புதன், 29 அக்டோபர், 2014

விலை போகிறது.


உயிரைவிட மேலானது

எதுவென்று ஆசிரியர்

கேட்டு முடிப்பதற்குள்

 

மாணவன் எழுந்து

சொன்னான்

உயிரை விட மேலானது

 

எங்களின் தெய்வம்

மாண்புமிகு

தலைவர் என்றான்

 

ஆசிரியர் நிலைகுலைந்தார்

தன் கண்ணத்தில்

யாரோ அறைந்ததுபோல்

 

தமிழகம் தலைகவிழ்ந்தது

தற்கொலை இங்குதான்

விலைபோகிறது.

 

நீ வஞ்சகக் கடல் தானே.


உண்ண உணவின்றி

உருக்குலைந்து போனவரை

பெரும் அலையால வந்தடித்து

வாழ்க்கையைக் கெடுக்கின்றாய்

 

காற்றோடு உறவாடி

கடலலையை தூதனுப்பி—நீ

அடிக்கும் கூத்துகளால்

மானிடரைக் கொல்கின்றாய்

 

மீனவக் குடும்பமென

கடலோரம் வாழ்பவரைக்

கரையேறி மேல வந்து

கூண்டோடு அழிக்கின்றாய்

 

பயணம் செய்கின்ற

பன்னாட்டு மக்களையும்

உன்னோடு சேர்த்தனைத்து—அவர்

உயிரை எடுக்கின்றாய்

 

உப்பு நீரால முகம் கழுவி

பொங்கிவரும் நுரையாலே

ஒப்பனை செய்து—அழகாய்

நீ காட்சி தந்தாலும்

 

கெடுப்பதே நோக்கமென

கொள்கையாய்க் கொண்டு

படைத்த உயிர் அத்தனையும்—சாகடிக்கும்

நீ வஞ்சகக் கடல் தானே.

 

அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்


குளிருக்கு பயந்து

குடிபெயர்ந்த மேகம்

மழையாய் உருமாற

 

பெய்த மழையோ

பெரு வெள்ளமாகி

ஊரையே மூழ்கடித்ததும்

 

தெருவோடு ஊரும்

பயிரோடு வயலும்

பாழாய்ப் போனதும்

 

வழியற்று வாடும்

ஏழையின் வயிற்றில்

மண்ணள்ளிப் போட்டதும்

 

மழையின் சிறுதுளி

நதியாகிக் கடலாகி

ஒன்று படுவதுபோல்

 

ஒற்றுமையாய் வாழக்

கற்று கொடுத்து—ஊரையே

சிதறிட செய்ததும் முறையோ?

 

வெள்ளப் பெருக்கால

வெளியேறி ஊர்மக்கள்

வேதனையில் மூழ்கிக்கிடக்க

 

மழையில் விளையாடி

மகிழும் சிறுவனிடம்—மகிழ்வின்

காரணம் கேட்டேன்

 

மழை மட்டும் தான்

என்னை தொட்டு பேசுமென்றான்

ஒன்றும் சொல்லாதீர்கள்

அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்.

 

 

 

வியாழன், 16 அக்டோபர், 2014

இறைவனின் நாடகமோ!


வசித்த வீடும்

வாழ்ந்த ஊரும்

விடுபட்டு

பிரிந்து போனதும்

 

குறும்புகள் பல

செய்த பிள்ளை

பொருள் தேடி

வெளிநாடு சென்றதும்

 

செல்லமா சீராட்டி

வளர்த்த பொண்ணு

மணமுடித்து

மணாளனோடு போனதும்

 

பழக்கப்பட்ட

வாழ்க்கை முறை

முதுமையில்

மாறுபட்டு போனதும்

 

மாற்றங்கள் ஒவ்வொன்றும்

பிரிவைத் தந்து

மனதை வருத்திய

காட்சி அனைத்தும்

 

வாழ்க்கையின்

இறுதி பயணத்துக்கு

ஒத்திகை பார்க்கும்

இறைவனின் நாடகமோ!

