திங்கள், 30 அக்டோபர், 2017

கடவுள் என்பதை இழக்கும்

உருவமற்றவன்
புவிவாழ் உயிர்களுக்கு
உயிரானவன்,
இறைவனைப்போல்
எங்கும் நிறைந்திருப்பவன்,
சினமுற்று எழுந்தால்
சிவன் கூட இவன் காலடியில்

மனிதருக்குள்ளும் புகுந்து
மரணம் தடுப்பவன்
இவனென்றால்
பிரபஞ்சத்தில் மூத்தது யார்?
இயற்கையா? இறைவனா?
இல்லை இவனா?
யாரிடம் கேட்பது?

இறைவன் பல அவதாரங்கள்
எடுப்பதுபோல்—இவனும்
கோடை, வாடை,
கொண்டல், தென்றலென
அவதாரங்கள் பல எடுத்து
இறைவனெனக் காட்டி
ஆணவம் கொள்கிறானோ!

அநுதினமும் வழிபட்ட இறைவன்
ஆபத்துக்கு உதவாதபோது
கலங்கப்பட்டு, கடவுள் இல்லையென
கூறப்படுவதுபோல்
காற்று மாசுபட்டு
உரு பெறும்போது—இதுவும்

கடவுள் என்பதை இழக்கும்

சனி, 28 அக்டோபர், 2017

பாதுகாப்பவளும் இவளே!



காதல் மோகத்தால்
கூட வந்தவள்,
கைபிடித்தவனை விட்டு
கணநேரமும் பிரியாத
கைகாரி,
சின்ன வீடுபோல
சொந்தமானவள்

படுக்கையிலும் கூட
படுத்துக்கொள்வாள்,
நாணம் கொள்ளாத
நவநாகரீக மங்கை,
கைக்குள் அடங்கும்
கச்சித உடல்வாகு—பையையும்
காலியாக்கிடுவாள்

மூத்தாளின் கோபத்தில்
முகம் சிவக்கும்,
சமையல் பாத்திரங்கள்
சிறகில்லாமல் பறக்கும்,
இவளோட சினத்தில்
இவள் தேகம் வெடிக்கும்
அடுத்தவர் முகம் கருக்கும்

கூகுள் இவளின் தோழி
கூடி இருவரும்
அறிவுக்கு விருந்தாகும்
அரிய செய்திகளை
அள்ளி கொடுத்தாலும்
பள்ளி பிள்ளைகளின் மனதை
பாழாக்கிக் கெடுப்பதுமுண்டு

இளைஞர்களுக்கு
இதயராணி
முதியவர்களுக்கு இவள்
உதவிடும் ஊன்றுகோள்,
தொலைதூர உறவை
தொலைந்துபோகாமல்

பாதுகாப்பவளும் இவளே!

வியாழன், 26 அக்டோபர், 2017

பழக்க தோஷமா?




ஆண்டு முழுதும் காத்தருள
ஆனை முகத்தானை
வீட்டிற்கு அழைத்து வந்து
வக்கனையா அமரவைத்து
வரம் கேட்டு, படையலிட்டு

தருவார் என நம்பி
தாள் தொட்டு வணங்கி—பின்
தூக்கி வீதிவலம் வந்து
கடலில் விட்டுபோனால்
கருணை காட்டுவாரா? நியாயமா?

காலமுழுதும் பாடுபட்டு
கஷ்டத்தில் உழன்றாலும்
கல்வி கொடுத்து
கரையேற்றி விட்டவருக்கு
நன்றிகடன் காட்டாம

பத்து மாதம் சுமந்து
பொத்தி,பொத்தி வளர்த்து
உதிரத்தை பாலாக்கி
ஊட்டி வளர்த்தவளுக்கு
உறுதுணையா இருக்காம

முடியாத காலத்தில்
முதியோர் இல்லத்தில்
முடிந்துபோக விடுவது
முறைதானா?—இல்லை
பழக்க தோஷமா?



மனிதநேயம் உதவலையே!




ஒருமித்து வாழ
உதேசித்தது போல
அன்புதான் தெய்வமென
அழகாக சொல்லிவச்சு
தன்னைபோல் பிறரையும்
தரம் குறையாம
மதிக்க சொல்லி—அதனை
மனிதநேயம் என்றனர்

மனித நேயத்தின்
புனித குறிக்கோள்
மனிதனை மனிதனாக
மதித்து நடப்பதும்,
மானிட இனத்தின்
வாழ்வுக்கும், உரிமைக்கும்
குரல் கொடுத்து
உயர்வடையச் செய்வதாகும்

சமூக அக்கறை
சகலத்துக்கும் அடிப்படை,
அதை மேம்படுத்த
அனைவரும் முயன்று
வேற்றுமை மறந்து
ஒற்றுமையாய் வாழ
வழிகாட்ட வேண்டும்
விதைத்தால் விருட்சம் தான்

அதனை மறந்து
அன்பே சிவமெனக் கூறி
அக்கறை ஏதுமின்றி
ஒரு தாய் மக்களென
உறக்கக் கூறினாலும்
அனைவரும் ஒன்றுபோல
அமைதியாய் உயிர் வாழ
மனிதநேயம் உதவலையே!



