சனி, 1 ஏப்ரல், 2017

வெளியில் காட்டுவதில்லையோ!


வண்டு தேடும் மலர்
வாசம் சுமந்து காத்திருப்பது
மாயவனைத் தழுவவா?—இல்லை
மங்கை மகுடம் சூடவா?

வண்ண,வண்ண உடையணிந்து
வசந்தத்தை வரவேற்று
வாழ்க்கை தேடவா?—இல்லை
வசீகரித்து மயக்கவா?

பருவத்தில் மலரும்
பூவும், பொண்ணும்
ஒன்றென சொல்வது
பொறந்த இடம்விட்டு போவதாலோ!

பெற்றோரை பிரிந்து போகும்
புதுமணப் பொண்ணுபோல—பூவே
புலம்பி நீ கலங்கலையே!
உன் நெஞ்சு கல்நெஞ்சோ!

பிடித்தவரோடு ஓடிபோக—இறைவன்
பூவுக்குக் கற்று தரவில்லையோ!
பறித்துத் தொடுத்தபின் தான்
போகுமிடம் புலப்படும் அதற்கு

அதனால் தானோ
அன்னையை விட்டு பிரிந்தாலும்—பூவு
உள்ளத்தின் வேதனையை
வெளியில் காட்டுவதில்லையோ!



தெரியலையே!

காவிரி வருவான்னு
கரைவேட்டி சொன்னது
யாரை பற்றி சொன்னதோ!
விவசாயி கண்களில்
உருண்டு விழுவது அவளா?

பெத்தபுள்ள அழுதா—ஓடிவந்து
பாலூட்டும் தாய்போல
பாரத மாதா நினைக்கலையே!
நெடு நாளா நீர் வேண்டி
நாளெல்லாம் அழுதாலும்
நல்லவழி காட்டலையே!

உழுத மண்ணில் நட்டுவைத்த
உயிருள்ள நாத்தெல்லம்
வாடி சருகாகி மடிய—கண்ட
விவசாயி உடலுமல்லவா
உடன் கட்டை ஏறுது

கருணை காட்ட, கையெடுத்து
கும்பிட்ட தெய்வமெல்லாம்
வாய் பொத்தி மௌனம் காப்பது
அதிகார வர்க்கம்போல
இரட்டை வேடம் போடுதோ!

காடு கழனியெல்லாம்
காய்ந்து பாலை நிலமானா
கால் வயித்து கஞ்சிக்கும் வழியேது?
உயிரை விடும் விவசாயிக்கு
வாய்க்கரிசி போட கூட
வழியேதும் தெரியலையே!