சனி, 30 ஆகஸ்ட், 2014

சன்னமாய்க் குறைந்துவிடும்..


உன்னோட இடத்துக்கு

என்னோட சனங்கள்

வந்து போனதுபோல்

என்னோட இடத்துக்கு

உன்னோட நடமாட்டம்

உதிரம் பயத்தில் உறையுது

 

காட்டிலே நீ இருந்தால்

கலக்கமில்லை எங்களுக்கு

ஊருக்குள் நீ புகுந்தால்

உணவு தேடி வந்தாயோ

உறவறுக்க வந்தாயோ

ஆடு மாடுக்கு தான் வெளிச்சம்

 

கள்வனைப்போல்

இரவில் வந்து-நீ

வயித்துக்கு தேடயிலே

பாவம் ஏதும் பார்க்காமல்

மக்களையும் கொல்வதுபோல்

நாங்களும் மாறிவிட்டோம்

 

உறவுகளும் உங்களைப்போல்

வளரும் வரை தாயுறவு

வளர்ந்த பின்னே

மறந்து பிரிவது போல்

தொடர்வதில்லை

எங்கள் சொந்தங்களும்

 

கெடுதல் பல இருந்தாலும்

உங்களோட வரவாலே

நாட்டுக்கு நல்லது தான்

சனத்தொகையும்

சாலை மறியலும்

சன்னமாய்க் குறைந்துவிடும்.

 

 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

தோற்று போனவைகள் தான்


பால் மனம் மாறா

பச்சிளம் சிசுக்கள்

எச்சில் இலைபோல

பிச்சி விழுந்த காட்சி

 

அள்ளியெடுத்த

அழகுக் குழந்தைகள்

சடலமாய்

சவக்குழி தேடி

 

ஓலமிடும் தாயொருத்தி

இரு கரங்களில் சுமக்கின்றாள்

உயிரோடு ஒன்று

சடலமாய் மற்றொன்று

 

போக வழியின்றி

தவிக்கும் மாந்தரை

தரம் தாழ்ந்து

கொல்வது முறையோ?

 

இயற்கை சுனாமிக்கு

இதயம் ஏது?

மனிதனுக்குமா

இல்லாமல் போனது?

 

மரணம்

தூக்கிப்போன

உயிர்களெல்லாம்- என்றும்

மனத்தில் நிலைத்திருக்கும்

 

அந்நிய நாட்டு

உதவியில்

உயிர் வாழும்

காஸா

 

அந்நிய நாட்டு

ஏவுகணையால்

அதை அழிக்கும்

இஸ்ரேல்

 

இணையத்தை

பாருங்கள்

உங்கள் இதயம் கூட

கண்ணீர் விடும்

 

தேற்றுவதற்குக்கூட

வாய் திறக்காத

நாடெல்லாம்

தோற்று போனவைகள் தான்.