சனி, 21 ஜனவரி, 2017

நகர்ந்து கொள்ளும்


கற்று தெளிவதில்லை
கல்லாமல் அறிந்துகொள்வது
நெஞ்சமதில் வந்தமரும்,
நினைவுகளை இழக்க செய்து
நிலைகுலைய வைக்கும்

ஒட்டி உறவாடி—நம்மை
ஆட்டி படைக்கும்,
விரட்டினாலும் போகாமல்
வெற்றிகளை இழக்க வைத்து
வாழ்க்கையை வீணடிக்கும்

ஆதிக்கம் செய்யும்போது
அனைத்தும் பறிபோகும்—அது
சொந்தமாகும்போது
சோம்பலும் உறவாகும்
சாகவும் வழிகாட்டும்

பசி கூடும்போது
பயம் ஓடி மறையும்
ஆன்மாவையே அழிக்கும் பசி
அச்சத்தை போக்கிவிடும்--ஒருநாள்
வெற்றியும் வாகை சூடும்.

தடைகளுக்குக் காரணம்
தானென அறிந்திருந்தும்
விடை தருவதுபோல்
நம்மையே காட்டி--பயம்

நகர்ந்து கொள்ளும்

சுக நித்திரையில்


எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானே!
வரம் ஒன்று தரவேண்டி
வணங்குகிறேன், அய்யனே!

மண்ணில் வாழும் வரை
மறந்து போகாமல்
நற்புண்ணியங்கள் நாளும்
நான் செய்திடல் வேண்டும்

தோல்விகள் வந்தென்னைத்
தொடர்கின்ற போதும்
உள்ளத்தில் நல்லமைதி
குடிகொள்ள வேண்டும்

உளிகொண்டு செதுக்கி
என்னை சிலையாக்கினாலும்
உலை கொதிக்க எரிவதற்கு
விறகாக்கினாலும்

இல்லையென்று வருவோர்க்கு
இல்லையென்று சொல்லாத
நல்லெண்ணம் கொண்ட
நல்லுள்ளம் வேண்டும்

வாரி வழங்குகின்ற
வாழ்வென்ற போதும்
கூடி உண்ண பலர் வந்து
கூடுகின்ற போதும்

அள்ளக்குறையாத
அட்சய பாத்திரம்போல்
எப்போதும் என் வாழ்க்கை
எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும்

சக்தியுள்ள போதே நான்
சாய்ந்துவிட வேண்டும்
சுக நித்திரையில் என் உயிர்

செத்துவிட வேண்டும்

ஆதரவு .

அந்நிய மண்ணுக்குஆசை பட்டு
ஆளவந்த வெள்ளையர்கள்
எடுபுடி வேலைக்கு ஆட்கள் சேர்க்க
ஆங்கிலக் கல்வி முறையை
அரங்கேற்றம் செய்தார்கள்

பணியாளர்களை உருவாக்க
பள்ளி, கல்லூரிகள் தோன்றின
அறிவு தந்த கல்வி மாறி
அடிமையானது பணத்துக்கு,
பாரத கல்வி முறை பலியானது

எந்த முறைக் கல்வியிலும்
எல்லோரும் மேதைகள் ஆவதில்லை,
உங்கள் கல்வி முறை
ஊதியம் தராதபோது—வெள்ளையர்கள்
உதறிவிட சொன்னார்கள்

ஊதியம் தந்து உயிரைக் காத்ததால்
ஆங்கிலமுறைக் கல்வியை
அங்கீகரித்து ஏற்றுக்கொண்டோம்
வேறு வழியின்றி,
விடுபட்டது இந்தியக் கல்விமுறை  

கடன் வாங்கி படித்த ஏழைகள்
கடனைத் திருப்பி தர முடியாம
வேலையும் கிடைக்காம
வேதனைபடுவோருக்கு ஆதரவு

உதையும், சிறையும் தான்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கேட்க மாட்டாயோ!



