வியாழன், 29 ஜனவரி, 2015

பேருந்து நிலையம்


அந்தி சூரியனின்

அலங்கார விரிப்புகளால்

அழகு சேர்க்கும் வானம்

அதை சிதைப்பதுபோல்

வண்ணப் பொலிவிழந்து

வாடி நிற்கும் பேருந்து நிலையம்

 

குண்டும் குழியுமாய்

சுற்றியுள்ள சாலைகள்

சுகமற்றுக் கிடக்கக்

குலுங்கிக் குலுங்கி

அழுதுபோகும்

புராதன பேருந்துகள்

 

சுகமற்ற சாலைக்கு

மருந்து கொடுக்க எண்ணி

மேகம் தந்த மழையால்

பக்கவிளைவாகி

வழுக்கி விழுந்து, காயப்பட்டு

வேதனைபட்டதும் பயணிகளே!

 

பயணம் சிறக்க

பகவானை வேண்டி—உண்டியலில்

காசு போடும் பயணிகள்

சோற்றுக்கு வழியின்றி

தவிக்கும் ஏழைகளைக்

கண்டு கொள்ளாதது முறையோ?

 

எப்போதும்போல்

மாறாத பண்போடு

சாலைகள்,பேருந்துகள்,

பேருந்து நிலையங்கள்—மாறிவிட்டார்கள்

பயணிகள் மட்டும், தினமும்

செத்து செத்து பிழைப்பதால்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

இன்னும் ஏராளம்.


இரை தேடிய சிங்கம்

மானை விரட்டி தோற்றாலும்

தாயை இழந்து தவிக்கும்

மான் குட்டிக்கு

துணையாயிருந்து

கருணை காட்டியதும்

 

இரயில் நிலையத்தில்

இரை தேடிய குரங்கொன்று

மின்சாரம் தாக்கி விழ

மற்றொரு குரங்கு

கற்றறிந்ததுபோல்

கடைசி வரை போராடி

உயிர் காத்த பண்பும்

 

நன்றியுள்ள நாயானாலும்

தேங்கிய மழை நீரில்

மின் கசிவையறிந்து

முன்பினறியா மனிதர்களை

தன் உயிர் கொடுத்து காத்த

நாயின் அறிவும்

 

மரியாதைக்குரியது,

மனிதநேயமற்று வாழும்

தற்கால மனிதர்கள்

வெட்கத்தை விட்டு

விலங்குகளிடமிருந்து

கற்க வேண்டியது

இன்னும் ஏராளம்.

இதுவும் ஒரு காரணமோ!


பஞ்சம் பிழைக்கப்

பட்டணம் வந்ததுபோல்

ஒட்டிப் பிறந்த

இரட்டைக் குழந்தைகளாய்

ஏழ்மையும், ஊழலும்

என்றும் இந்த தேசத்தில்

 

வயதுக்கு வந்த

சொந்த பிள்ளைகளாய்

கண்டிக்கவும்,

தண்டிக்கவும் முடியாமல்

தான்தோன்றியாய்

தரணி போற்ற வளருது

 

இமயமலையும்

இமாலய ஊழலும்

இங்குதான் உள்ளது

வளரும் நாடாய்

வகைபடுத்தி சொல்ல

இதுவும் ஒரு காரணமோ!

தர்மத்தை அழிப்பதன்றோ!


தாயிழந்த பிள்ளை

தனியாய்க் கதறியழுது

தாய் தேடி தவிக்கையிலே

தாயாய் கரம் நீட்டி

 

தாங்கி சுமந்த அந்தத்

தாயோட தாய்

தெய்வத்தின் திருஉருவாய்

தன்னையே அர்ப்பணித்து

 

தள்ளாத வயதிலும்

தங்கத்தைக் காப்பதுபோல்

சீராட்டி வளர்த்து—பேரன்

சிகரம் தொட்டிட

 

பாட்டி பட்ட துயரை

எண்ணி பார்க்காம

ஐந்தாறு தெய்வங்கள்—ஒரு

ஆலயத்திலிருப்பதுபோல்

 

முடியாத வயதில்

முதியோர் இல்லத்தில் விட்டது

தெய்வத்தை சிறைபடுத்தி

தர்மத்தை அழிப்பதன்றோ!

