சனி, 22 பிப்ரவரி, 2020

நீதி மன்றம் கிடையாது.





கணவன் மனைவி போல
கூடி வாழும் ஜோடிப் புறாக்களே
ஓர் எடுத்துக்காட்டு,
இணைந்து கூடு கட்டுவதும்
முட்டைகளை அடைகாப்பதும்
குஞ்சுகளை பாதுகாத்து
உணவூட்டுவதும்

பேடைக்கு நிகராக
ஆண் புறாவும் பங்கேற்பதும்
ஒன்று மற்றொன்றின் வரவை
ஆவலோடு எதிர்பார்த்து
காத்திருப்பதும் ஆச்சரியம்,
மானிட வாழ்க்கையோ
மாறுபடும் காலத்தால்—ஆனால்

காலம் காலமாய் மாறாமல்
கடைசி வரை சேர்ந்து வாழ்வது
வியக்க வைக்கும்
விசித்திரமல்லவா !
நல்ல வேளை , நாகரீக உலகில்
விலங்குக்கும் , பறவைக்கும்
நீதி மன்றம் கிடையாது



புன்னகை புரிகிறார்கள்




சாதாரண மனிதர்களுக்கு
சாப்பிட வசதியிருந்தால்
நகை, நட்டுக்கு ஆசைபடாமல்
நலமோடு வாழ
கிடைக்கும் வசதிகளை
இன்பமாய் அனுபவிக்க
நினைப்பார்கள்—அதுபோல
நடுத்தர வயதுடைய
ஒரு தம்பதியினர்

இளமை என்றும்
நிரந்தரமில்லையென
நினைத்து இருவரும் ஒன்றாக
முதுமையை வெல்ல
முயற்சி எடுத்தார்கள்,
நாள் தோறும் தவறாமல்
நடை பயணம் செய்து
நிம்மதி கொண்டார்கள்

முடிவில் பெரியவர்
தோற்று போனார்,
வெற்றி மனைவிக்கு
என்றும் இளமையோடு
பூமாலையுடன்
புன்னகை புரிகிறார்கள்
சுவற்றில் மாட்டிய
புகை படத்தில்.

சனி, 15 பிப்ரவரி, 2020

மீண்டும் வாழ




இந்திய மண்ணில்
இடுப்பு வலி  இல்லாமலேயே
ஆண் மனிதனுக்கும்
சிசெரியன் ஆப்பரேஷன்
அழிக்கவா ?  ஆக்கவா  ?
ஆண்டவனுக்கு தெரியாதா  ?

ஓருவாய் சோற்றுக்கு
வழியின்றி தவிக்கும் ஏழையின்
வயிற்றை கிழித்து
பிரசவிக்கும் கிட்னியை
விற்று வளம் பெறும்
விலை மா(ந்)தர்கள்

சோற்றுக்கு வழிதேடும்
சோகத்தின் வெளிப்பாடு
கிட்னியும் பட்டினியால்
கைவிட்டு இடம் மாறி
செல்வம் இருப்பவனிடம்
சேர்ந்து வாழும், வெட்கத்தை விட்டு

இடைத்தரகருக்கும்,
இதயமில்லா மருத்துவருக்கும்
இமயம் தொட்ட உணர்வு,
கிட்னி கொடுத்தவன் மட்டும்
மீண்டும் வாழ, எதை
விற்க எண்ணுகிறானோ  !


இலையைத் தின்னும்




துன்பத்தையும், துயரத்தையும்
தோளில் சுமக்கும்போதே
ஆலமர விழுதினைப்போல்
தாங்கிக்கொள்ள
சிறு வயதிலேயே பிள்ளைகளிடம்
சொல்லி வளர்த்தால்
பெற்றோரை கைவிடுமா
பிள்ளைகள்  !

சிவபெருமானுக்கும்
சிறு வயதில் சொன்னார்களோ 1
வாழும் மக்களின் நலம் காக்க
விஷத்தைத் தானுண்டு-- அமுதத்தை
பிறருக்குக் கொடுத்தான்
அதுபோல எருதையும்
தன் பிள்ளையென
சொல்லி வளர்த்தானோ !

