திங்கள், 29 பிப்ரவரி, 2016

பெருமை கொள்ளுங்கள்.



கூட்டமா வந்து
சுவைத்து செல்கின்ற
காட்டு யானைகளே—ஊருசனத்த
கொஞ்சம் நினைத்ததுண்டோ!

கடன வாங்கி பயிரை வளர்த்து
பாழ்பட்டு போனதின் வலியை
உணருமா அரசு?—ஊருசனத்த
கொஞ்சம் எண்ணிப் பார்க்குமோ!

வயித்துக்கும் பொழப்புக்கும்
இடையில் வாழும் மக்கள்
இழந்த பயிரையெண்ணி
அழுதாலும் கவலை தீருமோ!

முடிந்தால் போராடி
வாழப் பாருங்கள்—இல்லை
சிபிச்சக்கரவர்த்தி நீங்களென

பெருமை கொள்ளுங்கள்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

தன்னலம் காணலாமோ!


பரந்தாமன் தந்த வரம்
புவியின் தாவரம்
பூப்பூத்து, பிஞ்சாகி
காய், காய்த்து கனியாகி
கனி தந்து சுவை தரும்

மழை பொழிய
மா தவம் புரியும்
காற்றின் நஞ்சை தானுண்டு
பதிலுக்கு பிராணவாயு தந்து
புவிவாழ் உயிர்களைக் காக்கும்

வானிலிருந்து இறங்கி
வந்தடையும் மழை
மண்ணுக்கு நீர் ஆதாரம்
வாழும் உயிர்களுக்கோ
வாழ்வாதாரம்

வானுக்கும், மண்ணுக்கும்
உறவாகும் முகிழ்கூட்டம்
சூரியனை மறைத்து
புவியின் வெப்பம் தணித்து
உதவும் வாழும் உயிர்களுக்கு

விடியலில் பூக்கும்
விண்ணின் தாமரை
வட்டமுகத்துடையோன்
வெளிச்சம் தந்து—மக்கள்
வாழ்வை விடிய வைப்பான்

ஆதவன்
அனைத்துக்கும் ஆதிமூலம்
வெளிப்படையானவன்
வாழும் உயிர்களுக்கு
வெப்பம் தந்து காத்திடுவான்

அத்தனையும் மக்கள்
உருவாக்கியதல்ல
என்றாலும் அவைகள்
உயிர்களைக் காத்திட
என்றும் மறந்ததில்லை

ஏற்றிவிட்ட ஏணியை
எண்ணி பார்க்காமல்
ஏறி அமர்ந்த மாந்தர்
தவிக்கும் ஏழைகளுக்கு உதவாது
தன்னலம் காணலாமோ!


சனி, 20 பிப்ரவரி, 2016

கடவுளுக்கும் தெரியலையோ?

பொழைக்க வழிதேடி
புறப்பட்டு வந்தவனே
வணங்கும் தெய்வங்கள்
வழி துணையாய் வாராதோ?

துன்பங்கள் ஆயிரம்
தமிழகம் கண்டாலும்
வந்தாரை வாழவைக்க--இந்த                                    
மண்ணுதான் மறந்ததுண்டோ?

நீரேதும் இல்லாமல்
நிலமெல்லாம் காய்ந்தாலும்
உன்னோட பொழப்புக்கு
உதவிக்கரம் நீட்டாதோ?

இரை தேடி வந்த
பறவையினம் போல
கூடி வாழ்ந்து மகிழ்ந்தாலும்
விதி விட்டு விலகிடுமோ?

எலும்புக் கூடாட்டம்
எழுந்து நின்ற கட்டிடம்
வானம் அழுததாலே
வலுவிழந்து வீழ்ந்ததோ?

உருதந்து எழவைத்த
உயிரெல்லாம் தவித்திருந்தும்
சேர்த்தழித்த மாயவனை
மனதார தொழுவேனோ?

பத்திரமா உயிர் வாழ
படைத்தவனை வேண்டலையோ?
காத்தருள வேண்டுமென

கடவுளுக்கும் தெரியலையோ?

திங்கள், 15 பிப்ரவரி, 2016

பெருமையா அவனுக்கு?



நகல் விளக்கு தந்து
நிலவை நடக்கவைத்து
இருளை விரட்டுவான்—அவன்
இதயத்தாரகையின்
முகத்தை மலரச்செய்து
திரும்பி பார்க்கவைப்பான்

இவன் வருகைக்கு
இறையும் காத்திருக்கும்
பணியை உயிராய் மதிப்பவன்
படைத்த உயிரைக் காப்பவன்
இவனது பார்வைக்கு
பருவ மாற்றமும் பயப்படும்

அணையா தீபம்போல
அகிலம் சுற்றும் சுடர்
மெய்தனை வருத்தினாலும்
மாயவன்போல் வாழவைப்பான்
பாருக்கு அவன் பகலவன்
புகழ்வதோ ஆதிமூலம்

ஆழ்கடல் அன்னையின்
அமுதம் பருகி
அவன் படைத்த மேகம்—வெட்கமின்றி
அவனையே மறைத்து நின்று
புவிக்கு மழை பொழிந்து
பெருமை படுத்திக்கொள்ளும்

குதிக்கும் மழைநீர்
கட்டியணைக்கும் ஒளிக்கதிர்
களவாடும் நெஞ்சங்கள்
காதலில் மதிமயங்கும்
எழும் கனவு காட்சிபோல்--வண்ணம்
ஏழு வானில் தோன்றும்

அனைத்துக்கும் அவன் மூலம்
அதனால் தானோ
உயிர்களும், கோள்களும்
சுற்றி வந்து வழிபட்டும்
தன்னையே சுற்றி வணங்குவது

பெருமையா அவனுக்கு? 

திங்கள், 1 பிப்ரவரி, 2016

ஏராளமல்லவோ!




விவரம் தெரிந்து வந்ததோ—இல்லை
வீட்டை விட்டு விரட்டினரோ!
சாதிச் சண்டை சச்சரவோ—இல்லை
சமுதாயப் புறக்கணிப்போ!

புதுவாழ்க்கை தொடங்கவோ—இல்லை
போதும் வாழ்ந்ததென எண்ணியதோ!
கடல் தாண்டிவந்து கலங்குதே--அதன்
காரணம் என்னவென்று சொல்லாதோ!

தமிழகத்தைத் தேடி வந்ததோ—இல்லை
தற்கொலைக்கு உகந்ததெனக் கருதியதோ!
மானம் இல்லாரைக் குறைகூற வந்ததோ—இல்லை
மொத்தமா இறந்து நினைவுபடுத்தியதோ!

தலைவனுக்குக் கட்டுபட்டதோ—இல்லை
ஒற்றுமைக்குக் காவியம் படைத்ததோ!
என் உள்மனம் சொல்கிறது, திமிங்கிலமே

உன்னிடம் கற்கவேண்டியது ஏராளமல்லவோ!