சனி, 23 மார்ச், 2019

மன்னித்து அருளினார்




கோவில் வளாகத்தில்
கூடி இருக்கும் பக்தர்கள் முன்
சிவனடியார்  ஒருவர்
இறைவனின் சிறப்பு பற்றி
சொற்பொழிவு ஆற்றும்போது

நரகாசூரனைப் போல்
நாத்திகன் ஒருவன்
முட்டாள்என்று எழுதி
துண்டு காகிதமொன்றை
அடியாருக்கு அனுப்பி வைத்தான்

கிடைத்ததும் சிவனடியார்
கண நேரம் அமைதியானார்
கடிதம் பற்றி சொன்னார்
கடிதம் எழுதி விட்டு
கையெழுத்து போட

மறப்பவர்கள் மத்தியில்இவர்
கையொப்பமிட்டு
கடிதத்தை எழுதாமல்
கொடுத்து அனுப்பி இருக்கிறார்,
என்ன கவலையோ அவருக்குஎன்றார்

தவறிழைத்தவன்
தலை காட்ட முடியாமல்
தலை மறைவானான்,--அவனை
அவமானப்படுத்த மனமின்றி
அடியார் மன்னித்து அருளினார்.


கொடுமையா? பெருமையா?




மனிதர்களாக
மண்ணில் பிறப்பெடுத்தும்
மானுடமே மதிக்கலையே,
ஊருக்கு வெளியே
வயக்காட்டு பக்கமா
வசிக்க சொல்லி
ஒதுக்கி வைத்தால்
ஒட்டுமா மனித உறவு?

கடின உழைப்பால்
கால் வயிற்றை நிரப்ப கூழோ,
கஞ்சியோ, கிடைத்துவிடும்அதனால்
கையேந்துவதுமில்லை
குரல் கொடுப்பதுமில்லை,
இயந்திரங்கள் கூட ஏமாற்றி
இவர்கள் பணியை , தாங்கள்
செய்ததாய் கணக்கில் காட்டும்

மானுடக் கழிவுகளை
மனிதர்களே எடுத்து அகற்றி
மக்கள் நலம் காக்கும்
மாந்தர்களைகேவலம்
மனிதர்களாகக்கூட
மதிக்காதது, வெட்கக்கேடு!
மனித இனத்துக்கே
மாபெரும் துரோகம்

கொத்தடிமையாய் வாழும்
கீழ் சாதி மக்கள்
கால் வயிற்று பசிபோக்க
கழிவுகளின் கல்லறையில்
கால் பதிக்கும் மனித இனம்
வாழ வழி தேடி வந்து
விஷவாயுவுக்கு உயிரை தரும்
உறவுகள் சந்தியிலே நிக்கும்

பாரதத்தில் பிறந்ததற்கு
பெருமைபட்ட நாம்,
பாரபட்சம் பார்க்காம
பண்போடு பழகலையே!
உலகை சாக்கடையாக்கும்
ஊழல் சாதியை ஒழிக்காம,
கீழ் சாதியென ஒதுக்கினோமே
கொடுமையா? பெருமையா?



சனி, 9 மார்ச், 2019

அனைத்தும் சிறப்புப்பெறும்




உள்ளத்திலிருந்து
ஊற்றெடுக்கும் அன்புக்கு
ஆயிரம் பெயர்களிருந்தாலும்
ஏழைகளிடம் தான்
எப்போதும் நிறைந்திருக்கும்,
அதுபோல அறிவு
அறிஞர்களிடம் தான் அதிகம்
அடைக்கலமாகும்

உனது அறிவீனத்தை
உண்மையாக நீ
உணர்ந்திருந்தால்
அது தான் உனக்கு
அறிவைப் பெற முதல்படி,
அறிவின் எதிரில் என்றும்
அறியாமை தலை கவிழும்

அறிவுதான் முக்கியம்
அநுபவம் தேவையில்லையென
இளைஞர்களும்,
அநுபவம் இருந்தால் போதும்
அறிவு முக்கியமில்லையென
முதியவர்கள்  நினைப்பதற்கும்
மூளைதானே காரணம்

உணர்ச்சி அறிவை
வெல்வது இயல்பு,
உணர்ச்சியை அறிவால்
வெல்வதுதான் சிறப்பு,
அறிவே  இன்பம், அறிவே ஆற்றல்   
அறிவே அணிகலனென
அனைத்துக்கும் பொறுப்பு

அறிவு மனிதனை
மானுடத்தன்மையிலிருந்து
மேலும் உயர்த்த வேண்டும்,
இதயத்தோடு கலக்க வேண்டும்
சிந்திக்க வைக்க வேண்டும்
அப்போதுதான் செயல்பாடு
அனைத்தும்  சிறப்புப்பெறும்        

சனி, 2 மார்ச், 2019

மறையாது, தீராது





பசியால் அழும்
பச்சிளம் குழந்தையொன்று
அதன் தாயை நினைத்து
அழுவதுபோல்
வீசிய கஜா புயலால்
வேரோடு வீழ்ந்த வாழ்வாதாரம்,
பறிபோனதால் ஊர்மக்கள்
புலம்பி அழுததும்

தாயில்லாதபோது குழந்தை
தன் விரலை சூப்பும்
உமிழ்நீர் சுரந்து,குழந்தையின்
வயிற்றுக்குள் போவதுபோல்
காக்கவேண்டியவர்கள்
கண்ணில் படாதபோது
கலங்கித்தவித்த ஊருசனம்
கஞ்சித்தொட்டி திறந்து
கால் வயிற்றை நிரப்பியதும்

பசி கூடக்கூட  குழந்தை
பாலுக்கு அழுவதுபோல்
ஒன்றுமேயில்லாம ஏழைகள்
உயிரைக் காக்க போராடுவதும்
மீண்டும் மீண்டும்
மீளவழி தேடுவதும்
மீட்பின் இன்பம் கிட்டும் வரை
மக்களின்  பசியும், போராட்டமும்
மறையாது, தீராது.