செவ்வாய், 23 ஜனவரி, 2018

மழை பெய்ய!



பாதைகள் அன்று
பக்கத்து ஊர்களுக்கு வழிகாட்டியது,
பேய், பிசாசு என்று
பேசிக் கொண்டபோதும்
பத்திரமா போய் வந்தார்கள்

இப்போதோ
இடம் பெயர்ந்தது போல்
பேயும், பிசாசுகளும்
வழியெங்கும் நிசமாகவே
வீழ்ந்து கிடக்கின்றன

போதை சரக்கால்
போக்கத்து போன சாலைகள்
அடுத்த ஊர் கூட
அண்டை நாடு போல
அந்நியபட்டு போனது

மாமூல் மகசூலில்
மதியிழந்து மனமகிழும்
மகாதேவர்கள்
மக்களின் குறைகளை
அறிவார்களோ, என்னவோ?

பெத்த பிள்ளைபோல
பார்த்து வளர்த்த நிலம்
நீர்வரத்து இல்லாம—காய்ந்து
நிலம் வெடித்து போனதால்
நிலைகுலைந்த விவசாயி

ஒரு முழ கயிற்றுக்கு
உறவாகிப் போனான்,
வருண பகவானுக்குக் கூட
விபரம் தெரியாதோ?—அவனுக்குமா
மாமூல் தரவேண்டும்

மழை பெய்ய!

திங்கள், 22 ஜனவரி, 2018

ஏன் சாகவேண்டும்?



கோடைக் கதிரவனின்
கொடூரப் பார்வை
கொளுத்தும் வெய்யிலில்
காயும் மக்களின் தேகம்
சொரியும் நீர்
சொல்ல நினைக்கும்
சாக்காடு தூரமில்லையென

கேட்பதும்,
கொடுக்க மறுப்பதும்
காலம், காலமாய் நடந்தேறும்
காணொளி காட்சிகள்,
விலாங்கு மீன்போல
விவரமான கட்சிகள்--பாவம்
வறுமையில் வாடும் மக்கள்

அரசியல் கழிவுகளால்
அடைத்து விடாதே கதவுகளை,
நதிகளை இணைத்து
நாளும் ஓடவிடு
சுத்த நீரை சுமந்து வந்து                                  
செழிப்பாக்கட்டும்--தமிழகம்
சொர்க்க பூமியாய் மாறட்டும்

பண்டைய நாகரீகம்
பிறந்ததும், பெருமை சேர்த்ததும்
நதிக்கரை ஓரம்
அதற்காக—இன்று
நாகரீக சீர்கேட்டாலும்
நலிவுறும் பண்பாட்டாலும்

நதிகள் ஏன் சாகவேண்டும்?

புதன், 10 ஜனவரி, 2018

இதுதான் வாழ்வு



 உடல் வருத்தி ஒருவன்
உழைத்து சேர்த்த செல்வத்தை
இன்னொருவன் அபகரிப்பது
என்ன நியாயம்?
உயிர் மூச்சு நின்றுபோனால்
உன்னோடு கூட வருமா?

துயர் துடைக்க போதாத
தொழிலாளர் வருமானம்
கற்று தரும் கடன் வாங்க,
கந்துவட்டி கூட்டலில்
கைமாறும் காணி நிலம்
உயிரை எடுக்காமல் போகுமா?

மண்ணை ஆண்டவர்
மண்ணிலும் கோடி
இன்னும் ஆள்பவர்
எத்தனை கோடியோ!
செத்தபின்னே உனக்கு
சொத்து விபரம் தெரியுமா?

சேர்த்த சொத்தையெல்லாம்
பத்திரமா பாதுகாக்க
பிரார்த்தனை பகவானுக்கு,
அசரீரிபோல் பூசாரி சொன்னார்
“இறுதியில் அனைவருக்கும் ஆறடிதான்
அதுவும் நிலையானதல்ல” என்றார்

உலகம் முழுதும் போதாதென்று
உரக்கக் குரல் கொடுத்த
மாமன்னன் அலெக்சாண்டர்
மாண்டபின் “ கல்லறை
போதுமானதாக பொறிக்கப்பட்டுள்ளது “
இதுதான் வாழ்வு.



வியாழன், 4 ஜனவரி, 2018

வாய்க்கரிசி போடவா?



பள்ளி போகும் பிள்ளை
பணம் கட்ட கேட்டபோது
படிக்க வைப்பதின் கஷ்டத்தை
புரிந்து கொண்டதுபோல்
கடந்து போனார் தந்தை
காதில் வாங்காமல்

கல்லில் நாரு உரிப்பதுபோல்
கட்டிய மனைவி
கணவனிடம் கைசெலவுக்குக்
காசு கேட்டபோது,
மடியில கனமில்லாம
மருட்சியுற்றது அவன் மனசாட்சி

மளிகைக் கடைகாரன்
மாசம் முடிந்து, பணம் கேட்டு
வாசலில் வந்து நிற்க,
வேறு வழியின்றி
விதியை நம்பி புலம்பியவன்
வாழ்வில் எதை சாதிப்பான்?

வறுமையில் நாளும்
வாடும் நடுத்தர மனிதனுக்கு
வாழும் வாழ்க்கை
கால் சுற்றும் பூனையாய்க்
கடந்து போகாமல்
கசந்து போனாலும்

சம்பளம் வாங்கியதும்
சகலத்தையும் மறந்து
சபலபுத்திக்கு சபிக்கபட்டதுபோல்
சாராயக்கடையை தேடிப்போவது
சாக்கடையில் விழவா?,-- இல்லை
செத்து வாய்க்கரிசி போடவா?