திங்கள், 9 அக்டோபர், 2017

ஆண்டவனையும் நம்பாமல்



மணமகளின் மணவாழ்க்கை
முழுதாய் ஓராண்டு முடியாத நிலை
கைநிறைய சம்பாதித்தவனை
கட்டிவைத்தனர் பெற்றோர்--அவன்
குடிகாரன், நடத்தை கெட்டவனென்று
காலம் அவளுக்குக் கற்றுதந்தது

இரவில் வீடு திரும்பும் அவன்
இல்லாளை திட்டுவதும், அடிப்பதும்
வாடிக்கையானது,
வெளியில் சொல்லமுடியாமல்
வேதனையில் வாடினாள்
தெய்வங்களும் கருணைகாட்டவில்லை

அந்தப்பெண் ஒருநாள்
அடிதாங்கமுடியாமல் கதறினாள்
அதற்கும் அவன் அடித்தான்
தாங்கமுடியவில்லை என்னால்
தயவுகாட்ட வேண்டினாள்
தொட்டு தாலிகட்டியவனிடம்

அழுகுரல் கேட்டு, மனம் கேட்காமல்
அடுத்தவீட்டு பெரியவர்—கதவைத்
தட்டி திறக்கக் கூறினார்
திறந்ததும், ஏன் சார் அவங்களை
எப்போதும் இப்படி அடிக்கிறீங்க?
ஏற்புடையதா இது? என்றார்

இது எங்கக் குடும்பப்பிரச்னை
இதில் தலையிட வேண்டாமென்றான்,
“ ஒரு உயிரை அடித்துக் கொல்வது குற்றம்
அடிக்கமாட்டேனென்று உறுதி கூறினால்
போகிறேன்,இல்லையென்றால்
போலீசைக் கூப்பிடுவேன்” என்றார் பெரியவர்

கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறினான்
போனதும்,பெரியவரின் காலை பிடித்து
“எதுவும் செய்துவிடாதீர்களென்று கெஞ்சினாள்
,எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்
என்று கதறினாள்”-- முயற்சியெடுப்பதாக
உறுதியளித்து பெரியவர் தன் வீடு சென்றார்

இரண்டு நாட்கள் கழித்து அவள்
இறந்துபோனாள்
கொலையா? தற்கொலையா?
பட்டது போதுமென்று சொன்னாளே
பட்ட வேதனையையா?—இல்லை
வாழ்க்கையையா?

தான் காப்பற்றுவதாகக் கூறி
தனித்து அவளை விட்டு வந்தது
தவறோவென காலமெல்லாம்
தவிக்கும் பெரியவரின் நெஞ்சம்,
அவளின் துயரை அவளே முடித்துக்கொண்டாள்

ஆண்டவனையும் நம்பாமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக