வெள்ளி, 29 டிசம்பர், 2017

யார், யாரை மன்னிப்பது?

ஏமாற்றமே வாழ்க்கையென்றால்
எதிர்பார்க்க என்ன உண்டு?
ஏத்தனை முறை பிறப்பு
எடுத்தாலும்
என்னத்த பார்க்க போறா?—இந்த
ஏழைத்தாய்

புருஷனை பறிகொடுத்தாள்
ஒரு கண்ணையும் இழந்தாள்
ஒற்றைக் கண்ணியென
ஊரில் பேரெடுத்தாள்—தன்
ஒரே பிள்ளையை படிக்க வைத்து
வயித்துக்கு வழி வகுத்தாள்

ஒற்றைக் கண்ணியின் மகனென
உற்ற நண்பர்கள் கேலி செய்ய
தாயை மகன் வெறுத்து
தனி வீட்டில் குடி வைத்தான்
தாயை அழைக்காமல்—தன்
திருமணமும் செய்து கொண்டான்

உணர்வுகளை உள்ளடக்கி
வயிறு பத்தி எரிகையிலே
நிலைகுலைந்து போன தாய்
நித்தம் கண்ணீர் வடித்தாள்
கடவுளை வேண்டினாள்
காலன் உதவி செய்தான்

பள்ளி விழாவுக்கு வந்த
பழைய மாணவர்களில்
பையனும் வந்திருந்தான்,
பெற்ற தாய் இறந்ததை
பள்ளி நிர்வாகம் சொன்னதோடு
அன்னை எழுதிய கடிதத்தையும்
அவனிடம் சேர்த்தனர்

அதில்அன்பு மகனே உனக்கு நான்
அவமானமானதை எண்ணி
நெஞ்சம் உடைந்து போனேன்,
நீ சிறுவனாக இருந்தபோது
சிக்கிய விபத்தில் விழியொன்றை
இழந்த உன்னை

ஒற்றைக் கண்ணனெ
ஒருவரும் கிண்டல் செய்யாதிருக்க
எனது கண்ணில் ஒன்றை
எடுத்து பொருத்த சொன்னேன்
என்னை மன்னித்து விடு மகனே
என்று எழுதப்பட்டிருந்தது.
யார், யாரை மன்னிப்பது?





வியாழன், 14 டிசம்பர், 2017

பகையானதே!



பழையனவற்றை அழிக்கும்
போகி போல
ஊரை அழிக்க ஓடிவந்த
ஓகிப்புயல்

குமரியை புரட்டிபோட்டு
கலங்கப்பட்ட புயல்
மீனவ உயிரையும் பறித்து
மாபாவம் புரிந்தது

கொட்டி தீர்த்த மழையின்
கோரத் தாண்டவத்தால்
நதியெல்லாம் ஊருக்குள்
நிலமெல்லாம் நீருக்குள்

தாவரங்கள் தலை சாய
தோழமையாய் மின் கம்பங்கள்,
ஓடுகின்ற நதிக்கு
உறவாகி ஓடிப்போன பாலம்

மீன்பிடிக்க போனவர்கள்
மீண்டு வந்ததெத்தனை?
மாண்டு போனதெத்தனை?
மாயவனாவது அறிவானா?

மீனவ குடும்பங்களில்
இருள் சூழ்ந்ததுபோல்
அனைத்தும் இழந்து தவிக்கும்
ஊரும் இருளில்

சொந்தத்தை இழந்து
சொல்லி அழும் மாந்தருக்கு
உடனே சென்று ஆறுதல் கூற
ஒருவரும் நினைக்கலையே!

கடலில் தவித்த மீனவரை
காப்பதற்கு எண்ணாம
காரணங்கள் பல கூறி
கதை,கதையா சொன்னாலும்

பரிதவித்து புலம்பும் மனம்
பாழுங்கதையை ஏற்குமா?
பங்காளி உறவுபோல
பகையானதே அரசியல்.  


புதன், 6 டிசம்பர், 2017

உணவு தட்டுபாடா!



கன்னியாகுமரியில்
கன்னி பெண்ணாட்டம்
கால் பதித்த
பருவ மழைகூட
பூப்படைந்ததோ!

ஓகி புயலோடு சேர்ந்து
ஊரெல்லாம் சுத்தி
ஓடி விளயாடி
மனம் மகிழ்ந்த
மழை வெள்ளம்

வயசு பொண்ணாட்டம்
வீட்டுக்குள் நுழைந்து
வார்த்தை ஏதும் பேசாம
அடக்க ஒடுக்கமா
அமைதியா அமர்ந்திருக்க

ஊரு சனம் என்னவோ
வீடுகளை விட்டு
வீதியில வந்து நின்னது
தீட்டு என்பதாலா?—இல்லை

உணவு தட்டுபாடா?

நாநிலம் சிறக்குமா?



மதிப்பு குறையுமோன்னு
மகராசி முயற்சிக்க,
மானம் போனதுன்னு
மனசொடிஞ்ச மாணவிகள்
மண்ணுடன் இசைந்து வாழ
மரணத்தை நேசித்தாரோ!

தணியாத சினமா?—இல்லை
தனிப்பட்ட காரணமா?,
கல்விக்கு அழகூட்ட
கடமையின் ஒப்பனையா?
பள்ளி பிள்ளைகளின்
பொறுப்பற்ற செயலா?

பள்ளியில் யாருக்கு யார்
பாடம் புகட்டுவது?
பள்ளி ஆசிரியரின்
பாடத் திட்டமா?—இல்லை
பள்ளி தோழிகளின்
புதிய வழி பாடமா?

முரண்பட்ட எண்ணத்தால்
முன்கோபம் தலைதூக்க,
காத்திருந்த காலனோ
கள்வனாய் உயிரை பறிக்க
இதுதான் விதியென்றால்
இறைவனும் என் செய்வான்?

தடம் பதிக்கும்
தற்கொலை கலாச்சாரம்
தமிழகப் பண்பாட்டை
தலைகுனிய வைத்துவிடும்,
நம்பிக்கையும், நேர்மையும்

நலிவுற்றால், நாநிலம் சிறக்குமா?

வெள்ளி, 1 டிசம்பர், 2017

மனித வாழ்க்கை


நேர்மை, நந்நடத்தை
நன்மையும், அமைதியும் தரும்

நேர்வழி வந்த செல்வம்
நெஞ்சுக்கு நிம்மதி தரும்

உதவுவதும், உதவியவற்கு நன்றி
கூறுவதும் மனமகிழ்வு தரும்

அமைதியான அறப்போராட்டம்
ஆக்கம் தரும், பாராட்டு பெறும்

நற்பண்பு நம்மிடமிருந்தால்
நெஞ்சில் நிம்மதி நிலைத்திருக்கும்

மண்ணில் வாழ் மாந்தருக்கு
மன அமைதி மகிழ்வைத்தரும்

மாயவனிடம் அமைதி காணும்—அதனால்
மனித மனம் ஆலயம் நாடும்


ஆசை, பேராசை இரண்டும்
அமைதியைக் குலைத்துவிடும்

அதிக செல்வம், இல்லா ஏழ்மை
அமைதியை அழித்துவிடும்

மரத்தின் அமைதி காற்றால் கெடும்
மனித அமைதி தலைவனால் கெடும்

நீதி பொதுவென்று மதிக்காதவரை

நரகமாகும் மனித வாழ்க்கை

வாழ்க்கை பாடமிது



உடல் உபாதிகள்
உடன் பிறந்தவைபோல்
ஒட்டி உறவாடும்
ஒட்டு மொத்தமா—உடலை
விட்டு போகாது

சுகாதாரக் கேட்டால்
சீர் கெடும் உடல்
தருகின்ற வலி
தேகத்தை வதைக்கும்
தடுமாற வைக்கும்

வலி, வலிமையை
வளர்க்கும்,
வலிமை, வலியை
விரட்டும்
வாழ்க்கை பாடமிது


தன்னையே நம்புவது



ஓஸோன் படலத்தில்
ஓட்டை விழுந்தாலும்
ஓடி ஒழியாம
உயிர்களைக் காத்திடும்
இயற்கை போல

உயிரை எடுக்கின்ற—கடும்
துயர் வந்தாலும்
உள்ளம் கலங்காத
உயர் நிலை தான்
தன்னம்பிக்கை