புதன், 25 அக்டோபர், 2017

மனதைவிட்டு அகலாது




பண்போடு உறவாடிய
பண்டைய முன்னோர்கள்
நலிவுற்று வாழ்ந்ததால்
நடைபயணம் மக்களுடன்
நட்பாகி நலம் காத்தது

கோடையில் ஆதவனின்
கொடூரப் பார்வையால்
சிறைபட்ட மக்கள்
சோர்வடையக் காரணம்
வசதியில்லாததும் தான்

தாகம் தணியாம
தேகம் கண்ணீர் சிந்த
துயர் துடைக்க வந்த
தண்ணீர் பந்தல், சத்திரங்கள்
சரித்திரம் படைத்தன

ஆற்று மணலில்
வீற்றிருக்கும் மண்பானை
மோரும், நீரும் தந்து
மக்களைக் காத்து
மகிழ்ந்தது

கோடை வெய்யிலின்
கொட்டத்தை அடக்கி
மன நிறைவு தந்த
மண்பானை—என்றும்
மனதைவிட்டு அகலாது


திங்கள், 23 அக்டோபர், 2017

மறுக்க எனக்கு மனமில்லை



பெருமலைகள் இருமருங்கிலும்
பெற்றோரைப்போல
கைபிடித்து வழிகாட்ட
குதுகலத்தில் இன்புற்ற ஆறு
பசுமையை வாரி இறைத்து
பச்சை வண்ணத்தை
பூசி அழகு சேர்த்தது

மலைகளின் வாரிசாய்
மலையடிவார பழங்குடி மக்கள்
சலசலக்கும் ஆற்று நீரும்
சிலுசிலுக்கும் காற்றும்
வண்ண வண்ண பூக்கள் வீசும்
வாசமும், அழகும்—இயற்கையளித்த
வரப்பிரசாதம் அவர்களுக்கு

விலங்குகள், பறவைகள்
உறவாகிப்போன சொந்தங்கள்,
காடும், மலையும் சூழ
கவலையின்றி வாழும் மக்களிடம்
“ வசதிகள் ஏதுமின்றி இங்கு
 வாழ்வதில் உங்களுக்கு—குறை
 ஒன்றுமில்லையா “ என்றதற்கு

“ இறைவனின் படைப்பு
 இயற்கையின் அரவணைப்பு
 இடையில் எங்களின் உயிர்ப்பு
 எங்களுக்கு ஏது குறை? என்றனர்,
 உணவு தர தாவரம்
 உயிர் காக்க தண்ணீர்—இரண்டைத்தவிர
 வேறொன்றும் அறியோம் “

 “ இயற்கைக்கு மாறாக—நீங்களோ
  அனைத்தையும் அழிப்பதும்
  சாதி, மத பேதங்களால்
  சந்நியாசிபோல வாழ்வதும்—அடுத்தவர்க்குக்
  கொடுத்து உதவாமல்
  கெடுத்து வாழ்வதால் உங்களிடம்
  குறைகள் அதிகமுண்டு “ என்றனர்
  மறுக்க எனக்கு மனமில்லை

  

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

வஞ்சிக்கலாமோ!




தீங்கிழைத்தவரை
தீர்த்துக்கட்ட எண்ணும்
மனித சாதியை
மதிக்காமல்
கேடு விளைவிக்கும்
கெட்டவனோ நீ,
இருந்தும் உன்னை
இதுவரை வழியின்றி
அழிக்காதிருக்கும்
அவர்களின் துயரை நீ
அறியாயோ!

மழை பெய்தா
மனங்குளிரும்
மகராசன் நீயும்
கூட வந்தா
நெஞ்சு படபடக்கும்,
நினவுக்கு வரும்
குப்பையெல்லாம்
குன்றுபோல
காட்சி தரும்
கையிலே பணமில்ல
கலைவது எக்காலமோ!

தடுமாறும்போது
தத்துவம்
தலை தூக்கும்,
இல்லாதோர்க்கு
இலவசமா சாவைத்தந்து
வாழும் டெங்குவே,
உன்னை அழிக்காமல்
வாழவைத்தவரை
மறக்கலாமோ!
மக்களை நீயும்
வஞ்சிக்கலாமோ!