செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

விசுவரூபமெடுக்கும்



கோவலனைப் பிரிந்து
கண்ணகி வாழ்ந்திருந்த சமயம்
கணவனோடு மீண்டும்
கைகோர்த்து வாழ்வோமென
நம்பியிருந்தபோது
நாயகன் இறந்து போனான்
நொறுங்கிப் போனாள் கண்ணகி

அயோத்தி இராமன்
அறவழியில் பொருதாமல்
மறைந்து நின்று வாலியை
 மண்ணில் சாய்த்தான்,
வாலியை இழந்தத் தாரையோ
கடைசி வரை அழுது புலம்பினாள்
கணவனைப் பிரிய மனமில்லாமல்

புரிந்து வாழ்ந்த தம்பதியர்
பிரிந்துபோக நேரும்போது,
மன ஒற்றுமை வெளியேறும்
மாற்றங்கள் அரங்கேறும்,
உள்ளங்கள்  தவிக்கும்
உடல் நலம் பாதிக்கும்
உயிரும் பறிபோகும்

கூடி வாழ்ந்தபோது
பதியின் அருமை பாரிக்கும்
பாரியின் அருமை பதிக்கும்
புரிவதில்லை
பிரியும்போது வேதனையுறும்
இருவரில் ஒருவர் இறக்கும்போது

அது விசுவரூபமெடுக்கும்.

வரலாற்று உண்மை

விதியென்று சொல்லி
வழியேதும் தேடாது
வாழ்ந்து பழகினால்—தரம்
தாழ்ந்து போகாதோ!

மெய் வருத்தி எடுத்த
முயற்சி அனைத்தும்
தோல்வியுற்றாலும்—அது
தோள் கொடுக்காதோ!

பத்து முறை விழுந்தது
பார்த்து நடக்கத்தானே!
ஒன்பதுமுறை எழுந்தது
ஆன்மாவின் பலமல்லவோ!

முயற்சியே இன்றி
முடங்கிக் கிடக்காமல்
முட்டி மோதி தொட்டுவிடு
தோல்வியும் தோற்கும் ஒருநாள்

வெற்றி உன்னைவிட்டு
விலகிப்போனாலும்—அநுபவம்
பட்டை தீட்டிய வைரம்போல்
பக்குவபடுத்தும்

வாழும் மனிதர்கள்
வாகைசூடி முன்னேற
அநுபவம் வழிகாட்டும்
இது வரலாற்று உண்மை.





திங்கள், 27 பிப்ரவரி, 2017

சோறு தந்து காப்பதால்.

வாழ்ந்த முன்னோர்கள்
வடிவமைத்த படைப்புகளும்
வகுத்த ஒழுக்க நெறிமுறைகளும்
ஊருக்கு பெருமை சேர்த்த
எங்க ஊரு சின்ன ஊரு,
நாங்கள் ஊறி வளர்ந்ததும்
அந்த உணர்வில் தான்

மனம் மகிழ்ந்து கூத்தாடி
மழையில் நனைந்து வரும்
தெருப்பிள்ளைகளையும்
தன்னோட பிள்ளைபோல
தலை துவட்டி வழியனுப்பும்
தெய்வங்களாய் அன்னையர்கள்
தோன்றிய ஊரு அது

மீசையோடு, முரட்டு தோற்றம்
முண்டாசோடு நீண்ட துணிப்பை
ஒரு கையில் மகுடி
மறு கையில் மூங்கில்கூடை
மகுடியை ஊதி, கூடையை திறப்பான்
புஷ் என்ற சத்தத்தோடு
படமெடுத்து எழும் பாம்பு

இசைக்கேற்ப பாம்பு
ஆடத்தொடங்கும்
வீதிக்கு வரும்போதெல்லாம்
வீட்டுக்கு வீடு ஆடுவது
வாடிக்கை--வீட்டாருறவு
வீதியோடு முடிந்தாலும்
வட்டிலில் சோறும், குழம்பும் நிறையும்

ஊரோர அரசமர நிழலில்
பாம்பாட்டியின் வருகைக்கு
பாசத்தோடு காத்திருப்பாள்
அவனோட மனைவி,
அருகில் வந்து அமர்வான்
ஒன்றாய் இருவரும் உண்பார்கள்
எச்சில் பார்க்காதவர்கள்

இன்றுவரை அதனால்தான்
இணைபிரியாமல் வாழ்கிறார்கள்
பாம்பையும் சேர்த்துத்தான்,
பாம்பு கொத்தினாலும்
பல் இல்லாத பாம்பின் எச்சிலையும்
பெரிது படுத்துவதில்லை
சோறு தந்து காப்பதால்.


வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சுமக்காத மகராசி.



கழுத்திலே கட்ட
கருகுமணி தேடியதுபோல்
கவிதைக்கு ஒரு
கரு ஒன்று வேண்டி
காத்திருக்கையிலே

கருவாகிப் போனாள் என்னை
கருவில் சுமந்த அன்னை,
கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரைவதுபோல்--என்றும்
கலங்கும் என் நெஞ்சம்

தாயின் நினைவு நெஞ்சில்
தட்டும் போதெல்லாம்
இரு சொட்டு கண்ணீர்
இடம் பெயர்ந்து
தரை தொட்டு மறையும்

தியாகத்தின் திருவுருவம்
தெய்வத்துக்கும் மேலானவள்
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
அரவணைத்த பொழுதுகள்
அகலாமல் நெஞ்சில்

அடங்க மறுத்த போதெல்லாம்
இமைகள் மூடி
இதயத்தை ஈரமாக்கும்,
மறக்க முடியாமல்
மனசு புலம்பி தவிக்கும்

பஞ்சத்திலும் வறுமையை
பகிர்ந்து கொண்டதில்லை,
பானை அரிசிக்கு
பங்கம் வந்தாலும்
வேறு பயிரு வெந்திருக்கும்

விளையாட்டு பிள்ளைகளாய்
வாழ்ந்த எங்களுக்கு
வறுமையைக் காட்டாத
சுயநலத்தை எப்போதும்
சுமக்காத மகராசி.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

உடலும், உயிரும் மகிழும்.

இறைவனை தேடும்
விழிகள் இரண்டும்
ஈசனைக் காணாதபோது
இயற்கையின் அழகை
இதயத்துக்குக் காட்டி –இதுதான்
இறைவனெனக் கூறலாம்

செவிகளால் அதுபோல
தெய்வத்தை அறிய
இயலாதபோது
இசையின் வடிவாய்
இறைவனை வணங்கி
புண்ணியம் தேடலாம்

பசுமைநிறக் காடும்,
பகட்டு காட்டி தூதுவிடும்
நீல வண்ணக் கடலும்
வித்தைகள் படைத்து
சிந்தையைக் கவர்ந்து
இழுக்கும்

பாட்டும், பரதமும்
படைப்பதுபோல்
நாட்டியமாடி—மனதை
நாட்டம் கொள்ள வைக்கும்
இயற்கைக் காட்சிக்கு
ஈடேது? இணையேது?

இன்புறும் இதயம்
உற்சாகம் கொள்ளும்,
நல்லதை எண்ணும்
நலம் தேட விழையும்
வாழ்க்கை வளமாகும்

உடலும், உயிரும் மகிழும்.

யாருக்கு தெரியும்?

சில்லறைக் காசுகளை
சிதற விட்டதுபோல்
வானத்து நட்சத்திரங்கள்
வீழ்ந்து கிடப்பது
வானத்தின் பெருமையா! –இல்லை
வளமையின் செழுமையா!

வானுலக இந்திரன்
வாழும் தன் மக்களுக்கு
வாரி வழங்கிய பொற்காசுகளோ!—இல்லை
புவி வாழ் கயவர்கள்
பதுக்கிய செல்வங்கள்
பதற்றத்தில் கொட்டியதோ!

அதுவும் இல்லையென்றால்
வேறு என்னதான் காரணம்?
தேவலோக மன்னனும்
செல்லாதென்று சொன்னானோ!
தெருவில் போடுவதற்கு,

யாருக்கு தெரியும்?