மண்ணிலுள்ள மாந்தருக்கு
மூன்று கைகள்
முதன்மையான கை
தன்னம்பிக்கை—முழுதும்
தன்னையே நம்புவது


வியாழன், 30 நவம்பர், 2017

சேமமுற வாழலாம்



இரு பிள்ளை போதுமென
நினைக்கும்
இன்றைய தலைமுறைக்கு
சிக்கனத்தை பற்றி—இதைவிட
சிறப்பா நான் என்னத்த
சொல்ல

ஒரு வருடம் எனக்கூறி
முதியோர் இல்லத்தில் சேர்த்து
மூன்றாண்டு முடிந்தும்
பெற்ற தாயை பார்க்காமல்
பிள்ளை வாழ்வது தர்மமா?—இல்லை
பணத்தின் சிக்கனமா?

வாழ்வாதாரங்கள்
வழிமாறி போகையில
நாளும் போராட்டமென்றால்
நாணயம் கிடைப்பதெப்படி?
சிந்தித்து, செயல்பட்டு
சிக்கனமா வாழுங்கள்

சிறுவயது முதலே
சிக்கனமா வாழ
அடுத்த தலமுறைக்கு
அன்போடு கற்றுக்கொடுங்கள்
சேமித்து வாழ்ந்தால்
சேமமுற வாழலாமென்பதை.


ஞாயிறு, 19 நவம்பர், 2017

மெய் சிலிர்க்கும்




கண்ணியத்தின் திருஉரு
கடவுளின் விக்ரகம் போல்
காலத்தால் அழியாதது,
மனிதன் மதிக்கும்
மாபெரும் செல்வமிது,
மனிதனை இது மதிக்காது,
விலைபேசி இதனை வாங்கும்போது
உருமாறும், தலை கவிழும்

தன்னிகரற்றது,
தள்ளி போகாமல் இதனை
தன் பக்கம் இருக்க
விரும்பும் மக்கள்,
இதன் பக்கம் இருக்க யாரும்
விரும்புவதில்லை,
அனைத்துக்கும் காலக்கெடு உண்டு
இதற்கு மட்டும் இல்லை

சத்தியத்தை காக்கும்
சமூகத்தின் செல்லம்,
அரசனையும் ஆட்டிபடைக்கும்
அனைவரையும் தன்னுள் அடக்கும்,
தன்மானம் உள்ளது
தெய்வத்துக்கு நிகரானது,
எதற்கும் அஞ்சாதது
எப்போதும் தனித்து நிற்கும்

இறக்கும் தருவாயில்
இதழ்கள் உதிர்க்கும் சொற்கள்
மரணவாக்குமூலமென
முக்கியத்துவம் பெறும்போது
இதன் அருமை புரியும்
அதுதான் உண்மையென
மனம் அறியும்,
மெய் சிலிர்க்கும்


புதன், 15 நவம்பர், 2017

ஆதாயம் தேடுகிறார்களோ!



கர்ணனை வஞ்சித்த
கிருஷ்ண பகவானைப்போல
தாவரங்களை படைத்த
இயற்கை அன்னை
அதனிடமே தா வரமென்று கேட்டு
தாவரமென்று பெயரிட்டதாம்

தாவரம்
தானத்தின் திரு உரு
உயிர் காக்கும், தாகம் தணிக்கும்
உணவாகும், மருந்தாகும்
வீட்டுக்கு தூணாகும்
இறைவனாகவும் உருமாறும்

நிழல் தரும்—பறவைக்கு
வீடாகும்,மழையை
வரவழைக்கும்,
உரமாகும்,
இறக்கும் மனிதரை
எரிக்கவும் உதவும்

தந்த வரத்தால்
தான் தியாகம் புரிய
தாவரம் உறுதி பூண்டதை
தவறாக புரிந்த மக்கள்
அநுதினமும் அதனை வெட்டி
ஆதாயம் தேடுகிறார்களோ!