திங்கள், 27 மார்ச், 2017

சாமிக்கு தெரியாதா என்ன?



கொள்ளையடித்து சேர்ப்பான்
கொள்கை ஏதுமின்றி
கொடிகட்டி பறப்பான்—பிறருக்கு
கொடுக்க மனமின்றி
குவித்து வைப்பவனுக்குத் தான்
கொட்டி கொடுப்பான் இறைவன்

உண்ண உணவின்றி
உயிர் வாழும் ஏழைக்கு
உதவுவதுபோல் தெய்வம்
குறையேதுமின்றி, குறையாமல்
நிறைய கொடுத்திடுவான்
நிகரில்லா பிள்ளை செல்வம்

இந்திய தேசத்தில்
இரண்டும் உச்சம் தான்,
எதிலும் சேராத பாரதம்
எப்போதும் நடுநிலைதான்
சமநிலையைக் காக்க
சாமிக்கு தெரியாதா என்ன?


அனைத்துக்கும்



உடைந்து விழும் பனிப்பாறை
உயரே எழவைக்கும் கடல்நீரை,
உருக்குலையும் கடலலைகள்
உரிமையோடு கரை கடக்கும்
உயிர்களை அழிக்க நினைக்கும்

தவிர்க்க முடியாத உயிர்கள்
தரையை தொடும், துடிக்கும்
தன் உயிருக்கு போராடும்,
தப்பித்து கரையேறும் பறவைகள்
தடுமாறும், இரத்தம் சிந்தும்

காத்திருக்கும் விலங்குகள்
கவ்விக்கொண்டு போகும்
கொன்று தின்றுவிடும்,
வாழ்க்கையொரு போராட்டம் தான்
வாழும் உயிர்கள் அனைத்துக்கும்


பயிராட்டம்



சின்னஞ்சிறு குழந்தைகள்
சேர்ந்து நடந்து வந்து
குலவித்தை காட்டுவதுபோல்
குதித்து விளையாடும்
காட்சி மனதை மகிழ்விக்கும்

குதித்ததில் காயம்பட்டு
கண் கலங்கியதால்
குரலெழுப்பி அழுகின்ற
குழந்தைபோல
அருவி நீர்

ஒன்று சேர்த்த அருவி நீரை
ஒற்றுமையாய் வாழ
கற்று கொடுத்து
கைபிடித்து அழைத்து செல்லும்
அன்னைபோல ஆறு

வாழையடி வாழையாய்
வந்துதித்த பிள்ளைகளுக்கு
வாழும் பெற்றோரின் செயல்கள்
வழிகாட்டும் ஆறுபோல்,
வளரும் பிள்ளைகள் பயிராட்டம்.


சனி, 18 மார்ச், 2017

படைக்கப்பட்டது விதியோ!



கடலுக்கு தண்ணி காட்டும்
கரையோர கிராமமது,
அலை எழுந்து வந்து
அள்ளிக்கொண்டு போனாலும்
ஓடி ஒளியாத ஊருசனம்
ஊரை விட்டு போகாது
வாழ்வை எண்ணி

கரையில உறவை விட்டு
கடலுக்கு மீன் பிடிக்கக்
கருக்களில் போனவன்,
மீனுண்ட பையன்போல
மீண்டு வராததைக் கண்டு
மீளாத்துயரில் குடும்பம்
மீனவர்களுக்கோ ஓரிழப்பு

இக்கரையை விட்டதா
அக்கரைக்கு போனதா
எக்கரையாலே
கறைபட்டு போனது?
அக்கறையில்லையா யாருக்கும்,
பிடிபட்ட படகோட்டி விடுபட்டு
படகை சிறை பிடித்தால்
பசிபோக்க வழியேது?

சுட்டு தின்னும் மீனுபோல 
சுட்டுக் கொன்றால்
பட்டுபோகாதோ மனிதநேயம்!
படைத்தவனே
செத்துபோக விட்டபின்னே
சபிக்கப்பட்ட வாழ்க்கைபோல
படைக்கப்பட்டது விதியோ!



