வியாழன், 30 நவம்பர், 2017

சேமமுற வாழலாம்



இரு பிள்ளை போதுமென
நினைக்கும்
இன்றைய தலைமுறைக்கு
சிக்கனத்தை பற்றி—இதைவிட
சிறப்பா நான் என்னத்த
சொல்ல

ஒரு வருடம் எனக்கூறி
முதியோர் இல்லத்தில் சேர்த்து
மூன்றாண்டு முடிந்தும்
பெற்ற தாயை பார்க்காமல்
பிள்ளை வாழ்வது தர்மமா?—இல்லை
பணத்தின் சிக்கனமா?

வாழ்வாதாரங்கள்
வழிமாறி போகையில
நாளும் போராட்டமென்றால்
நாணயம் கிடைப்பதெப்படி?
சிந்தித்து, செயல்பட்டு
சிக்கனமா வாழுங்கள்

சிறுவயது முதலே
சிக்கனமா வாழ
அடுத்த தலமுறைக்கு
அன்போடு கற்றுக்கொடுங்கள்
சேமித்து வாழ்ந்தால்
சேமமுற வாழலாமென்பதை.


ஞாயிறு, 19 நவம்பர், 2017

மெய் சிலிர்க்கும்




கண்ணியத்தின் திருஉரு
கடவுளின் விக்ரகம் போல்
காலத்தால் அழியாதது,
மனிதன் மதிக்கும்
மாபெரும் செல்வமிது,
மனிதனை இது மதிக்காது,
விலைபேசி இதனை வாங்கும்போது
உருமாறும், தலை கவிழும்

தன்னிகரற்றது,
தள்ளி போகாமல் இதனை
தன் பக்கம் இருக்க
விரும்பும் மக்கள்,
இதன் பக்கம் இருக்க யாரும்
விரும்புவதில்லை,
அனைத்துக்கும் காலக்கெடு உண்டு
இதற்கு மட்டும் இல்லை

சத்தியத்தை காக்கும்
சமூகத்தின் செல்லம்,
அரசனையும் ஆட்டிபடைக்கும்
அனைவரையும் தன்னுள் அடக்கும்,
தன்மானம் உள்ளது
தெய்வத்துக்கு நிகரானது,
எதற்கும் அஞ்சாதது
எப்போதும் தனித்து நிற்கும்

இறக்கும் தருவாயில்
இதழ்கள் உதிர்க்கும் சொற்கள்
மரணவாக்குமூலமென
முக்கியத்துவம் பெறும்போது
இதன் அருமை புரியும்
அதுதான் உண்மையென
மனம் அறியும்,
மெய் சிலிர்க்கும்


புதன், 15 நவம்பர், 2017

ஆதாயம் தேடுகிறார்களோ!



கர்ணனை வஞ்சித்த
கிருஷ்ண பகவானைப்போல
தாவரங்களை படைத்த
இயற்கை அன்னை
அதனிடமே தா வரமென்று கேட்டு
தாவரமென்று பெயரிட்டதாம்

தாவரம்
தானத்தின் திரு உரு
உயிர் காக்கும், தாகம் தணிக்கும்
உணவாகும், மருந்தாகும்
வீட்டுக்கு தூணாகும்
இறைவனாகவும் உருமாறும்

நிழல் தரும்—பறவைக்கு
வீடாகும்,மழையை
வரவழைக்கும்,
உரமாகும்,
இறக்கும் மனிதரை
எரிக்கவும் உதவும்

தந்த வரத்தால்
தான் தியாகம் புரிய
தாவரம் உறுதி பூண்டதை
தவறாக புரிந்த மக்கள்
அநுதினமும் அதனை வெட்டி
ஆதாயம் தேடுகிறார்களோ!



ஞாயிறு, 5 நவம்பர், 2017

சொல்லிக் கொடுத்தவைகள்




பதவியாளர்போல்
பலம் தான் அதிகாரம்,
பாவ, புண்ணியம்
பார்க்காது
கொடுத்ததைவிட
கெடுத்தது அதிகம்

வாழும் உயிர்களுக்கு
உன்னதமான
காற்றும், மழையும்
காலம் தாழ்த்தும்
கடமை தவறும்
கவலை கொள்ளாது

ஓரிடத்தில் அமர்ந்து
உத்தரவு போடும்
குடும்பத்தலைவர்,
உறவுகள் ஒன்பதும்
சுற்றி வரும்
செல்வாக்கு மிக்கவர்

பெரியவரின் மதிப்பால்
பவனி வரும் இனியவர்,
இரவல் ஒளி வாங்கி
இரவில் அருள்பவர்--இருவரும்
மக்களைக் காப்பதில்
மேன்மையானவர்கள்

தினக்கூலி பெறும்
தொழிலாளி போல்
சூரியனும், சந்திரனும்
செவ்வனே பணிகளை
கடமை தவறாமல்
காலத்தே முடிப்பவர்கள்

 “ காலம் தாழ்த்தாமல்
  கடமையாற்றவும்,
  தன் காலில் நிற்கவும்--இல்லாது
  தவிப்பவருக்கு உதவவும் “
சூரியனும், சந்திரனும்
சொல்லிக் கொடுத்தவைகள்