சனி, 18 ஜனவரி, 2020

மொழி தெரியலையே !




அப்பா, அம்மா இருவருக்கும்
அவ்வப்போது
சின்னச் சின்ன சச்சரவுகள்
நிகழும், முகம் கருக்கும்
அனல் பறக்கும்

அப்போது விருந்தினர்
யாராவது வீட்டுக்கு வந்தால்
அவர்கள் இருவரும்
அன்பு நிறைந்த தம்பதியராய்
காட்டிக் கொள்வார்கள்

அம்மாவின் அதட்டலும்
அப்பாவின் அடங்கலும்
ஆச்சரியம் தரும்,
காலைப் பொழுதில்
காகமொன்று விடாமல்
கத்திக் கொண்டிருந்ததால்

விருந்தாடி யாராவது
வீட்டுக்குக் கட்டாயம்
வருவார்கள் என்று
அம்மா நம்பினார்கள்
அப்பாவுக்கு அரைகுறை மனது

காக்கை சொன்னது போல்
காரைக்கால் மாமா வந்தார்,
காக்கை மொழி அறிந்த
அம்மாவுக்கு ஏனோ
அப்பா மொழி தெரியலையே!


அதைவிட பெருமையல்லவா !




பந்தியில் அமர்ந்து
பரிமாறும் உணவுகளை
வெட்கப்படாமல்
வயிறார உண்ட பின்னும்
படைத்து, பரிமாறுபவனை
பார்த்து, நன்றி ஒன்று
சொல்லத்தோனலையே !
சொன்னதும் இல்லையே !
வயிறு நிறைந்துவிட்டால்
வேறு ஏதும் தோனாதோ !

சனிக் கிழமைகளின்
சாயந்திரப் பொழுதுகளில்
நானும், நண்பர்கள்
நான்கு பேரும் ஒன்றுகூடி
அய்யர் இட்லிக் கடையில்
இரவு நேர உணவருந்தி
இரண்டாவது காட்சி படத்திற்கு
போவது வழக்கம்,
இட்லி, சாம்பாரின் ருசிக்கு
அன்று அடிமை நாங்கள்

அப்படி ஒரு கைராசி
அந்தக்கடை சமையல்காரருக்கு
நாட்கள், வருடங்களாகி
நகர்ந்து கொண்டிருந்தன
நண்பர்கள் பிரிந்தார்கள் ,
பலஊர்களுக்குபின் எனக்கும்
பூனேவுக்கு மாற்றலானது
தனித்து வந்து சேர்ந்தேன்
ஒருநாள் இரவு
உணவருந்த போனபோது

இங்குள்ள கடை ஒன்றில்
இட்லி சாப்பிட்டேன்
சர்வர் வந்தார், பில்  தந்தார்,
சிறிது நேரம் அவரை பார்த்த நான்
சிவராமனா நீங்கள்,
ஒரிஸ்ஸாவில் முன்பு
வேலை பார்த்தீர்களாஎன்றேன்
இன்ப அதிர்ச்சி அவருக்கு
எப்படிக் கண்டுபிடித்தீர்கள்
என்று நெகிழ்ந்தார்

இருபது வருடங்கள் கடந்தாலும்
இன்று இங்கு சாப்பிட்ட
இட்லியின் அதே ருசிதான்
உங்களை எனக்குக்
காட்டிக்கொடுத்தது என்றதும்
கண் கலங்கினார்நன்றி
அவருக்கு அன்று முக்கியமல்ல,
இன்று அவரை நினைக்க வைத்த
அவருடைய கைராசிக்கு
அதைவிட பெருமையல்லவா !