என்ன செய்ய?


நீரு வருமின்னு

நிலமெல்லாம் உழுது

விதை விதைத்தோம்

நீரும் வாராம

மழையும் பொழியாம

நிலமும் வயிறும் காய

கடனும் உழைப்பும்

வீணாச்சு.

 

புள்ள குட்டி

வாழவேண்டி

கட்டுமரமேறி

கடலுக்கு போனோம்

மீன் பிடித்துத் திரும்பையிலே

படகும் மீனும் பறிபோக

உதையும் சிறையும்

உறவாச்சு.

 

பண்டிகை வருவதாலே

பட்டாசு தொழிலில்

முதல் போட்டு

பணங்காசு தேடயிலே

சீனத்து வெடி வந்து—எங்க

உழைப்பும் உயிரும் சீரழிய

வாழ்க்கையும் வணிகமும்

பாழாச்சு.

 

மனசாட்சி இல்லாம

கள்ள வழியிலே

பொருள்  சேர்க்கும்

மனிதரெல்லாம்

வரியும் கட்டாம

வறியவர்க்கும் கொடுக்காம

சிறப்பாத்தான்

வாழ்கிறார்கள்.

 

நல்ல மனசோட

காலம் முழுதும்

மாடாட்டம் உழைச்சாலும்

கடவுள் கூட

கருணை காட்டாம

கஞ்சிக்கும் கூழுக்கும்

கையேந்த வைத்தானே

என்ன செய்ய?

 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

எங்கிருந்து வரும்?


நீயும் நானும்

சேர்ந்திருந்தால்

உள்ளம்

உவகை கொள்ளும்

எனக்கும் பெருமை

கூடும்.

 

நீ மட்டும்

கொஞ்சம்

மக்களை

அரவணைத்தால்

உலகமே

உன் காலடியில்

 

நட்புக்கு

பாலம் அமைத்து

பாசம் கொள்ள

வைக்கிறாய்.

வணிகத்துக்கும்

வலு சேர்க்கிறாய்

 

நீர் கண்ட

நிலம்போல

நலம் பெறும்

மனதும் உடலும்

உனை இறையென

வணங்காதோ!

 

இன்று ஒன்றாய்

வசித்திருந்தும்

பெற்றோர்

பிள்ளைகளுக்கு

இல்லாத நேரத்தால்

இல்லாது போனாயோ!

 

பணம், படிப்பு

இரண்டை மட்டும்

தேடி அலையும்

மக்களுக்கு

புன்னகை

எங்கிருந்து வரும்?

கவலை படுகிறது.


காலை வாரும்

கபடி விளையாட்டு

அரசியலார்

ஆசிர்வாதத்தால்

தேசீய விளையாட்டென

தேர்வு பெற்று

பெருமையுற்றது.

 

மரமே மரத்தை

வெட்டக்

கோடாரியாவதுபோல்

ஆடுகளத்தில்

ஏமாறுவதும், ஏமாற்றுவதும்

காலை பிடிப்பதும்

மூச்சை விடவைப்பதும்

 

அரசியல், கபடி

இரண்டுக்கும்

பொதுவென்றாலும்

கபடியென்னமோ

தன்னோட பேரு

கலங்கப்பட்டதாய்

கவலை படுகிறது.

 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

புதுமைப் பெண்போல.


ஊருக்கு அருகில்

ஒரு ஊருணி

ஊருணி எங்கும்

தாமரைப் பூக்கள்

 

நீர் முழுதையும்

மறைத்து வைக்கும்

தலை விரித்து படுக்கும்

தாமரை இலைகள்

 

இலைகளோ

தண்ணீரின் அளவுபோல்

தாழும், எழும்—முன்னைய

குலமகள் போல்

 

இன்றோ

தாமரை இலைகள்

நீருக்கு மேலெழுந்து

தனித்து வாழ்கின்றன

 

படித்து உயர்ந்ததால்

பாசம் மறந்து

விவாகரத்து கோரும்

புதுமைப் பெண்போல.