திங்கள், 15 பிப்ரவரி, 2016

பெருமையா அவனுக்கு?



நகல் விளக்கு தந்து
நிலவை நடக்கவைத்து
இருளை விரட்டுவான்—அவன்
இதயத்தாரகையின்
முகத்தை மலரச்செய்து
திரும்பி பார்க்கவைப்பான்

இவன் வருகைக்கு
இறையும் காத்திருக்கும்
பணியை உயிராய் மதிப்பவன்
படைத்த உயிரைக் காப்பவன்
இவனது பார்வைக்கு
பருவ மாற்றமும் பயப்படும்

அணையா தீபம்போல
அகிலம் சுற்றும் சுடர்
மெய்தனை வருத்தினாலும்
மாயவன்போல் வாழவைப்பான்
பாருக்கு அவன் பகலவன்
புகழ்வதோ ஆதிமூலம்

ஆழ்கடல் அன்னையின்
அமுதம் பருகி
அவன் படைத்த மேகம்—வெட்கமின்றி
அவனையே மறைத்து நின்று
புவிக்கு மழை பொழிந்து
பெருமை படுத்திக்கொள்ளும்

குதிக்கும் மழைநீர்
கட்டியணைக்கும் ஒளிக்கதிர்
களவாடும் நெஞ்சங்கள்
காதலில் மதிமயங்கும்
எழும் கனவு காட்சிபோல்--வண்ணம்
ஏழு வானில் தோன்றும்

அனைத்துக்கும் அவன் மூலம்
அதனால் தானோ
உயிர்களும், கோள்களும்
சுற்றி வந்து வழிபட்டும்
தன்னையே சுற்றி வணங்குவது

பெருமையா அவனுக்கு? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக