திங்கள், 30 ஜூலை, 2018

எப்ப காணப்போறா?





பகல், இரவு பார்க்காம
பொழுதெல்லாம் சிரிப்பு சப்தம்
காது வழி புகுந்த ஒலி
கடைசி வரை உள்ளிருக்கும்
அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு

மலர்போல மணக்கும் இவள்
மணமானவள், பேரு புவனா
பூனாவில் பணி கணவனுக்கு
பொண்ணு ஊருக்கு புதுசு
பார்ப்போரை மயக்கும் பேரழகி

ஊரு பிரச்சனைக்காக வந்த
ஒரு போலீஸ் அதிகாரி
இவள் வீட்டிற்கு வந்து
இருவரும் சிரித்து மகிழ்ந்ததை
ஊரு சனம் ஒருமாதிரி பார்த்தது

அழகு சிலையை
அள்ளி அணைக்க நினைத்த
உள்ளூர் வாசிகளுக்கும், புவனா
உறவாகிப்போனது தான் வேதனை
விதி யாரை விட்டது

இல்லேன்னு போனா
இல்லேன்னு சொல்லாம
கொடுக்கிற மகராசி—மக்களைக்
காத்த புண்ணியவதி
மீன் வித்த காசு நாறுமா என்ன?

திருட்டு வழக்கில் பிடிபட்டு
சிறைபட்ட ஒரு இளைஞனின்
புது மனைவி புலம்பி தவித்ததால்
போலீஸ் நிலையம் சென்று
புவனா இளைஞனை விடுவித்தாள்

ஊருக்கு திரும்பி பேருந்தில்
வரும்போது விபத்தில் சிக்கி
உயிர் விட்ட புவனாவுக்காக
ஊரே  கதறி அழுததை—இனி
இவயெப்ப காணப்போறா?


வியாழன், 26 ஜூலை, 2018

மகுடம் சூட்டும்




மெய்யடக்கம்
மனித உருவை மாற்றி
சாம்பலாக்கும்,
மன அடக்கம்
மனிதனை தெய்வமாக்கி
மேன்மையுறச் செய்யும்

கர்வம், கோபம்
களைந்து விட்டால்
அடக்கம் தானே வரும்,
நாவடக்கம், புலனடக்கம்
நிமிர்ந்து நிற்க வைக்கும்
உயிரையும் காக்கும்

அனைத்து நற்பண்புகளுக்கும்
அடிப்படை,  அடக்கம்,
அடக்கமும், எளிமையும்
உங்களை அழகு படுத்தும்
அறிவின் அடையாளம்
அறிவுக்கு மகுடம் சூட்டும்

விடுதலை கிடைக்கும்




அவரவர் நாக்கு
அவரவருக்கு சொந்தம்
அது உதிர்க்கும் வாக்கு
அடுத்தவரை சார்ந்ததால்
அதைக் கையாள்வதில்
அதிகக் கவனம் வேண்டும்

இறைவன் அதனால்
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள் தந்து
நாக்கை மட்டும் ஒன்றாக
நமக்கு படைத்தான்
நல்ல எண்ணத்தோடு

பிறரை வசை பாடி
பாவம் புரியும் நாக்கால்
ஏதுமறியா பல்லும், உடலும்
உடையும், இரத்தம் சிந்தும்,
வம்புக்கு போகாமல் நாக்கை
வாய் தான் தடுக்கணும்--இல்லையேல்

நாக்கு சிவன்போல ஆடி
நாட்டையே ஆட்டி படைக்கும்,
குடும்பம் சிதறும்,
உறவும், நட்பும் பிரியும்
முன்னேற்றமும்  தடைபடுவதால்
நாக்கை கைதியாக்கு
நமக்கு விடுதலை கிடைக்கும்

ஞாயிறு, 22 ஜூலை, 2018

தெவசம் கொடுப்பதா!




தெய்வானை அழகானவள்
தெய்வத்துக்கு நிகரானவள்
மணமுடித்து பத்தாண்டு
மனதார வாழ்ந்தாலும்
மழலைப்பேறு இல்லாதது
மனதில் ஒரு பாரம்

குறை இருப்பது
கணவனிடம் தானென
மருத்துவர் சொன்னதும்
மனமுடைந்தாள் தெய்வானை,
குழந்தையொன்றை தத்தெடுக்க
கணவர் சுமனோ மறுத்து விட்டார்

வணிகத்தில் சுமன் தீவிரமானார்
வியாபாரம் மேன்மையுற்றதுஅதில்
பணிபுரியும் செல்வியிடம்
தனது விருப்பத்தை சொல்லி
தனக்கொரு குழந்தை வேண்டி
திருமணம் செய்வதாய் கூறினார்

திருமணம் முடிந்தது
திருமணத்தன்று புது வீட்டில் தங்கி
விடிய காலையில் பழைய
வீட்டுக்கு சென்றார் சுமன்,
எப்போதும்போல்
தெய்வானை பணிவிடை செய்தாள்

நாட்கள் நகர்ந்தன
அங்கும், இங்குமாக சுமன்,
பகல் உணவுக்கு ஒரு நாள்
பழைய வீட்டுக்கு வந்தபோது
செல்வி அங்கிருந்ததைக் கண்டு
ஏன் நீ இங்கு வந்தாயென்றார்?

