விடியலுக்குக்
காத்திருந்து
விடியாமல் போன அந்த
பொழுதின் வேதனையை
வாழும் நினைவுகள்
நாளும் கண்ணீராய்
விழியில் தோன்றி
வீழ்ந்து சாகும்
ஓலக்குடிசையில ஒருத்தி
உணர்வுகளை ஒதுக்கிவச்சு
றெக்கை யிழந்த
பறவை போல
அமைதியற்று வாழும்
முதிர் கன்னியின் சோகம்
தீருவதெக்காலம்?
வரப்புயர்த்தி,
வாய்க்காய் வெட்டி
ஏர் உழுது, விதைவிதைத்து
கருமேகம் இறங்காம
நீருக்குக் காத்திருக்கும்
திருவாரூர் உழவனின் துயர்
துடைப்பதெக்காலம்?
சாகும் நிலையில்
ஓடும் வாகனங்கள்
விதி முடிந்ததுபோல்
வழியில் கிடக்கும் வீதிகள்
சாலையைக் கடக்கும் மாந்தர்கள்
இரத்தம் சிந்தி நடுத்தெருவில்.
மாறுவதெக்காலம்?.
ஆழ் துளையிட்டு-அதை
மூடாமல் விட்டுவைத்து
விதைபோல இருந்தவளை
விதைப்பதுபோல விழவைத்து
அள்ளியெடுத்து
மண்ணள்ளிப் போட்டீரே!
திருந்துவதெக்காலம்?
ஏது குறையால
இவையெல்லாம் தெரிவதில்லை?
நெஞ்சின் வேதனையை
நினைத்தாலே நஞ்சாகும்.
மக்களின் இன்னல்களை
இறக்காமல் போனாலோ
இறைவன் கூட அழுதிடுவான்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக