வியாழன், 28 ஜூன், 2018

முகத்தில் ஒளிரும்




ஆல மரத்து விதைபோல
அழகான சின்ன வார்த்தை,
இயற்கை தந்த வரம் என்பதால்
இதன் புகழ் இமயம் தொடும்,
விண்ணையும், மண்ணையும்
இணைக்க வல்லது
அதனால் தானோ
அகிலமே இதன் காலடியில்

மக்களை ஒன்றுபடுத்த
மதங்கள் போதித்த வார்த்தை
ஆற்றல் மிகுந்த சொல்
அனைவரையும் வசப்படுத்தும்,
பொறுமையின் சின்னம்
பொறாமை கொள்ளாது
வறுமையில் வாடினாலும்
வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும்

தனக்கு உதவியாக இறைவன்
தாயை படைத்து
அனைத்து உயிர்களையும் காக்க
இதற்கு அருள் தந்தான்,
நதியின் கரையோரம் வளரும்
நாணலைப்போல
வெள்ளம் பெருகி வந்தாலும்
வளைந்து கொடுத்து நிமிரும்

ஆன்ம நேயத்தின் அடித்தளம்,
அனைத்தும் இதற்கு
ஈடாகாது என்றால்
அன்பு தானே அது,
காட்டு விலங்குகள் கூட
காட்டும் அன்பால் கட்டுபடும்
அறிவு கண்களில் தெரியும்
அன்பு முகத்தில் ஒளிரும்.

சனி, 23 ஜூன், 2018

ஆராதிக்கும்




பரமன் படைத்த பூமகள்
பருவத்தில் பூத்திருக்கும்
பாவையவள்
துணை தேடி கயல்விழியை
தூது விட்டாள்
துள்ளிக் குதித்த கயலோ
அள்ளிக் கொண்டது
ஆணின் உள்ளத்தை

அழகு இதழ்களை
ஆடவைத்து
நாட்டிய புன்னகையை
பாட்டின்றி மேடையேற்றி
அரங்கேற்றியதால்
அகம் தொடும் காதல்
ஆமோதிக்கும்மெளனம்
ஆராதிக்கும்

வெள்ளி, 15 ஜூன், 2018

இனி என்ன செய்திடுவான்?




ஏதேதோ கனவுகள்
எத்தனையோ ஏக்கங்கள்
அத்தனையும் சுமந்துகொண்டு
அரைகுறை வாழ்வு வாழும்
ஒரு தாய்க்கு வயது ஐம்பது,
பிறந்த பிள்ளைகள் மூன்று
இப்ப இருப்பதோ இரண்டு

கடைகுட்டி மகன் மீது
கொள்ளை பிரியம் தாய்க்கு,
பெண்மைக்கே உரிய
பொறாமையால பிள்ளையை
கடலம்மா எடுத்து போனாள்
கண்ணிலே காட்டாம
காலத்தை கடத்தி விட்டாள்

கொழும்பில் குடியேறி
குடும்பத்தோடு வாழும்
மூத்த மகனோடு சிலகாலம்
இருந்துவிட்டு,
இரண்டாவது மகன்
வீட்டில் வாழ அந்தத்தாய்—கப்பலில்
இந்தியா திரும்பும்போது

வீசிய புயற்காற்றால்
வீரியம் காட்டும் அலைகள்
கப்பலை ஆட்டி படைக்க—பயணிகள்
கடவுளை பிரார்த்தித்து அழ ,
அந்த அன்னையிடம் மாலுமி
“அமைதியாய் இருக்கிறீர்களே
 உங்களுக்கு பயமில்லையா” என்றார்


அன்னை சொன்னாள்
“ எனக்கு என்ன பயம்?
கப்பல் கரை சேர்ந்தால்
காத்திருக்கும் எனது இரண்டாவது
மகனைக் காண்பேன்—திசை
மாறி கொழும்பு சென்றால்
மூத்தமகனைக் காண்பேன்

கப்பல் மூழ்கினாளோ
கடலில் என் கடைசி மகனைக்
காண்பேன்,
எப்போதும் நான்
எதற்கும் தயாராயிருக்கிறேன்
இதற்கு மேல் இறைவன்
இனி என்ன செய்திடுவான்?



வியாழன், 14 ஜூன், 2018

உருப்படுமென்று




தொந்தரவு செய்த
தன் ஆறு வயது பையனிடம்
துண்டுகளாக வெட்டிய
உலகப்படமொன்றை தந்து
ஒன்றிணைக்க சொன்னார்

ஒரு மணி நேரத்தில்
சரியாக இணைத்து கொடுத்த
சிறு பிள்ளையைக் கண்டு
பெருமிதம் கொண்ட தந்தை
எப்படி செய்தாய் என்றார்?

உலகப்படத்தின்
மறுபக்கத்தில் இருந்த
மனிதப்படத்தை சேர்த்தேன்
உலகப்படம் தானாக
முழுமையானது என்றான்

ஆச்சரியமடைந்த தந்தை
அகமகிழ்ந்தார்,
ஒன்று புரிகிறதுமனிதன்
முதலில் சீர்பட்டால்
உலகம் உருப்படுமென்று.



வியாழன், 7 ஜூன், 2018

இதனை உணரவேண்டும்




மஹாபாரத மண்ணுக்கு
மரியாதையுண்டு எப்போதும்
மக்கட்தொகை பெருக்கம் அதிகம்,
கானகத்து விலங்குபோல
கல்லாதாரும் இங்கு அதிகம்

மக்களின் வரிப்பணத்தில்
மக்களுக்கு இலவசம் தந்து
மக்களை மாக்களாக்கி
மகோன்னத வாக்கை பெற்று--இங்கு
மக்கள் பிரதிநிதியாவதும் அதிகம்

நீருக்கும், சோறுக்கும்
நாளெல்லாம் போராடும்
நம்மோட மக்கள் அதிகம்,
ஊட்டச்சத்து இல்லாமஇங்கு
உயிரிழக்கும் குழந்தைகளும் அதிகம்

அனைத்தும் அறிந்திருந்தும்
அறியாதவர்போல்
அடுத்தவருக்கு உதவாதவர்கள் அதிகம்,
தான் மட்டும் வாழ எண்ணும்
தான்றோன்றிகளும் இங்கு அதிகம்

அதிகம் ஆகாதவரை
அனைத்தும் அழகு தான்,
உயிரைக் காக்க
உதவும் ஆக்சிஜனேயானாலும்
அளவோடு இருப்பது தான் நலம்

ஒன்று தெரியுமா உனக்கு
அதிகமாகும் ஒன்றால்
இழக்க நேரும் மற்றொன்றை,
இது இயற்கை வகுத்த நீதி--அனைவரும்
இதனை உணரவேண்டும்