காவிரி ஆத்துத் தண்ணீ
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி
காணாமப் போனதாலே
காணி நிலமெல்லாம்
காஞ்சு தெறிச்சதில

கடன் பட்டு செலவழிச்சும்
கைவிட்ட விவசாயம்,
காணப் பொருக்காத உசிரும்
கலங்கி தவிச்சு காலமாக
கண்ணீரில் மூழ்கியது சொந்தங்கள்

குடி நீருக்குக் கையேந்தி
குரல் கொடுக்கும் தமிழகம்
காலம் கடந்தும் காத்திருக்கு
கவலைபடத்தான் யாருமில்லை
காவிரியே நீயே வந்துவிடு

கோலமயிலாட்டம் முன்பு
குதிச்சு வந்தவளே!
குயிலுபோல கூவி அழைக்கிறேனே
காது கொடுத்து—நீயாவது
கேட்க மாட்டாயோ!


சீரழிந்ததோ!


இடித்த வானம்
தொடுத்த பானம்
கொடுத்த உயிர்
எடுத்த காற்றும், மழையும்
தெய்வங்களாகிப்போன
இயற்கையை நாளும்
துதித்து வழிபட்டான்—அன்றைய
ஆதி மனிதன்

காலம் மாறியது
காலமுழுதும் நல்லது செய்யும்
தெய்வத்தைக் காண—மனம்
தேடி அலைந்ததில்
உண்மை அன்பும்
உயர் பண்பும் நிறைந்த
நல்ல மனிதனை கடவுளாக்கி
நெஞ்சை நிறைய வைத்தான்

கடவுளான மனிதன்
கருணை வடிவமானான்
வறுமை வாட்டிய போதும்
வேற்றுமை பார்க்காமல்
வாழும் மக்கள் அனைவருக்கும்
உணவு தந்து பசிபோக்கி
வாழ நல்வழி காட்டினான்
மக்கள் தெய்வங்களானார்கள்

ஆயிரமாயிரம் தெயங்கள்
அவதரித்த இப்பூமியில்
இன்றைய பொழுதில்
கேடு நினைக்காத நல்ல மனிதனைக்
கடவுளால் காட்டமுடியுமா?
சமயங்களும், தெய்வங்களும்
சந்தைக்கு வந்ததாலே

சந்ததிகள் சீரழிந்ததோ!

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

குபேரனாக்கும்

அறிவியல் உலகம்
அதி உன்னத உயரம்
இறைவன் தந்ததல்ல
இன்றைய மனிதன் வடித்தது

உயிரை படைத்த இயற்கை
வாழ வழிகாட்டியது,
சுகத்தைத் தேடியபோது—மனிதன்
சிந்திக்கத் தொடங்கினான்

அறிவு தலையிலேறி அமர
அரங்கேற்றம் கண்டது
ஆசையும், பேராசையும்—குவிந்தன
அளவிலா அறிவியல் பரிசுகள்

ஆசை இல்லையென்றால்
அறிவு சாதிக்குமா?
நாடேது? மொழியேது?
நாகரீகமும் தான் ஏது?

அன்று வாழ் மக்கள்
அமைதியாய் வாழ்வதற்கு
ஆசையைத் துறக்க--புத்தன்
போதித்தான் மக்களுக்கு

இன்றைய மக்களுக்கு
இன்றியமையாதது தரமான வாழ்வும்,
சீரான செல்வசெழிப்பும்—அதற்கு
ஆசைகள் அவசியம் தான்

எது நல்லது, எது கெட்டது
என்பதனை அறிந்து
அதன்படி செயல்பட்டால்—மனிதனை
ஆசையும் குபேரனாக்கும்.




பெருமதிப்பு பெறும்

பழகியவரிடம் தோன்றுவது
பாசமெனும் அன்பு,
பழகாதவரிடம் உணரப்படுவதோ
இரக்கமெனும் அருள்,
ஒரு வட்டத்திற்குள் சுழலும்
அன்பு குறுகலானது,
அருள் ஓர் நேர்கோடு
எல்லை இல்லாதது

இளமையில் கைகொடுப்பது
அன்பும், அறிவும்,
முதுமைக்கு துணையாவது
அருளும், ஞானமும்
அறிவுடன் அநுபவமும்
சேரும்போது ஞானமாகும்
இளமையும், முதுமையென
மரியாதை பெறும்

எப்போதும் தேடிக்கொண்டே
இருக்கும் அறிவு—ஆறுபோல
ஓடிக்கொண்டேயிருக்கும்
தெளிந்து காணாது,
ஞானமோ பெரிய ஏரிபோன்றது
அமைதியாய்க் காட்சி தரும்
தெளிவுற்று இருக்கும்

பெருமதிப்பு பெறும்,