வியாழன், 17 ஜூலை, 2014

இதனாலன்றோ!


வையத்து மாந்தருக்கு

வாழும் நெறிமுறையை

வழங்கிட்ட திருக்குறள் போல்

அகிலத்தின் அத்தனையும்

அள்ளியெடுத்து வந்து

வாழ்வளிக்கும் கணினி..

 

வெள்ளை நாட்டில் பிறந்து

உலகம் சுற்றி வரும்

மங்கையை கை பிடிக்க

வரதட்சணை அதிகம்—என்றாலும்

சேர்ந்து உழைப்பதால்

வேளையின் பளு பாதி தான்.

 

அள்ள அள்ள கொடுக்கும்

அட்சய பாத்திரம் போல்

கேட்டதெல்லாம் கொடுத்து

கனவுகளை நிசமாக்கும்

விஞ்ஞானம் கண்டெடுத்த

வினோதப் பரிசு.

 

விரலின் அசைவாலே

விந்தையாய் நம் மனசு

விலங்குபோல் அடிமையாகும்,

இவளோட மேனி

இளைத்து இருந்தாலும்

அறிவு பெருகியிருக்கும்.

 

வாழ்க்கையை எளிதாக்கி

சிந்தித்த மூளையை

செயலிழக்கச் செய்ததும்,

தரங்கெட்ட வலைதளத்தால்

சிறியோரும், இளைஞர்களும்

சீரழிந்து போவதும் இதனாலன்றோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக