சனி, 23 பிப்ரவரி, 2019

அமரவைக்கும்





உருவாக்கும் சிற்பியால்
உடைபடும் கல்
கெளரவம் பார்க்காது
கோபம் ஏதும் கொள்ளாது
அமைதி காக்கும்
ஆண்டவனாய் உருமாறும்

கெளரவம் பார்த்தால்
காரியம் கைகூடுமா?
உடைபடாத கல் சிலையாகுமா?
உருகாத பொன் நகையாகுமா?
பிசையாத மண் பாத்திரமாகுமா?
பிச்சைக்காரனுக்கு உதவதான் முடியுமா?

வழிமறிக்கும்
வீண் கெளரவத்தை அகற்றி
நம்மை நாமே செதுக்கி
நம் திறனை சீர்படுத்தினால்
நம்மையும் இறைவனைப்போல்
நல்லுள்ளங்களில் அமரவைக்கும்



எனக்கெதற்கு வீண் கவலை ?





தெருவெங்கும் சாராயக்கடை
திரிந்து அலையும் ஆண்கள்
குடித்து கும்மாளமிட்டதால்
குடும்பமே நடுத்தெருவில்,
காலங்கள் கடந்தாலும்
கைவிடாத குடிப்பழக்கம்
காலன் விடுவானா?—தண்டிக்கக்
கடைசியில் நரகம் தான்

தெருவுக்கு ஒரு கோயில்
தினந்தோறும் பெண்கள் கூட்டம்
திருவிளக்கு ஏற்ற சிலர்
திருவடியை தரிசிக்க சிலரென
நாள்தோறும் திருவிழா தான்
நல்வழி காட்டும் பெண்மைக்குஇறைவன்
நன்றி காட்டாமல் இருப்பானா?
நிச்சயம் சொர்க்கம் தான்

வறுமைக்கு பாலூற்றி
உயிர் பறிக்கும் மதுப்பழக்கம்
மதியை இழக்கவைத்து
மரணத்துக்கு வழிகாட்டும்,
நான் செத்த பின்னே போவது
நரகமோ, சொர்க்கமோ!
எதுவானாலும் தெரிந்தவர்கள்
இரண்டிலும் சரிபாதி இருக்கையில
எனக்கெதற்கு வீண் கவலை?