தொலைக்காத சாட்சிகள்

சுழன்றடிக்கும்
சூறாவளிக் காற்றின் மையம்
சூன்யமாய் காட்சி
தருவதுபோல்
தமிழகத்தின்
சல்லிக்கட்டு போராட்டத்தில்
சனங்களெல்லாம்
அறவழியில் அமைதி காக்க,
அவர்களை சுற்றி நடந்த
ஆரவாரம்

சூறாவளி வந்ததுபோல்
சுழன்றடித்த நிகழ்வுகள்,
வாடிவாசல் வழி
விடுபட்ட எருதுபோல்
ஓடிய இளங்காளைகள்
ஏரு தழுவாமலேயே
ஒரு  வீர விளையாட்டு
பழியா? பாவமா?
தொலைக்காட்சி படங்கள்

தொலைக்காத சாட்சிகள்

திங்கள், 13 மார்ச், 2017

தலையெழுத்து மாறும்



மரியாதை
மனிதருக்கு பெருமை சேர்ப்பது,
கொடுத்த உயிரை
கடவுள் எடுத்துக் கொள்வதுபோல்
கொடுக்கும் மரியாதையையொட்டி
கிடைக்கப் பெறுவது

நல்ல மனம் உடையவரின்
நடத்தையே—அவருக்கு
மற்றவர்களிடமிருந்து
மரியாதையை பெற்றுதரும்,
தாழ்வும், உயர்வும்
தானே உருவாக்குவதுதான்

நேர்மையும்
நல்ல பண்பும்—மரியாதையை
உயர்த்தி சிறப்பிக்கும்
உற்ற நட்புகள் கூடும்
உறவுகள் பாசம் காட்டும்
உள்ளம் மகிழும், நிறையும்

அவமதிப்பை—அகத்தில்
அமரவைத்தால்
சுயமதிப்பு சுருங்கும்
சோகம் சூழும்
தனிமை படுத்தும்
தலையெழுத்து மாறும்



சரிபாதி தந்தானோ!



மூத்தவன் ஆதவன்
உறக்கம் கலைந்து
முகம் காட்டும் முன்
விடிகாலைப் பொழுதில்
வழிபடும் மக்களுக்கு
தரிசனம் தர
துயில் கலையும்
தெய்வங்களை

தொழுது வழிபடுவதுபோல்
தென்றல் காற்று
மெல்ல அசைந்து வரும்,
மொட்டுக்கள் மலர்ந்து
மனம் வீசும்,
கூக்கூவென குயில்கள்
குரலெழுப்பி மந்திரம்
சொல்லும் நேரமது

குழந்தை தெய்வங்களின்
துயில் கலைந்து
உணவு தந்து—பள்ளிக்கு
வழியனுப்பி வைக்கும்
பெற்றவளின் பணிவிடை
பரமனுக்கு ஆராதனையோ!
அதனால் தானோ—இறைவன்

சரிபாதி தந்தானோ!

மனம் மகிழ அருள்வான்



அத்தி பூத்தது போலொரு
இரயில் பயணம்
ஆற்றோரம் வீற்றிருக்கும்
ஆலமர பிள்ளையாராய்
இருக்கையில் அமர்ந்திருக்க

பழி சுமந்தவன்
பாவத்திற்கு அஞ்சி
பயந்து ஓடுவதுபோல் இரயில்,
பார்த்து வழிவிடும்
பாமரமக்கள் எதிர் திசையில்

வலப்பக்க அருவி—குதித்து
விளையாடி மகிழ்வதும்,
ஆறாய் ஒன்றுபட்டு
அசைந்து, நடந்து இடப்பக்கம்
கையசைத்து போவதும்

வானையும், மண்ணையும்
உறவாக்கும் மலைகள் மீது
மோகம் கொள்ளும் மேகம்
மழையைப் பொழிந்து
மறுபடியும் உறவை கூறும்

இயற்கையை விஞ்சிய
இறையுண்டோ?
இயற்கையை ஆராதியுங்கள்
மாயவன் வருவான்

மனம் மகிழ அருள்வான்