வியாழன், 28 செப்டம்பர், 2017

பண உதவியும் நல்கினார்



பேரறிவு இருப்பதை
பறைசாற்றும்
அடையாளங்களில் ஒன்று
அடக்கம்,
அது இருக்கும் இடத்தில்
பேரறிவு மறைந்து
ஒளிந்திருக்கும்

ஆழ்கடல் நீரின்
அளவு தெரிவதில்லை
ஆர்ப்பரித்தும் சொல்லாமல்
அமைதியாய் இருப்பதுபோல்
பேரறிவு என்றும்
நிறை குடம்போல
தழும்பாது

அடக்கமே உருவான
அன்னை தெரசா ஒருநாள்
செல்வந்தர் ஒருவரிடம்
ஏழை சிறார்களுக்கு
நிதியுதவி வேண்டி
நின்றிருந்தபோது—அவர்
அன்னைமேல் காரி உமிழ்ந்தார்

பதறாத அன்னை
புன்முறுவலோடு சொன்னார்
எனக்கு வேண்டியதைக்
கொடுத்துவிட்டீர்கள்,
குழந்தைகளுக்குக்
கேட்டதை தாங்கள்
தரவில்லையே என்றார்

செல்வந்தர் வெட்கப்பட்டார்—தன்
செயலுக்கு வருந்தினார்
அன்னையிடம்
மன்னிக்க வேண்டினார்,
மனம் திருந்தியவர்
பிள்ளைகளின் நலனுக்கும்

பண உதவி நல்கினார்

திங்கள், 25 செப்டம்பர், 2017

அறம் தவற அஞ்சுவதில்லை



அரசாண்ட மன்னன்
ஒருபிடி உப்பை தனதாக்கினான்
அடுத்த நொடியில்
ஆழ்கடல் காணாமல் போனதாம்

வேலியே பயிரை மேய்ந்தால்
விளங்குமா தேசம்?
சோற்றுக்கு வழியின்றி
சாகாதோ நாட்டுமக்கள்!

பதவியில் உள்ளவர்கள்
பணத்துக்கு அடிமையானால்
நேர்மை நிலைக்குமா?
நாடு தான் முன்னேறுமா?

கட்சி நன்கொடையென
கால்பதிக்கும் கறுப்புப்பணம்
கைமாறும்போது
கலங்கமெனத் தெரியாதோ!

மானம் உள்ளவன்
மரியாதை கெடுமென பயப்படுவான்,
வாங்க துணிந்தவன்—மக்களை
வாழவிடமாட்டான்

பத்து ரூபாய் திருடியவன்
பலபேரால் அடித்து கொல்லப்படுகிறான்
பலகோடி ரூபாயை சுருட்டியவன்
நலமோடு வாழ்கிறான் நாடு கடந்து

தவறிழைத்த அரசியல்வாதிகள்
தண்டிக்கப்படாமல்
வாழ்நாளைக் கடப்பதால்

ஆண்டவனும் அறம் தவற அஞ்சுவதில்லை

சம மதம் தான்



ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்வினை உண்டென்று
நியூட்டன் சொன்னதுபோல்
பாவம் போக்க வடகாசியென்றால்
பாவம் சுமக்க தென்காசியோ!

மனிதனை வெட்ட
மதங்கள் போதிக்கவில்லை
பின் ஏன் இந்த அவலநிலை?
மனிதன் உணராததா—இல்லை
மனம் திருந்தாததா?

மனிதனே தெரிந்துகொள்
மதங்கள் வெவ்வேறு
கடவுள் ஒன்று தான்,
காட்டும் வழிகள் வெவ்வேறு
 முடியுமிடம் ஒன்று தான்

புரிந்துகொண்டால்
புவியில் அனைவரும் சொந்தந்தான்,
மதக்கோயில்களுக்கு
ஆங்கில எழுத்துக்கள் கூட
ஆறுதான்

பறக்கும் புறாவும்—மதங்களை
பிரித்து பார்க்காமல் வசிக்கும்
எல்லா ஆலயங்களிலும்,
எல்லோரும் சம்மதமானால்
எல்லா மதங்களும் சம மதம் தான்



இலவசமா போகுதோ!




மனிதகுல பண்பின்
மான்மியம் உயர்த்திட
தர்மங்கள் செய்ய
அறநூல்கள் அறிவுறுத்தின

பண்டைய தர்மம்
பண்புள்ள மனிதநேயத்தை
குறிக்கோளாய்க்
கொண்டு விளங்கியது

தரத்தை உயர்த்தும்
தன்னிகரற்ற மனிததர்மம்
மறுமை உண்டென்று
மோட்சத்திற்கும் வழி காட்டியது

இன்றைய தர்மமோ
வீட்டின் குளிர்சாதன பெட்டியால்
வெளியே வரமுடியாமல்
வஞ்சகத்தால் வாழ்வை இழந்தது

ஏனைய தர்மங்களோ
ஏழைமக்களின் வரிபணத்தில்
வாங்கும் பொருட்களை—அவர்களிடமே
வழங்கும் வைபவமானது

இலவசமாய் மக்களுக்கு
அனைத்தும் கொடுத்தால்
நல் உழைப்பு நலிவுறாதோ!
நாடு முன்னேற்றம் காணுமோ!

இலவசங்கள் பெறும்
ஏழைகளின் உயிர்
மருத்துவ வசதியின்றி
இலவசமா போகுதோ1


சனி, 23 செப்டம்பர், 2017

மதியிழக்க செய்யும்




விதவை என்ற வார்த்தைக்கு
விளக்கம் தேடினால்
இருவேறு பொருளுண்டு
இரண்டுக்கும் உறவுண்டு

ஒன்று
வீட்டில் வசித்திருக்கும்
மற்றொன்று
வட்டிலில் வீற்றிருக்கும்

கடும் பசியோடு
தொடும் ஆணிடமிருந்து
இரண்டுமே எப்போதும்
மீளாது

ஒன்று கைம்பெண்
மற்றொன்று சோறு
மனிதரில் பலரை

மதியிழக்க செய்யும்

வியாழன், 21 செப்டம்பர், 2017

சாகடிக்கப்பட்டது




இசை அரங்கம் எங்கும்
நிரம்பி வழியும்
இசைப்பிரியர்கள்,
இடையில்
இம்சை படுத்த வந்ததுபோல்
இசை பாடி வந்தது ஒன்று

கச்சேரியில் இசைத்த
கல்யாணி இராக பாடலுக்கு
அரங்கம் அதிர கரவொளி
அடிபட்டு செத்தது கொசு—அதன்
சங்கீதம் அரங்கேறாமல்

சாகடிக்கப்பட்டது

வேதம் ஓதுகின்றன!




மதமாற்றம் கூடாது
முறையாகப்படவில்லை,
மதமே கூடாது
மிக சரியான தீர்ப்பு,
வீதிக்கு வந்த சாதிகள்

வேதம் ஓதுகின்றன!

புதன், 20 செப்டம்பர், 2017

உலகுக்கு தெரியும்



வறண்டு போன ஆற்றின்
வண்டலும் வாரப்பட்டதைப்போல்
பசியால் வாடும் ஏழைக்கு
நீரும் நிராகரிக்கப்பட்டால்
இருக்குமா உடலில் உயிர்?
இருப்பவர்க்கு தெரியாதா!

பாரதியைக் கூப்பிடு
பாரத மண்ணில் மீண்டும்
பிறக்கட்டும் அவர்,
தனிமனித உணவுக்குத்
தனித்து நின்று குரல் கொடுத்தவர்
தண்ணீருக்கா பின்வாங்குவார்!

அழைக்குமுன், உறுதி கொள்
தடங்கலின்றி அவருக்காவது
தண்ணீர் கிடைக்கட்டும்—அவரின்
வறண்டு போகாத குரல்
ஒலித்தால் தான்
உலகுக்கு தெரியும் நம் தாகம்



திருந்தாதோ சமுதாயம்!



ஆணவச் செயலா?—இல்லை
ஆற்றாதவர் அழுத கண்ணீரா?
ஆற்றுவெள்ளமென பெருகி
துன்பம் இழைத்தோரை
துடைத்தொழிக்க என்ன காரணமோ!

துட்டருக்கு இல்லை சொந்தபந்தம்,
துடிக்கின்ற நெஞ்சமும்
வடிக்கின்ற கண்ணீரும்
உள்ளத்தின் காயத்தை—உயிர்
உள்ளவரை மறக்குமோ!

ஓடுகிற வெள்ளம்
ஒருநாளும் ஓயாது
அழிக்காமல் அடங்காது
உரிமையோ!, பகைமையோ!
உயிரை எடுப்பது முறையோ?

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையாதோ!
அகத்தீயை அழித்து
ஆக்கவழி தேடினால்
அறம் தான் வெல்லாதோ!

தேசத்தின் நலம் காக்க
தீவிரவாதத்தை ஒழிப்போம்—மீண்டும்
தீபாவளி கொண்டாடுவோம்,
தனிமனிதன் திருந்தினால்

திருந்தாதோ சமுதாயம்!

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பாவத்தை மீண்டும் சுமக்கிறார்




பந்திக்கு முந்திவரும்
பெருத்த வயித்துக்கு
பரிமாறும் உணவுகள்
போற இடம் தெரியாது—மனமும்
போதுமென சொல்லாது

உண்ண முடியாம
உடம்பு நோவெடுக்க
ஈதல் அறமென
ஈசனுக்கு ஒப்பாக—அவர்
இலையுடன் சோற்றை
எடுத்து வந்து தெருவில் வீச

சோற்றைக் கண்டதும்
ஓடிவந்த நாய்கள்
ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு
கடித்துக் குதறியதில்
குருதித் துளிகள் சிதற

பட்டினிக்கிடக்கும் உயிர்களின்
பசிக்கொடுமையை         
புரிந்து திருந்தியிருப்பார்,
பாவம் நாய்கள்—இவர்
பாவத்தை மீண்டும் சுமக்கிறார்