருவில் நிற்கலையா?

ஒன்று கூடி வாழ எண்ணி
உருவாக்கிய மதங்கள்,
வீசிய காற்று மரத்தை
வேரோடு சாய்த்தது போல்
மனிதர்களை
மனிதர்களிடமிருந்தே
பிரித்தது பாவமல்லவா?
பகைமையை வளர்த்ததால்
பாரில் அரங்கேறும் பாவங்கள்
பதற வைக்கவில்லையா மனத்தை?

நாடு நலம்பெற
நலிவுற்றோர் நிலை உயர
மக்களால் மக்களுக்காக
மக்களே தேர்ந்தெடுத்து
ஆளப்போன அரசியலார்
அல்லல்படும் மக்களின்
அவலங்களை அறிந்ததுண்டா?
சுயநலம் கொண்டு சேர்த்த
செல்வத்தால் ஆண்டவனானார்கள்
மக்களோ ஆண்டியானார்கள்

ஆண்டவருக்கும்
ஆளப்பட்டோருக்கும் இடைவெளி
வானுக்கும், மண்ணுக்கும்
உள்ளது போல்
வேறுபட்டு போகலையா?
ஆண்டவன் எப்போதும்போல்
ஆலயத்தில் அமர்ந்தான்
ஆண்டியோ பாவம்
நாளும் ஒரு போராட்டமென
நடுத்தெருவில் நிற்கலையா?


என்ன விசித்திரமோ இது?

இன்றையத் தொழில் நுட்பம்
இமயத்தைத் தொட்டது போல்
கொடிகட்டிப் பறந்தாலும்—புயல்
காற்றின் வேகம் போல்
களவாடப்படும்
மின்னஞ்சலின் முகவரியால்
முகம் வாடி
மனம் நிம்மதி இழக்காதோ!

பரந்து கிடக்கும் பூமியில்
விரிந்து பரவி கிடக்கும்
வளைத்தளங்கள் மூலம்
வேற்று மனிதர் ஒருவர்
நமது தகவல்களைத் திரட்டி
வங்கிப் பணத்தை எடுக்க
வழி உண்டு என்றால்—கள்வனைக்
காவலுக்கு வைத்ததுபோலாகாதோ!

அண்ட சராசரத்தையே
அடக்கி ஆள்வதுபோல்
இணையத்தையும், தொலைபேசியையும்
நம்பி கனவோடு வாழும்
நாம் அறியாமல் போனது
ஆடையணியாத மனிதர்போல்
வாழ்கிறோம் என்பதையன்றோ!

திறந்த புத்தகமாகக் கிடக்கும்
தனிமனித வாழ்க்கை,
தென்னைமர தேவாங்குபோல்
தன்னையே அறியாத மனிதன்,
அரசாங்கங்களோ
இறுகப்பூட்டிய கட்டிடத்திற்குள்
இயங்குவதாய் கூறிக்கொள்கின்றன,
என்ன விசித்திரமோ இது?



திங்கள், 5 டிசம்பர், 2016

கோலம்

இரவு நேர வானில்
இட்ட நட்சத்திர புள்ளிகளை
கோடு போட்டு இணைத்து
கோலம் போட
குதித்து வருகிறது
எங்கோயோ இருந்து
எரிந்து விழும் ஒரு

எரி நட்சத்திரம்

சேருமிடம் தான் வேறுபடும்

சுதந்திர இந்தியாவின்
தேசீய பறவை ஒன்று
பறவைப் பூங்காவில் சிறை,
நாலு பக்கக் கூண்டுக்குள்
நலிவுறும் ஒரு உயிர்

காட்டு வசதிகள்
கைவிட்டு போனபின்
சுகத்தை இழந்து
சோகத்தை சுமந்து
சோர்ந்து கிடக்கிறது

வலிமை இல்லாததால்
குறை இருந்தும்
குரல் எழுப்பவில்லை
இரை இல்லாமையா?—இல்லை
இந்திய அஹிம்சை வழியா?,

தேசீய பறவைக்கு
தெரியாமலா இருக்கும்
இரண்டுக்கும் விடுதலை
கிடைக்குமென்று—ஆனால்
சேருமிடம் தான் வேறுபடும்.




அநுபவம்

சுடலை போகும்
உடலை
விட்டு பிரிந்த
உயிர்
போன இடம் எங்கு என
சொல்லத் தெரியாத
முனிவருக்கு
விடை பகிர்ந்தாள்
விலை மகளின்
வேலைக்காரி,
வெட்கப்பட்ட முனிவர்

வேதனையுற்றார்,
வேலைக்காரியிடம்
கையேந்தினார்
அறிவு பிச்சைக்கு,
கதையென்றாலும்
கரு உண்டு—கற்றது
கை மண்ணளவு
கல்லாமல் அறிவது
உலகளவு
அது தான் அநுபவம்