இங்கேயே வந்து விட
அக்கா தான் சொன்னாங்க
அதான் வந்துட்டேன் என்றாள்அப்ப
தெய்வானை எங்கேயென்று
தவித்தார் சுமன்
தெரு வாசலுக்கு ஓடி தேடினார்

பாவம் தெய்வானை
பரந்தாமனும் உதவாதபோது
போன இடம் தெரியவில்லை,
வருடங்கள் பல ஓடிவிட்டன
தெய்வானையைத் தேடுவதா?—இல்லை
தெவசம் கொடுப்பதா?

சனி, 14 ஜூலை, 2018

மூட நம்பிக்கை



கிராமத்தின் மத்தியில்
இருக்கும் கிணற்றில்
விழுந்து செத்த எலி
வேதனை தந்தது மக்களுக்கு

கொடிய நாற்றம்
குடிநீரும் பாழ்
எலியை வெளியில் எடுத்தாலும்
என்ன செய்வது குடிநீருக்கு

ஊருசனம் கூடிநீரை
சுத்தபடுத்த எடுத்த
முடிவுகள் அனைத்தும்
உதவாமல் போனது

கங்கை தீர்த்தம்
கொஞ்சம் தருகிறேன்
கிணற்றில் தெளித்தால்நீர்
புனிதமாகிவிடும் என

வயதான ஒரு பாட்டி
வாய் மலர்ந்தது
தீர்ந்தது பிரச்சனை
தொடர்கிறது மூட நம்பிக்கை



காக்கத்தானே!




நேர்மையாய் வாழ
நல்லவழி சொல்லித்தர
மதங்கள் தோன்றின
மக்களும் மாறினர் என்றாலும்
வெவ்வேறு மதங்கள்
வேறுபட்ட தெய்வங்கள்

அன்புதான் இறைவன்
இறைவன் ஒருவனே
அவனின்றி ஓர் அணுவும்
அசையாது
ஆதவன் போல இறைவனும்
அனைத்துக்கும் ஒருவனே

இயலாத தன் குட்டியை
இடமாற்றம் செய்யபூனை
தன் வாயால் கவ்வி
தூக்கி சென்று
பொறுப்புடன் குட்டிகளை
பாதுகாப்பது ஒரு முறை

தாயின் வயிற்றை
தன் இரு கைகளால்
குரங்குக்குட்டி பற்றிக்
கொண்டு தாயோடு செல்லும்
தாய்க்கு சிரமம் தராமல்
தன்னைக் காப்பது மற்றொரு முறை

குரல் எழுப்பும்
கோழியின் பின்னால்
குஞ்சுகள் பின் தொடரும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்
தன் குஞ்சுகளைக் காக்க சேய்க்கும்
தாய்க்கும் சமபங்குண்டு                    
இது மூன்றாவது முறை

விலங்குகளின் பொறுப்புகள்
வேறுபடுவதுபோல்
மானிட பக்தியிலும்
மாற்றங்கள் இருந்தாலும்
இறைவன் ஒருவனே!
அவனிடம் வேண்டுவது
சந்ததியைக் காக்கத்தானே!


வெள்ளி, 6 ஜூலை, 2018

மகிழ்விக்கும்




சேற்றில் பிறக்கும்
தாமரை
எழுந்து நின்று
வாழவைத்த குளத்துக்கு
அழகு சேர்த்து
அனைவரையும்
மகிழவைப்பதுபோல்

ஏழ்மையில் வாடும்
பள்ளி பிள்ளை
போடும் சீருடையால்
படிக்கும் பள்ளிக்கு
பெருமை சேர்த்து
பெற்றோரை
மகிழ்விக்கும்

உலகம் செவிசாய்க்கும்




கெடுக்கும் கொடியவர்களை
முட்டாளாக எண்ணலாகாது
அவர்களது அறிவு
குறுக்கு வழியில்
காரியங்களை சாதிக்கிறது
அவ்வளவு தான்

கூனி, வயதானக் கிழவி
கொடியவள்
எடுத்த காரியத்தை
செவ்வனே செய்து முடிக்கும்
சிரத்தையும், திறமையும்
கொண்டவள்

பரதனுக்கு முடிசூட்ட
கூனி எடுத்த சிரத்தை
சக்தி வாய்ந்தவை
அவளின் தந்திர பேச்சில்
இருந்தது நியாயமும்
கடமையுணர்வும்

சொல்ல வேண்டியதை
சுவைபட தந்திரமாக
சொல்லும் திறன் பெற்றவர்
இடும் கட்டளைக்கு
உலகம் செவிசாய்க்கும்
பாவம் ஏழைகள்.