தானியத்தை நமக்கு
தரும் எருதோ வைக்கோலை
தானுண்ணும்,
அரிசியை கொடுத்து விட்டு
உமியை எடுத்து கொள்ளும்
கவலைபடாது-- நமக்குக்
களைந்த அரிசியை தரும்
கழுநீரைக் குடிக்கும்

சமையல் முடிந்ததும்
சுடு சோற்றை நமக்கு தந்து
ஆறிய கஞ்சியைத்தான்
அருந்தும் எருது,
பண்பாடு குறையாம
பரிமாறும் சாப்பாட்டை
எல்லோருக்கும் தந்து விட்டு
எச்சில் இலையைத் தின்னும்



சனி, 8 பிப்ரவரி, 2020

மகுடம் சூட்டுவது





ஒத்தையடிப் பாதைகள்
ஊர்களை இணைத்து
ஒன்று சேர்த்த காலமது,
பக்கத்து ஊருக்கு பகலில்
பயணம் போனாலும்
பாதுகாப்பில்லாத காலம்

வீட்டில் வசிப்பவரை விட
வெளியிலிருந்து வருபவர்க்கு
உதவிகள் நல்கிடும்
உறங்கவும் இடம் தரும் ,
பிள்ளைகள் ஒன்றுகூடி
படிக்கவும் மடி விரிக்கும்

ஊர் விசேஷத்திற்கு வந்த
வெளியூர்க்காரர்களை
முன்பின் அறிந்திராதபோதும்
மழை, வெய்யிலுக்கு
ஒதுங்க இடம் தந்து
இளைப்பாற வைக்கும்

நம்மை ஒன்றுபடுத்தும்
நல்ல பண்பாட்டின் சின்னம்
முன்னோர்கள் உருவாக்கியது
மனித நேயத்துக்கு
மகுடம் சூட்டுவது
திண்ணை தான் அது.

கைவிட மாட்டேன்





சூடா  இருக்கிறாய்
சொல்லி வைத்ததுபோல்,
நல்ல வாசம்
நெஞ்சு தவிக்குது
இறுக்கமா உன்னை
பிடித்து இருக்கிறேன்,
ஆடாமல் உதட்டோடு
ஆசையாய் ஒரு முத்தம் தந்தால்
அகமகிழ்வேன்,
உனக்கு நான் அடிமை
எனக்கு நீ அடிமை,
காலமுழுதும் 
காப்பியாய்  நீ இருந்தால்
கண்ணே உன்னை
கடைசி வரை
கைவிடமாட்டேன்.


சனி, 1 பிப்ரவரி, 2020

காலம் தண்டிக்கும்




எதுவும் என்னை
அசைக்காது
இறைவன் என்னருகில்
இருக்கும் வரை
என்ற உறுதி
இறுதியல்ல
உணர வைத்தது
காற்றும், நீரும்
கைகோர்த்து
ஒன்றாக வந்து
உயிரையும், உடலையும்
இரண்டாகப் பிரித்த
சுனாமியும்,
கதரினாவும் தான்,
கெடுத்தவர்களை ஒரு நாள்
காலம் தண்டிக்கும்




கட்டிடமாய் எழுகிறதோ !




புவியில் தோன்றிய
உயிர்கள் அனைத்தையும்
பெற்றவளைப் போல
பத்திரமா பாதுகாக்க
இயற்கை, வானத்தை
அன்னையாக்கி
தாய்ப்பாலென மழையைத்
தந்து காத்திட்ட
இயற்கையின் கருணைக்கு
ஈடு, இணையேது

காலம் மாறியது
காத்து வந்த இயற்கை
கண்டு கொள்ளாததால்,
குடிக்கும் நீருக்கும்
கையேந்த வைத்தது,
ஓடிய ஆறு படுக்க
விளை நிலம் கருக
உயிர் வாழ உழவன்
வயல்களையெல்லாம்
விற்று,பசிபோக்கினான்

கைமாறிய நிலம்
பயிரைத் தொலைத்து
பாலை வனமானது
கட்டிடம் ஒன்று
கம்பீரமாய் எழுந்தது
கண்ணுற்ற விவசாயி
கண் கலங்கினான்,
பசியால் வாடும் விவசாயி
பட்டினியால் சாவானென
கல்லறை ஒன்று
கட்டிடமாய் எழுகிறதோ !

காட்சி தருகிறதோ !




மரம்,செடி,கொடிகளில்
மலரும் பூக்களின் மீது
மையல் கொண்டு
மனத்தை பறிகொடுத்து
காமுகனைப்போல காற்று
கை பிடித்து இழுத்து
கண் கலங்க வைத்து
கை விட்டு போனதால்
இளமையில் கலங்கமென
கீழே விழுந்து
உயிரை விட்டது பூக்கள்

தண்ணீரில் பூத்துத்
தலை காட்டும் பூக்களுக்கு
நீரே துணையாயிருந்து
நன்னடத்தைக்குக் கலங்கமில்லாம
காத்து அருளியதால்
கயவர்கள் யாரும்
அருகில் வர அஞ்சினரோ !
அதனால் தான் எப்போதும்
இளமையோடு இருக்க—மீண்டும்
இதழ்களைக் குவித்து
அரும்பாகக் காட்சி தருகிறதோ !