 

புதன், 14 ஜனவரி, 2015

வேதனை தான்.


மறக்க இயலாத

மார்கழித் திங்களின்

மூடுபனியும், குளிரும்

ஆடவைக்கும்,

ஆண்டவன்

ஆட்டி படைப்பதுபோல்

 

போகி நினைவும்

பள்ளி விடுமுறையும்

சொல்லி வைத்ததுபோல்

விடிகாலை எழுப்பிவிட

தையை வரவேற்கும்

குழந்தைகள்

 

ஏற்றிய தீயில்

எரியும் தனலில்

கருகி, சாம்பலாகி

சம்பிரதாயமாகும்

குளிரும்,

பழையனவும்

 

ஊரே கொண்டாடி மகிழும்

போகிப் பண்டிகை

உழவர்களின்

வாழ்வையும், கனவையும்

சாம்பலாக்கி போனதும்

வேதனை தான்

 

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அஞ்சி ஓடாதோ!


விலைவாசி உயர்வால

மருத்துவ கட்டணமும்

மருந்துகளின் விலையும்

அச்சம் ஏதுமின்றி

உச்சம் தொடுகிறதோ!

 

இல்லாத குறையால

வறுமையில்

உச்சம் தொட்ட ஏழைகள்

அன்றாட சோற்றுக்கு

அச்சம் கொண்டதாலோ

 

போலி மருத்துவர்கள்

மலிந்து போனார்கள்—தவறுக்கு

ஏழைகளின் உயிரை

காணிக்கையாக்கி

பரிகாரம் தேடுகின்றனரோ!

 

பங்கு சந்தைபோல்

ஊழலின் ஏற்றத்தால்

ஏழையின் உயிர்

இறக்கம் கண்டு

இறந்து போகிறதோ!

 

மண்ணில் தோன்றிய

மாந்தரை

மண்ணில் விளையிற

இலையும் மூலிகையும்

காத்து அருளாதோ!

 

இஞ்சி, மிளகு, திப்பிலி

சித்தரத்தை,சுக்கு என

அஞ்சுமிருந்தால்

எந்த நோயும்

அஞ்சி ஓடாதோ!

கரை சேர்த்தது.


கற்ற நிறை கல்வியும்

கையிலிருக்கும் காசும்

துணை நிற்க

 

பொல்லாத வறுமையும்

இல்லாத வேலையும்

சொல்லாம விரட்ட

 

சொந்த பந்தமும்

நட்பு வட்டமும்

சோகமாய் வழியனுப்ப

 

நீலக் கடலையும்

நீலவண்ணக் கண்ணனையும்

நெஞ்சார வணங்கி

 

பிழைக்க வழிதேடி

பிற தேசம் செல்ல

படகில் பயணம் தொடக்கம்

 

அழைக்காத

அயல் நாட்டில்

அடியெடுத்து வைக்க

 

நம்பி வந்தவனை

இறைவன்

நடுக்கடலில் விட்டதில்லை

 

கள்ளத்தோணி

கரை சேர்த்தது

சிறையில் வாட.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

இருள்


உழைக்கும் மாந்தர்கள்

ஓய்வெடுத்து

உடல்வலி போக்க

இயற்கை அருளியது

இருளெனும் இரவு

 

இருள்

அமைதியின் அந்தரங்கம்,

கற்பனைக் காட்சிகள்

அரங்கேறும்

கலையரங்கம்

 

ஆவிகளின் நேரமோ,

ஆன்மாக்கள்

உலா வரும் காலமோ

யான் அறியேன்

ஆண்டவனுக்கே வெளிச்சம்

 

ஆண்கள்

அலைந்து திரியும் நேரம்,

கனவுகள் காணும்

பெண்கள்—தொலைபேசியில்

தொலையும் நேரம்