புதன், 31 மே, 2017

நிம்மதி தந்தது



ஒடுங்கிய முகம்
ஒடிந்து விழுவதுபோல தேகம்
கூட்டம் காணும் இடத்தில்
கருமமே கண்ணாய்
வயிற்று பிழைப்புக்கு—பலூன்
விற்கும் பெரியவர்

காசிக்கு வந்தால்
கருமம் தொலையுமென்பர்
இவரோ, பிள்ளை குட்டி வயிறு நிரம்ப
இரவின் கடுங்குளிரிலும்
இமைகள் மூடாம—பலூன்
விற்று வாழ்பவர்

வேற்று இடம்
வெவ்வேறு சனங்கள்
தேடும் இறையுணர்வு
எல்லோருக்கும் ஒன்றாவதுபோல்
பசியும், ஏக்கமும், பரிதவிப்பும்
பாசமும் அனைவருக்கும் ஒன்று தான்

விற்கும் பலூனை மொத்தமா
வாங்கியபோது
பெரியவர் அடைந்த மகிழ்ச்சி,
இறைவனின் தரிசனம்,
அபிஷேகம், ஆராதனையை விட
நெஞ்சுக்கு நிம்மதி தந்தது


உயிரை மாய்த்துக்கொண்டார்


விதைக்க முடியாம
விளை நிலம் வாய் பிளக்க,
உயிரைக் காக்க
ஊருசனம் ஒன்றுகூடி
மழையைக் கொண்டுவர
மாரி தாத்தாவைத் தேடிபோனார்கள்

குறி சொல்லும் தாத்தாவின்
குரலுக்கு மழை வருமென
ஊருசனம் நம்பியது,
சுத்தபத்தமுள்ள தாத்தா
சாமி மீதும், தொழில் மீதும்
சலியாத பக்தி கொண்டவர்

குறி சொல்ல ஒருநாள்
கிளம்பும்போது
விதவை பேத்தி எதிரே வர
விநாச காலமென
குறி சொல்வதை தள்ளி வைத்துக்
குடிக்க நீர் கேட்டார் பேத்தியிடம்

தாகம் தணிக்க அல்லவென
தாத்தா, பேத்தி இருவரும் அறிவர்,
மறுநாள் குறி சொல்ல
ஊருசனம் கூடியபோது
தாத்தா சொன்னார் “பெரிய
தப்பு ஒன்னு ஊரில் நடந்திருக்கு

ஆத்தா கோவத்துல இருக்கா
அதனால தான் மழையில்ல,
பரிகாரம் செய்வதற்கு
பாவம் செய்தவர்கள்
பொழுது விடியுமுன்னே
ஒருவருக்கும் தெரியாம—ஊரைவிட்டு
ஓடிப்போக வேண்டும்” என்றார்

அடுத்த நாள் காலை
தாத்தாவின் பேத்திய காணோம்,
தப்பென்ன செஞ்சான்னு ஊரே வினவ
பதினாறு வயசில விதவையான
பேத்தி அடுத்தவீட்டு பையனோடு
பழகுவதை தாத்தா பார்த்ததுதான்

ஊருசனம் அறிந்தால்—பேத்தியை
உயிரோடு கொன்றுவிடுவார்களென
தாத்தா செய்த தந்திரம்,
தானும் தவறிழைத்ததாய் எண்ணி
தண்டனை கொடுத்துத்

தன் உயிரை மாய்த்துக்கொண்டார் 

வெள்ளி, 26 மே, 2017

உறுதுணயாகும்


கருவில் சுமந்தத் தாயின் அன்பு
கண் மூடும் வரை நெஞ்சில் நிலைத்திருக்கும்,
வெளியில் தெரியாத தந்தை அன்பை
உள்ளம் உணரும் நாம் தந்தையான பின்

உன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய
அன்னை தான், விழாமல் பாதுகாத்ததும்,
உலகை உனக்கு அறிமுகப்படுத்திய தந்தையோ
விழுந்தாலும் எழுவதற்குக் கற்று கொடுத்தவர்

உனக்கு வாழ்வு தந்தது அன்னை
முதலில் நடக்கக் கற்று தந்ததும் அவளே,
வாழ்க்கை பயணத்துக்கு வழிகாட்டி
வாழக் கற்று கொடுத்தவர் தந்தை

உனது பசிபோக்கி, உயிர் காத்த அன்னை
உயிர்களை நேசிக்கக் கற்பித்ததும் அவளே,
மனிதநேயத்தை கடைப்பிடிக்க சொன்ன தந்தை
மகனுக்கு பசி என்னவென்று புரியவைப்பவரும் அவரே

அநுபவம் வழி கற்பிப்பவள் அன்னை
அவளின் அன்பும், பண்பும் பிள்ளையிடம் சேரும்,
பிள்ளை அநுபவத்திலிருந்து கற்றிட உபதேசிக்கும்
தந்தையின் உண்மை, நிலைத்தன்மை பிள்ளைக்கு

உறுதுணையாகும்.

பாடமாக மாட்டோமோ!

கும்பிட்ட தெய்வம்
குடி நீர காட்டலையே,
காலம்பூரா காத்திருந்தும்
கைகொடுத்து உதவலையே,
வெள்ளமா காவிரி எப்போதும்
வெகுளியாய் வந்து போவாளோ!

வக்கனையா பேசுவோரும்
வழியேதும் தேடலையே,
செல்வம் சேர்ப்போரும்
பொதுநலத்த நினைக்கலையே,
எப்போதும் மாரியாத்தா
எப்படிதான் காப்பாளோ!

மரணம் நேருமென்றால்
மாற்றுவழி தேடிடு,
பருவத்தில் உருவாகும்
கருமேகம் தரும் நீரை தடுத்து
பக்குவமா காத்து
பலபேரும் பருகிட வழி காணு

ஊருசனம் ஒன்றுகூடி
ஆறு, குளம் தூறுவாறு,
வேண்டாத் தாவரத்தை
வெட்டி வெளியேற்று,
பலபேரும் பலனடைய
பெறும் நீரை முறைபடுத்து

ஒரு சொட்டு நீரும்
வெறுமனே போகாம
சேமிக்கக் கற்றுகொடு,
அடுத்தவனை நம்பி
அழிவதைக் காட்டிலும்
நாம் பாடுபட்டும் மாண்டுபோனால்
நாட்டுக்கு பாடமாகமாட்டோமோ?



திங்கள், 15 மே, 2017

பனித்துளி

இயற்கை அன்னை
ஈன்றெடுத்த சிசுவே—உன்னை
பெற்றவளே இருளில்
போட்டு சென்றாளோ!

புல்லின் மடியில்
படுத்து உறங்கிய நீ
பொழுது விடிந்ததும்
பயந்து நடுங்குவதேன்?

   ஆதவன் அறிந்தால்
அழித்து விடுவானென
உள்ளம் துடிக்கிறதோ?
உனக்கென்ன தெரியும்

தரணி காக்கும் இயற்கையன்னை
தவறுஏதும் செய்தாளோ?
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கமோ!

பழகிய உன்னை நினைத்து
பசும்புல் சோகத்தால் 
கலங்கி நின்னு
கண்ணிர்  வடிக்கிறதோ 

இயற்கை படைத்த
ஈசலூக்குக் கூட
வாழ்நாள்  ஒரு நாளாம்

உனக்கோ அதுகூட இல்லை

வலிமை ஆணுக்குண்டா?

ஓலியெழுப்பி
வெளி கொணரும்,
வரம்பு மீறி
வம்புக்கு துணை போகும்,
மனித நாக்கின்
மையப் பகுதி
அமைதி மண்டலம்
எனக் கூறுவதுபோல்

பண்பாடென்றும்
பலவீனமென்றும்
பெண்ணினத்தை
அடிமையாக்கி, ஆட்டிபடைத்த
ஆணினத்தின் அறிவு—பள்ளி
படிப்பில் பின்தங்கும்
முரண்பாட்டை
என்னவென்று சொல்ல!

அறியுமோ வையகம்
ஆணைவிட பெண்
ஆண்டுகள் எட்டு
அதிகம் வாழ்கிறாளாம்,
நோயை எதிர்க்கும் சக்தி—ஆணைவிட
நங்கையருக்கு அதிகமுண்டாம்
அதனால் தானோ சக்தி
என்ற பேருமுண்டாம்

மாரடிக்கும் பெண்களுக்கு
மாரடைப்பு எனும்
பேரிழப்பும் ஆண்களைவிட
பெண்களுக்குக்
குறைவாம் என்ற
உண்மைதனை சொன்னால்
ஒத்துக்கொள்ளும்
வலிமை ஆணுக்குண்டா?


வெள்ளி, 12 மே, 2017

போராத காலமோ!

சோற்றுக்கே வழியின்றி—தவிக்கும்
சனங்களுக்கு
சாக்கடை ஒரு கேடாயென
சரி செய்யாமல் விட்டார்களோ!

நாளும் குடித்துவிட்டு
நடுரோட்டில் வீழ்ந்து கிடப்பவனுக்கு
நல்லது, கெட்டது அறிய
நேரமேது என எண்ணினார்களோ!

பஞ்சப்பரம்பரைகளிடம்
பணங்காசு இருக்காதுன்னு
பாழும் மனசு நினைச்சதாலே
பார்க்காமல் போனார்களோ!

ஏதும் அறியா
இளம் பள்ளிக் குழந்தையொன்று
பாடம் படிக்க
பள்ளிக்கு போகையிலே

மனிதக் கழிவு சுமக்கும்
மூடாதத் தொட்டி ஒன்றில் வீழ்ந்து
உயிரைக் கொடுத்து
எடுத்து சொல்கிறதோ
நமது சுகாதார அவலத்தை!

நேர்மையைத் தொலைத்து
நெறி தவறி நடக்கும் சிலரால்
பொதுவாழ்க்கைக்கு
போராத காலமோ!

நம்புமா சோதிடத்தை!

காலம் காலமாய்
காலம் தவறாமல்—சுற்றும்
கிரகங்களெல்லாம்
இயற்கை தந்ததா
இல்லை
இறைவன் படைத்ததா?

இயற்கையோ, இறைவனோ
எதுவானாலும்
பிரபஞ்சத்தில் எடையும், மாற்றமும்
உயரும்போது
கிரகங்கள் சுழலுமா?
அறியாதவரை நிம்மதி தானே!

தோன்றிய அனைத்தும்
ஒரு நாள் அழியுமென்றால்
சுற்றும் கிரகங்கள்
செயலிழந்து
அழியாதோ பிரபஞ்சம்
ஆண்டவனுக்கே வெளிச்சம்

சோதிடத்திற்கு துணை நிற்கும்
சுழல்கின்ற கிரகங்கள்
மறைக்காமல் சொல்லுமா
மண்ணில் வாழ் மாந்தரின்
முடிவு நாள் எப்போதென்று?—சொன்னால்

மானுடம் நம்புமா சோதிடத்தை!