திங்கள், 15 ஏப்ரல், 2019

கடைசி வரை கைவிடாது




மேடையில் முழங்கும்
முடி சூடா வாசகங்கள்
வேலை முடிந்தது போல்
வீதியிலேயே விட்டு விலகும்

உதிரும் சொற்களெல்லாம்
உதிரத்தை உசுப்பினாலும்
உயர்த்தாதென மனம் அறியும்
உடல் வனம் புக துணியும்

மண்ணும், தாவரமும்
மனித பசிக்கு வழிகாட்டும்,
இயலாதபோதுதன்னோடு
அரவணைத்துக்கொள்ளும்

சுதந்திரம் சுவாசமாகும்காடு
சொர்க்கமாகும்
விலங்குகளும், பறவைகளும்
உற்ற உறவாகும்

காசின்றி தாகம் தணிக்கும்
காட்டு நீரெல்லாம்,
அரசியல், சாதி சாக்கடைகள்
இங்கு ஏதுமில்லை.

முற்றும் துறந்த மனதுக்கு
பற்றுமில்லை, பகையுமில்லை
நாட்டு மாந்தரைப்போல்
காட்டு விலங்குகள் வஞ்சிக்காது
கடைசி வரை கைவிடாது.

கர்ப்பத்தின் கனிகள்





பஞ்சத்திற்கு பஞ்சமில்லா நாடு
புவியில் பாரத நாடு
பஞ்சம் தலைவிரித்தாடிய காலமது,
பதினாறு பிள்ளைகள்
பெற்ற தாய்க்கு பெரு வாழ்வு இல்லை
சாப்பிடக்கூட சட்டிகள் கிடையாது

அனைத்து பிள்ளைகளுக்கும்
அன்றாடம் கஞ்சி தான் உணவு
பதினாறு குழிபறித்து
பதினாறிலும் கஞ்சி ஊற்றுவாள்
பிள்ளைகளுக்கு போக
பெற்றவளுக்கு மீதம் இருக்காது

அப்போதெல்லாம்
அந்த பதினாறு குழிகளையும் துளாவி,
அதில் கிடைப்பதை உண்பாளாம்
அந்தத் தாய்
அவளின் கால்வயிற்றுக்குக் கூட
அது காணாது

அந்நேரங்களில்
அந்த அன்னை நினைப்பளாம்
இன்னும் இரண்டு பிள்ளைகள்
அதிகம் இருந்தால்
இன்னும் கொஞ்சம் கஞ்சி
கிடைக்குமே என ஏங்குவாளாம்

குறைவில்லாக்
குழந்தை செல்வம் கொண்டவளுக்கு
வறுமையிலும் எவ்வளவு
வளமான எண்ணம்?—இது
கர்ப்பத்தின் கனிகள், கடவுள்
கொடுத்ததெனக் கருதிய காலமது.


ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ளவரை இருக்கலையே!




வீட்டுக்கு வந்தபோதுநீ
விழுந்து கிடக்கையிலே
உள்ளம் துடிச்சுடுச்சு
உடம்பெல்லாம் வேர்த்துடுச்சு,
உள்ளூரு மருத்துவ மனையில்
உனை சேர்த்து
உறங்காம விழித்திருந்தேன்,
ஊருசனம் உறங்கையிலே
உலுக்கிய உன் நினைவு
உலகம் விழிக்கையிலே
உன்னுறக்கம் கலையலியே,
உள்ளத்தில் நிறைந்தவளேநான்
உள்ளவரை இருக்கலையே!